அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா சிறைச்சாலை வதைமுகாமை விட மோசமானது: சிறைசென்று மீண்டோர் தெரிவிப்பு

 வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கொள்ளளவை விட மூன்று மடங்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், அது வதை முகாமை விட மோசமானது என்று வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர்.


கடந்த சிவாராத்தி தினத்தில் வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட 8 பேர் வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். பின்னர் வவுனியா நீதிமன்றால் கடந்த செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டனர்.


குறித்த நபர்களில் இருவர் சிறைச்சாலையில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பாக இன்றையதினம் (21.03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,


வவுனியா சிறைச்சாலையினை வதைமுகாம் என்றே கூறமுடியும். எந்த ஒரு அடிப்படை வளமும் அற்ற ஒரு சிறைச்சாலையாக அது காணப்படுகின்றது. 200பேர் அளவிலான கைதிகளே அங்கு இருப்பதற்கான இடவசதி காணப்படுகின்றது.


ஆனால், நாம் விடுதலையாகும் வரை 586 கைதிகள் அங்கு அடைக்கப்பட்டிருந்தனர். அத்துடன்  அடிப்படை விடயங்களே அங்கு இல்லாத நிலை காணப்படுகின்றது. குறிப்பாக நீர்வசதி மிகவும் பற்றாக்குறையாக உள்ளது. அத்தனை பேருக்குமாக சேர்த்து சிறிய நீர்த்தொட்டி ஒன்றே அங்கு அமைக்கப்பட்டுள்ளது. அது தொடர்ந்தும் இயங்குவதில்லை. ஆறு வாளி தண்ணீரே ஒருநாளில் ஒருவருக்கு வழங்கப்படுகின்றது. அதற்காக இரண்டரை மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டும்.


இதேவேளை, தற்போதைய வெப்பமான காலநிலையால் கணிசமானவர்கள் சொறி சிரங்கு போன்ற நோய்களிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். உயிர் ஆபத்துக்கள் நிகழக்கூடிய வாய்ப்புக்கள் கூட அங்கே காணப்படுகின்றது.


நித்திரைகொள்வதற்கான வசதிகள் இல்லை.  பல கைதிகள் மலசலகூடங்களிலும் குளியலறைகளிலும் உறங்கும் நிலை காணப்படுகின்றது. உணவின் தரம் மிகவும் மோசமானது. கிரந்தி தன்மை கூடிய சூரை மீனே தினமும் தரப்படுகின்றது. இதனால் பலர் சிரங்கு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இது அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடகவே எண்ணத்தோன்றுகின்றது. அத்துடன் பெரிய குற்றங்கள் செய்தவர்கள், சந்தேகநபர்கள், சிறிய குற்றம் செய்தவர்கள் என்று வகைப்படுத்தப்படாமல் அனைவரும் ஒரே இடத்திலேயே அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு செல்லும் பலர் பெரிய குற்றவாளிகளாக மாற்றப்படும் நிலை அங்கு காணப்படுகின்றது. இதனால் குற்றவாளிகளும், குற்றங்களும் மேலும் அதிகரிக்கும் நிலையே ஏற்ப்படும்.  இது அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அனைவரதும் வேண்டுகோளாக காணப்படுகின்றது. எனவே இந்த நிலமைமாற்றப்பட வேண்டும் என்றனர்.வவுனியா சிறைச்சாலை வதைமுகாமை விட மோசமானது: சிறைசென்று மீண்டோர் தெரிவிப்பு Reviewed by Author on March 21, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.