அண்மைய செய்திகள்

recent
-

காரில் வந்தவர்கள் தமிழர்கள் என்பதால் பெற்றோல் ஊற்றி எரித்தனர் -83 ஜூலைக் கலவரத்தில் இடம்பெற்ற திடுக்கிடும் உண்மைச் சம்பவம்

1983 ஜூலை 20களின் பிற்பகுதியில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட வேளை சொல்லொணா துயரங்களை தமிழர்கள் அனுபவித்தனர். அந்த வகையில் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தனது அனுபவத்தை இங்கே விபரிக்கிறார். வெளியே ஏதோ சத்தம் கேட்டுத்தான் நான் கண் விழித்தேன். அறைக்கதவைத் திறந்து வெளியே – கீழே ஓடிவந்தேன். லொட்ஜின் மனேஜர் வாசலின் இரும்புக் கதவைப் பூட்டிவிட்டு சாவித் துவாரத்தின் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவரது தோளில் கைவைத்துத் திருப்பினேன். “என்ன சத்தம் ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டேன். “பொரளை பிரச்சினைதான். வண்டி வண்டியாக ஆட்கள் வந்து தமிழர்களின் கடைகளை தேடித் தேடிக் கொளுத்துகிறார்கள்” என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

 “என்ன.. என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன். நான் தங்கியிருந்த அந்த விடுதியிலுமே ஆறேழு தமிழர்கள் இருக்கிறார்கள். “அப்போ இங்கே இருக்கும் நவம், லக்ஸ்மன் எல்லாரும்?” “அவர்களை விடியற் காலையிலேயே இடத்தைக் காலி பண்ணச் சொல்லி விட்டேன். வெள்ளவத்தை பக்கமாக ஓடிப்போய் எங்காவது பாதுகாப்பாக இடம் தேடித் தங்கிக் கொள்ளச் சொல்லிவிட்டேன்.” ஆசுவாசமாக இருந்தது. “இப்போது லொட்ஜில் நாங்கள் சிங்களவர்கள் மட்டும்தான் நிற்கிறோம். இனிப் பிரச்சனையில்லை. யாரும் வர மாட்டார்கள். நீங்கள் உங்கள் அறைக்குச் சென்று பூட்டிக் கொள்ளுங்கள். வெளியே ஒன்றும் போக வேண்டாம். எல்லாம் சரி வந்ததும் சாப்பாட்டுக்கு ஏதும் வழி பார்க்கிறேன்” நான் அறைக்கு வந்து கதவை நன்கு தாளிட்டுக் கொண்டேன். கட்டிலில் வந்து அமர்ந்தேன். படபடப்பு போகவில்லை. அருகில் இருந்த மேசையை எடுத்து கதவுக்குக் குறுக்கே வைத்தேன். மேசையை அசைத்துப் பார்த்தேன். பாரம் குறைவாக இருந்தது. இரவு வீட்டுக்குப் போவதற்காக சூட்கேசை அடுக்கி வைத்திருந்திருந்தேன். அதையும் எடுத்து மேசைக்கு மேல் பாரமாக வைத்தேன்.

 மறுபடி கட்டிலில் வந்து அமர்ந்தேன். வெளியே ஆரவாரமான ஒலி கேட்டுக் கொண்டே பொரளை மயானத்தில் ஆரம்பித்த பிரச்சினை இந்தளவுக்கு வரும் என்று நான் நினைக்கவில்லை. நம் ஜனாதிபதி அதை சுமுகமாக தீர்த்து விட்டதாகவே நான் எண்ணியிருந்தேன். ரப்பர் எரியும் நாற்றமும் புகையும் ஜன்னலின் இடுக்குகளின் வழியே வந்தபடி இருந்தது. தமிழில் கதறும் சத்தங்கள் வலுத்தன. எனக்குத் தமிழ் தெரியாது. ஜன்னலை திறந்து பார்க்கலாமா? பயமாக இருந்தது. நான் இருந்த லொட்ஜ் காலி வீதியோடே இருந்த ஒரு சிறிய லொட்ஜ்தான். நல்ல வேளை, லொட்ஜின் பெயர் அமாலி. சிங்களப் பெயர். இல்லாவிட்டால் ஒவ்வொரு கதவாக உடைத்து இருப்பது யார் என்று பார்த்துத்தான் விட்டிருப்பார்கள். ஜன்னலைத் திறக்கும் துணிச்சல் வரவில்லை. ஜன்னலுக்கு மேலே இருந்த கிறில் துவாரம் வழியாக எட்டிப் பார்த்தேன். வீதியே கரும் புகையால் மூடப்பட்டு இருந்தது. உற்றுப் பார்த்தால் வீதியில் பிய்ந்து போன உடல் துண்டுகள் தெரிந்தன. தமிழ் பேசிய உடல்கள்.

 வீதியின் ஓரமாக இருந்த கடைகளில் நான்கைந்து கடைகள் பூட்டியது பூட்டியபடியே இருக்க, மீதிக் கடைகள் உடைக்கப் பட்டிருந்தன. தமிழ்க் கடைகள். ஒரு குழுவினர் வீதியில் போகும் வாகனங்களை மறித்து உள்ளே விசாரித்துக் கொண்டிருந்தார்கள். சிங்களவர் என்றால் போகவேண்டும்.தமிழர் என்றால் சாகவேண்டும். நேரம் போகப் போக, வீடுகளில் இருந்த கத்தி பொல்லு ஆயுதங்களுடன் இன்னும் இன்னும் ஆட்கள் வீதிகளுக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஓரத்தில் ஓர் இராணுவ வாகனம் வருவது தெரிந்தது. அப்பாடி… ஆசுவாசமாக இருந்தது. இனி நிம்மதி. விரைவில் கலவரம் செய்வோரை இராணுவத்தினர் அடக்கி விடுவார்கள். சற்று நேரத்தில் அமைதியாகி விடும். உடனடியாக பெட்டியைச் சுருட்டிக்கொண்டு ஊருக்கு ஓடிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். இராணுவ வாகனம் நின்றதும் அதிலிருந்து ஓர் வீரன் இறங்கினான். 

வேகமாக ஓடிப் போய், கடைகளை அடித்தும் வாகனங்களை மறித்தும் கொண்டிருந்த ஆட்களிடம் ஏதோ பேசினான். உடனே நான்கைந்து பேர் இராணுவ வாகனத்தை நோக்கி ஓடி வந்தார்கள். கமாண்டர் அவர்களுடன் பேசப் போகிறார் என்று எண்ணினேன். வாகனத்திலிருந்து அனைவருக்கும் பெரிய பெரிய போத்தல்கள் வழங்கப்பட்டன. அவர்கள் அதை வாங்கிக்கொண்டு மீண்டும் தத்தமது வேலைகளுக்கு விரைந்தார்கள். என்ன ஏதேனும் பானமா? பெற்றோல் என்பது அதை ஒரு தமிழ்க் கிழவனின் மேல் ஊற்றிக் கொளுத்தியபோதுதான் எனக்குப் புரிந்தது. வீதியில் வந்துகொண்டிருந்த வெள்ளைக் கார் ஒன்றை மறித்தார்கள். உள்ளே ஒரு தமிழ்க் குடும்பம் இருந்தது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அப்பா வாகனத்தை ஓட்ட, உள்ளே பக்கத்தில் அம்மா, மடியில் ஒரு குழந்தை – நான்கைந்து வயது இருக்கலாம். பின் சீட்டை பார்த்தேன். 

ஒரு எட்டு – பத்து வயதுப் பெண் குழந்தையும அவளைச் சுற்றி நிறையச் சாமான்களும். வீட்டில் இருந்த பொருட்களை அவசர அவசரமாகக் காரில் எடுத்துப் போட்டுக் கொண்டு வெள்ளவத்தைப் பக்கமாக தப்பி ஓடிக் கொண்டிருந்த தமிழ்க் குடும்பம். அநியாயமாக இவர்கள் கையில் மாட்டுப்பட்டு விட்டதே என்று எண்ணினேன். ஓட்டுனர் பக்கக் கதவின் கண்ணாடியை ஒருவன் உடைத்தான். உள்ளே பார்த்தவன் தமிழ்க் குடும்பம் என்பதை உறுதி செய்ததும் நான்கைந்து பேர் காரைச் சூழ்ந்து போத்தல் பெட்ரோலை காரில் ஊற்ற ஆரம்பித்தார்கள். அவர்களில் ஒருவன் – திடீரென்று பின்னால் பார்த்தவன், வலுக் கட்டாயமாக காரின் பின் கதவைத் திறந்து பின்னால் பொருட்களுக்குள் பயத்துடன் குறுகி இருந்த பெண் குழந்தையை இழுத்து வெளியே போட்டான். மற்றவர்களுக்கு சைகை காட்ட, கார் பற்ற வைக்கப்பட்டது. 

அவன் தனது கால்களுக்கிடையில் பெண்குழந்தையை அழுத்திப் பிடித்திருக்க, அவன் கைகள் அவளது மார்பை வருட ஆரம்பிக்க, அவள் முன்னாலே குடும்பம் கருக ஆரம்பித்தது. எனக்கு அதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. கத்த வேண்டும் போலிருந்தது. என் தொடையில் ஓங்கிக் குத்தினேன். பற்களை இறுகக் கடித்துக்கொண்டேன். காருக்குள் தகப்பன் துடித்து நெளிவது தெரிந்தது. கதவை அவன் திறக்க முயல, இவர்கள் காலால் கதவைத் தள்ளிப் பிடித்தார்கள். தீயின் வெம்மை தந்த வேகமோ என்னவோ எரிந்தபடியே தகப்பன் கதவை உதறிக்கொண்டு திடீரென்று வெளியே பாய்ந்தான். ஓர் உயிருள்ள உடல் எரிந்தபடி நகர்வதைப் பார்த்ததுண்டா? அதைவிடப் பயங்கரமான காட்சி வேறு எதுவுமே இருக்க முடியாது. 

வீதியில் தடக்கி விழுந்த அந்தத் தீப் பொம்மை கையை ஊன்றி எழுந்து, பெண் குழந்தையை நெருங்கியணைத்து. குழந்தையை இறுகிப் பிடித்து வைத்த்திருந்தவன் வெக்கை தாங்காமல் விலக, அந்தத் தகப்பன் குழந்தையைக் கட்டி இழுத்துக்கொண்டு மறுபடி காருக்குள் புகுந்து கதவை சாத்திக்கொண்டான். பெண் குழந்தையும் எரிய ஆரம்பித்தாள். அதற்கு மேல் பார்க்க முடியவில்லை. கண்களை இறுக மூடிக்கொண்டு கட்டிலில் படுத்துக் கொண்டேன். மனதுக்கு நிம்மதியாக இருந்தது. அழத் தொடங்கினேன்.


காரில் வந்தவர்கள் தமிழர்கள் என்பதால் பெற்றோல் ஊற்றி எரித்தனர் -83 ஜூலைக் கலவரத்தில் இடம்பெற்ற திடுக்கிடும் உண்மைச் சம்பவம் Reviewed by Author on July 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.