அதிபர் நியமிக்கப்பட்டும் பல மாதங்களாக இயங்காத நிலையில் மன்-கார்மேல் நகர் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை.- படங்கள்
மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சின்னபுள்ளச்சி பொற்கேணியில் உள்ள பாடசாலை இயங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு புதிய அதிபர் நியமிக்கப்பட்டுள்ள போதும் மன்னார் வலயக்கல்வித்திணைக்களம் குறித்த பாடசாலையினை இயக்குவற்கான அனுமதியினை இது வரை வழங்கவில்லை என சின்னபுள்ளச்சி பொற்கேணி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சின்னபுள்ளச்சி பொற்கேணி என்ற கிராமத்தில் அமைந்துள்ள மன்-கார்மேல் நகர் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை இது வரை இயங்காத நிலையில் உள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த கிராம மக்கள் இடம் பெயர்ந்து சென்ற பின் தற்போது மீண்டும் மீள் குடியேறியுள்ளனர்.
இந்த நிலையில் இவ்வருடம் ஜனவரி மாதம் இப்பாடசாலை இயங்குவதற்கான அனுமதி கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டது.
இப்பாடசாலைக்கு என கடந்த யூலை மாதம் 15 ஆம் திகதி(15-7-2013) அதிபர் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.ஆனால் இப்பாடசாலை இது வரை இயங்காத நிலையில் உள்ளது.
இக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரிய புள்ளச்சி பெற்கேணியில் உள்ள பாடசாலைக்கு பல மைல் தொலைவில் நடந்து செல்லுகின்றனர்.
தரம்-1 தொடக்கம் தரம்-5 வரையே குறித்த பாடசாலை இயங்க வேண்டும்.அதற்கான அனுமதிகள் ஏன் வழங்கப்படவில்லை என்று இது வரை தெரியவில்லை.
மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் குறித்த பாடசாலையினை எதிர் வரும் வருடம்(2014)ஆண்டு தை மாதமே திறக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் இப்பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறித்த பாடசாலைக்கென வகுப்பறைக்கட்டிடம் ஒன்று சேவாலங்கா மன்றத்தினால் யுத்த காலத்தில் கட்டப்பட்டது. அவை தற்போது சில விசமிகளினால் பலத்த சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டு கற்றல்,கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு உதவாத நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலை வளாகத்தினையும்,கட்டடங்களையும் சீர் செய்ய எந்த அதிகாரிகளும் முன்வரவில்லை.
குறித்த வகுப்பறைக்கட்டிடங்கள் கட்டாக்காலி மாடுகளின் உறைவிடமாக மாறியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் வலயக்கல்வித்திணைக்களத்திற்கு பல முறை நேரடியாக சென்று கதைத்தும் கண்டு கொள்ளாத நிலையில் உள்ளனர்.
இந்த அதிகாரிகளின் அசமந்த போக்கின் காரணமாக குறித்த பாடசாலை அடுத்த வருடம் இயங்குமா என்ற சந்தேகம் எம் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
எமது பாடசாலை கத்தோலிக்க கலவன் பாடசாலை.எனவே திறமை வாய்ந்த ஆரம்பக்கல்வி கத்தோலிக்க ஆசிரியர்களை நியமிக்கும் பட்சத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களையும் நல்ல நிலைக்கு உயர்த்த முடியும்.
எனவே எமது கிராம மக்களின் கல்வி,ஆன்மீகம்,பொருளாதாரம் ,பௌதீக வளம்,கலாச்சாரம் போன்ற வற்றில அக்கறை செலுத்தி உதவி புரியுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிபர் நியமிக்கப்பட்டும் பல மாதங்களாக இயங்காத நிலையில் மன்-கார்மேல் நகர் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை.- படங்கள்
Reviewed by Admin
on
November 03, 2013
Rating:
No comments:
Post a Comment