அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் முஸ்லிம் மீள்குடியேற்ற கிராம தீ வைப்புச் சம்பவத்திற்கு செல்வம் எம்.பி கண்டனம்

மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மறிச்சுக்கட்டி மரைக்காயர் தீவுப் பகுதியில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற கிராமத்தில் ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தீ வைப்புச் சம்பவத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலத்தின் பின்னர் வந்து குடியேறிய அம் மக்களினது இருப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் இச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அத்துடன் குறித்த பகுதி முன்னர் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் இப் பகுதியில் மீள்குடியேற்றத்திற்கு கடற்படையினர் முன்னர் தடைக்கல்லாக இருந்தமையையும் குறிப்பிட்டார் அடைக்கலநாதன்.

குறித்த முஸ்லிம் மீள்குடியேற்ற கிராமத்தில் தற்காலிக கொட்டில்கள் மற்றும் பொதுக் கட்டிடம் என்பன நேற்று இரவு ஆயுததாரிகள் சிலரால் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இதன் போது 7 தற்காலிக கொட்டில்களும், ஒரு பொது நோக்கு மண்டபமும் தீயில் எரிந்து சாம்பராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தச் சம்பவத்தில் கடற்படையினரே சம்பந்தப்பட்டிருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 21 வீடுகளைக் கடற்படையினர் கழற்றி தம்முடன் எடுத்துச் சென்றிருப்பதாகவும், 8 வீடுகள் எரிக்கப்பட்டிருப்பதாகவும் ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் பூர்வீகமாகக் குடியிருந்து வந்த இந்தக் கிராமத்தில் பெரும்பகுதியைக் கடற்படையினர் எடுத்துக் கொண்டது போக மிஞ்சியுள்ள சிறிய நிலப்பகுதியிலேயே தாங்கள் குடியேறி வாழ்ந்து வருகையிலேயே தமது குடியிருப்புக்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாக ஊர் முக்கியஸ்தராகிய மஃமுத் தௌபீக் தெரிவித்தார்.

மறிச்சுக்கட்டி மரைக்கார்தீவுக்குச் சென்று நிலைமைகளை நேரில் அவதானித்துத் திரும்பியுள்ள வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரி, இந்தச் சம்பவத்தில் 8 வீடுகளும் ஒரு பொது மண்டபமும் எரிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். 4 வீடுகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தச் சம்பவத்தில் கடற்படையினர் சம்பந்தப்பட்டதற்கான சாட்சியங்கள் கிடையாது என்றும் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரி கூறியுள்ளார்.
மன்னாரில் முஸ்லிம் மீள்குடியேற்ற கிராம தீ வைப்புச் சம்பவத்திற்கு செல்வம் எம்.பி கண்டனம் Reviewed by NEWMANNAR on September 04, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.