அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஊடகவியலாளருக்கு அரச தரப்பால் தொடர்ந்து விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள்; மன்னார் நகர சபையில் கண்டனத் தீர்மானம்

மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற ஊடகவியலாளர்களுக்கு அரச தரப்பினரால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக மன்னார் நகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் மாதாந்தக் கூட்டம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம் பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது:

இன்று மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஊடகவியலாளர்களின் பணி மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்று வருகின்றது. எனினும் அவர்களுக்கான பாதுகாப்பு இன்றைய கால கட்டத்தில் கேள்விக்குறியான நிலையில் உள்ளது.

அவர்கள் செய்திகளை உடனுக்குடன் மிகவும் நீதியான முறையில் பக்கச்சார்ப்பின்றி வெளியிடுகின்ற போதிலும் எதிர்த்தரப்பினரால் அவர்கள் தாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகின்றன.

அண்மையில் மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் அரச தரப்பு அமைச்சர் ஒருவரின் இணைப்பாளர் என கூறப்படும் நபர் ஒருவரினால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டார். குறித்த ஊடகவியலாளர் ஒரு வயதானவராகக் காணப்படுகின்றார். அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் எவ்விதத்தில் நியாயம் என்பதை நான் கேட்க விரும்புகின்றேன்.

அது மட்டுமின்றி மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயப் பகுதியில் புத்தர் சிலை விவகாரம் இடம் பெற்று வந்தது. அதன்போது அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் இணைப்பாளருமான ஒருவர் அங்கு சென்றிருந்த போது அங்கு சென்ற இரு ஊடகவியலாளர்கள் அவரினால் கடுந் தொனியில் அச்சுறுத்தப்பட்டு அவர்களுடைய கடமையைச் செய்ய விடாத நிலையில் படைத்தரப்பினரின் உதவியுடன் பலவந்தமாகத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவங்கள் மிகவும் வேதனையளிக்கின்றன. இன்றைய சமாதான காலத்தில்கூட ஊடகவியலாளர்கள் தமது கடமைகளைச் சுதந்திரமாகச் செய்ய முடியாத நிலையே உள்ளது.


இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறக்கூடாது என்று தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராக மன்னார் நகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் சமர்ப்பித்த கண்டனத் தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மன்னார் ஊடகவியலாளருக்கு அரச தரப்பால் தொடர்ந்து விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள்; மன்னார் நகர சபையில் கண்டனத் தீர்மானம் Reviewed by Admin on June 23, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.