அண்மைய செய்திகள்

recent
-

“இலங்கையில் எப்போது குடியேறுவார் ரங்கநாதர்?”


இலங்கையில் பள்ளிகொள்ள வேண்டிய ரங்கநாதர், நீண்டகாலமாக மாமல்லபுர மண்ணிலேயே காத்திருக்கிறார். அவர் இலங்கை சென்று பள்ளிகொண்டால்தான், யுத்தபூமியான இலங்கை அமைதிப்பூங்காவாக மாறும் என்ற எதிர்பார்ப்பில் இந்தியா மற்றும் இலங்கையில் வாழும் ஆன்மிக அன்பர்கள் காத்திருக்கின்றனர். இதென்ன புதுக்கதை என்று விசாரிக்கத் தொடங்கினோம்.

இதுகுறித்துப் பேசிய இலங்கைவாழ் ஆன்மிக அன்பர்கள் சிலர், புராணக்கதையை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர். ‘‘சீதையை மீட்பதற்கு உதவிய விபீஷணன், ராமரின் முடிசூட்டு விழாவைக் காண அயோத்திக்கு வந்தார். அப்போது, தான் பூஜித்துவந்த ரங்கநாதர் சிலையை அவருக்குக் கொடுத்தார் ராமர். இலங்கைக்கு அதை எடுத்துச்செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் ஓய்வெடுக்க நினைத்த விபீஷணன், ரங்கநாதர் சிலையை கீழே வைத்தார். மீண்டும் புறப்படும்போது தரையிலிருந்து ரங்கநாதர் சிலையை எடுக்கவே முடியவில்லை. கலங்கிப்போன விபீஷணனுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த தர்மசோழன் என்கிற அரசன் ஆறுதல் கூறினார்.

‘காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பதே தம் விருப்பம்’ என்று சொன்ன ரங்கநாதர், விபீஷணனைத் தேற்றுவதற்காக இலங்கையை நோக்கிப் பள்ளிகொண்டு அருள்வதாகக் கூறினார். அந்த இடத்தில், தர்மசோழன் கோயில் கட்டி வழிபட்டார். அந்த இடமே இன்றைய ஸ்ரீரங்கம். அதேசமயம், ரங்கநாதருக்கு இலங்கையில் கோயில் கட்டுவதற்காக மீண்டும் முயற்சிகளை மேற்கொண்ட விபீஷணன், அவை நிறைவேறா மலேயே இறந்துபோனார். இன்றுவரை போர் நிகழும் பூமியாகவே இலங்கை இருப்பதற்குக் காரணம், இலங்கையில் பள்ளிகொள்ள வேண்டிய ரங்கநாதர், இங்கே இருப்பதுதான்’’ என்கின்றனர்.

ரங்கநாதர் சிலை
இந்தப் புராண நம்பிக்கை, இலங்கையில் வாழும் ஆன்மிகவாதிகள் மனதில் பன்னெடுங்காலமாக நிலைத்து நிற்கிறது. சுமார் 50 ஆண்டுகளாக அமைதியின்றித் தவித்துவரும் இலங்கையின் ஆட்சியாளர்கள் மனதிலும், இந்தப் புராண நம்பிக்கை குடிகொண்டிருக்கிறது. அதன் விளைவாக, 1999-ம் ஆண்டு இலங்கைப் பிரதமரான சந்திரிகா குமாரதுங்கா, மாமல்லபுரம் சிற்பக்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் கணபதி ஸ்தபதியிடம் இலங்கை கண்டியில் ரங்கநாதருக்கு கோயிலைக் கட்டித் தருமாறு கேட்டுக்கொண்டார்.

மேற்கொண்டு நடந்தவற்றை மாமல்லபுர வட்டாரத்தில் இவ்வாறு விவரிக்கின்றனர்...

‘‘இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டு முன்பணமும் கொடுத்தது இலங்கை அரசு. கணபதி ஸ்தபதியும் ஆர்வத்துடன் தன் கைப்பணத்தையெல்லாம் முதலீடு செய்து இலங்கையில் ஆலயம் எழுப்பும் பணியை ஆரம்பித்தார். 16 அடி நீளம் மற்றும் 5 அடி உயரத்தில் ஆதிசேஷன் மேல் ரங்கநாதர் துயிலும் திருக்கோல கருங்கல் சிற்பம் மாமல்லபுரம் அருகே உள்ள கணபதி ஸ்தபதியின் சிற்பக் கூடத்தில் உருவாக்கப்பட்டது.

2002-ம் ஆண்டு தேர்தலில் சந்திரிகா தோற்றார். ராஜபக்சே ஆட்சிப்பொறுப்புக்கு வந்தார். அதன் பிறகு கோயில் பணியையும் ரங்கநாதர் சிலையையும் இலங்கை அரசு கண்டுகொள்ளவில்லை. பெருமளவில் செலவு செய்திருந்த ஸ்தபதி, மிகவும் மனவருத்தத்துக்கு ஆளானார். வேறுவழியின்றி தன்னுடைய இடத்திலேயே சிலையை மண் மூடி பாதுகாத்து வந்தார்.

அரசு - தட்சிணாமூர்த்தி ஸ்தபதி
2011-ம் ஆண்டில் கணபதி ஸ்தபதி காலமானார். அவருடைய விருப்பப்படி தொடங்கப்பட்ட அறக்கட்டளை, இந்தச் சிலைகுறித்து வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. 2011-ம் ஆண்டில் இந்தியா வந்த ராஜபக்சே தரப்பினர், ‘மீதிப்பணத்தைக் கொடுத்து சிலையை எடுத்துக்கொள்கிறோம்’ என்று கூறிச் சென்றனர். ஆனால், அது நடைபெறவில்லை. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது’’ என்றார்கள் அவர்கள்.

வழக்கை நடத்திவரும் அறக்கட்டளையைச் சேர்ந்த வழக்கறிஞர் அரசு நம்மிடம், ‘‘எங்களுக்கு இழப்பீடு அளிப்பதுடன் இலங்கையில் மீண்டும் கோயில் பணிகள் நடக்க வேண்டும். இதனால், அங்கு நிரந்தர அமைதி ஏற்பட வேண்டும். இதை தற்போது இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் செய்ய வேண்டும்’’ என்றார்.

இந்த நம்பிக்கை குறித்து மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயரிடம் பேசியபோது, ‘‘ஆன்மிகத்துக்கும் அமைதிக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. மாமல்லபுரத்தில் உள்ள ரங்கநாதர் சிலையை இலங்கைக்குக் கொண்டு செல்வதற்கு ஆன்மிகவாதிகளும் ஆட்சியாளர்களும் ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், இலங்கை நிச்சயமாக புண்ணிய ஸ்தலம் ஆகும்.

ஒரு வீடு கட்டுவதற்கு வாஸ்து சாஸ்திரங்கள் பார்ப்பதைப் போன்று, சிலைகள் செய்வதற்கும் ஏராளமான ஆன்மிக விஷயங் களைக் கவனிக்க வேண்டும். அந்த வகையில் மாமல்லபுரத்தில் உள்ள ரங்கநாதர் சிலை, இலங்கையில் உள்ள சூழல், தட்பவெப்பநிலை உள்ளிட்டவற் றுக்கு ஏற்ற வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை இலங்கைக்குக் கொண்டு சென்றால் அங்கு நிச்சயம் அமைதி நிலவும்; பிரச்னைகள் குறையும்; விவசாயம் செழிக்கும்; போர் போன்ற பதற்றமான சூழல் நீங்கி, மக்கள் அமைதியாக வாழ வழி பிறக்கும்’’ என்றார்.

தற்போது சிலையைப் பராமரித்துவரும் பெருந்தச்சர் அவையத்தின் தலைவர் தட்சிணாமூர்த்தி ஸ்தபதியிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ‘‘இது தொடர்பான வழக்கு ஒன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, இலங்கை இந்தச் சிலையை எடுத்துக்கொள்ள வேண்டிய உதவிகளைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை மட்டும் நான் சொல்லிக் கொள்கிறேன்’’ என்றார்.

‘‘இலங்கையில் பதவியேற் றுள்ள புதிய அரசு, ஆன்மிகவாதி களின் இந்த வேண்டுகோளைப் பரிசீலிக்க வேண்டும். இந்த ஆண்டிலாவது ரங்கநாதர் இலங்கையில் கோயில்கொண்டு, அங்கு அமைதி திரும்ப வேண்டும்’’ என்று விரும்பு கிறார்கள் இந்திய -இலங்கைவாழ் ஆன்மிகவாதிகள்.

‘‘காலம்தான் ஐயங்களை நீக்கும்!’’

“இலங்கையில் எப்போது குடியேறுவார் ரங்கநாதர்?”
‘‘மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்ட ரங்கநாதர் சிலை இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படாமல் இருப்பது, அரசியல் மாற்றங்களால் ஏற்பட்ட நிகழ்வு. அதை ராமாயண கதாபாத்திரமான விபீஷணன் மற்றும் ஸ்ரீரங்க ஆலயத்துடன் முடிச்சுப்போட்டுப் பேசுவது சரியல்ல’’ என்ற விமர்சனத்தையும் சிலர் முன்வைக்கின்றனர். இலங்கையைச் சேர்ந்த ஆன்மிகப் பேச்சாளர் கம்பவாரிதி ஜெயராஜிடம் இதுகுறித்துப் பேசினோம்.

‘‘ராமாயண காவியத்தில் இல்லாத செய்திகள் பல, புராணங்களில் ஆங்காங்கே பதிவாகியுள்ளன. அத்தகைய பதிவுகளில் ஒன்றுதான் இதுவும். இந்த நம்பிக்கை பற்றி வரையறுத்து என்னால் ஏதும் சொல்ல முடியாது. ஆனால், அந்தச் செய்தியை முற்றாக நிராகரிக்கவும் முடியவில்லை.விபீடணனார் பெற்ற சிலையும் இலங்கைக்கு வராமலேயே போயிற்று. அதன் பிறகு அதற்கு ஒப்ப செய்யப்பட்ட சிலையும் இன்று வரை இலங்கை வந்து சேராமலேயே இருக்கிறது. இதன் பின்னணியில் ஏதேனும் உண்மை இருக்குமோ எனும் கருத்தையும் என்னால் முற்றாக நிராகரிக்க முடியவில்லை. நம் புத்தியைக் கடந்த பல விடயங்கள் இயற்கை அவதானங்களால் அறியப்படுகின்றன. அத்தகைய கணிப்புகளில் ஒன்றாகவும் இந்த நம்பிக்கை இருக்கலாம்.

இதை வெறும் மூடத்தனம் என்று சிலர் சொல்லலாம். ஆனால், நம் தமிழ்ப் பெரியோர்கள் ஓர் உண்மையை நிறுவுவதற்கான பத்து பிரமாணங்களில் ஐதீகப் பிரமாணத்தையும் ஒன்றாகக்கொள்கின்றனர். செவிவழிச் செய்தியால் நம்பப்படும் ஓர் உண்மையையே `ஐதீகப் பிரமாணம்’ என்கின்றனர். நமது தமிழ்மரபில் இந்த ஐதீகப் பிரமாணம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், மேற்சொன்ன ஸ்ரீரங்கநாதர் சம்பந்தமான ஐதீகத்தையும் என்னால் முற்றாக நிராகரிக்க முடியவில்லை. காலம்தான் இந்தச் செய்திகள் பற்றிய ஐயங்களை நீக்கும் எனக் கருதுகிறேன்’’ என்றார்.

“இலங்கையில் எப்போது குடியேறுவார் ரங்கநாதர்?” Reviewed by Author on March 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.