அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் யுத்தம் காரணமாக பாதிப்படைந்து கல்வியை தொடரமுடியாத நிலையில் பன்னிரெண்டாயிரம் சிறுவர்கள் உள்ளனர். சிவசக்தி ஆனந்தன்.

வட மாகாணத்தில் யுத்தம் காரணமாக பாதிப்படைந்து கல்வியைத் தொடர வசதி இல்லாத நிலையில்
12,000 சிறுவர்கள் உள்ளனர் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார் .

வவுனியா அருணோதயா முன்பள்ளியின் கலைவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை முத்தையா மண்டபத்தில் இடம்பெற்ற போதே இதனைத் தெரிவித்தார் . மேலும் அவர் தெரிவிக்கையில் ,

ஒரு மனிதனுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முன்பள்ளியே அத்திவாரம் இடுகின்றது . நாட்டில் பல முன்பள்ளிகள் இருக்கின்ற போதும் அர்ப்பணிப்புடனும் சிறப்பாகவும் அடித்தளம் இடுகின்ற முன்பள்ளிகள் ஒரு சிலதே . அந்த வகையில் வவுனியாவில் இருக்கின்ற சிறந்த முன்பள்ளிகளில் ஒன்றாக அருணோதயா முன்பள்ளி விளங்குகின்றது . சிறப்பான நிர்வாக கட்டமைப்புடன் பாலர் வகுப்பு மாணவர்கள் விரும்பி கற்கும் நிலையமாக அது இருக்கின்றமை பாராட்டப்பட வேண்டியது . எமது சமூகத்தை கட்டியெழுப்புவதில் அக்கறையுடன் செயற்படுவது சிறப்புக்குரியது .

இன்று எமது நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக தாய் தந்தையரை இழந்த ஆயிரக்கணக்கான சிறார்கள் இருக்கிறார்கள் . இவர்கள் தமது கல்வியைத் தொடர முடியாது கஷ்டப்படுகின்றார்கள் . வட மாகாணத்திலே தாய் , தந்தை ஆகியோரை இழந்த , காணாமல் போன குடும்பங்களின் மற்றும் நீண்டகால அரசியல் கைதிகளின் பிள்ளைகள் என 12,000 பேர் இருக்கின்றனர் . இச் சிறார்களின் எதிர்காலம் இன்று மக்களுடைய கைகளிலேயே தங்கியுள்ளது . இவர்களின் கல்வி வளர்ச்சிக்கு புலம்பெயர் மக்கள் நகரப் பாடசாலைகள் , தனவந்தர்கள் , தனியார் நிறுவனங்கள் , கல்வி நிலையங்கள் என்பன உதவி செய்ய முன்வர வேண்டும் . உங்களால் செய்யப்படுகின்ற ஒரு சிறு உதவி கூட அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பெரும் உதவியாக அது அமையும் .

இவ்வாறு கல்வியைத்தொடர முடியாத பல சிறார்கள் தமது உறவுகளுடன் தினமும் எம்மிடம் வருகிறார்கள் . நாங்கள் அவர்களுக்கு முடிந்தளவு உதவி செய்து வருகின்றோம் . இதை நாம் தனிய செய்து விட முடியாது . அவ்வாறு செய்தும் அவர்களது தேவையை பூர்த்தி செய்ய முடியாது . இதனை எல்லோரும் சேர்ந்து தான் செய்ய வேண்டும் . பாடசாலைகள் தமது பாடசாலைகளில் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பைத் தூண்ட வேண்டும் .

அவ்வாறு மாணவர்களை தூண்டுகின்ற போது அவர்கள் வீடுகளுக்கு போய் சொல்லி பலர் மனித நேயத்துடன் உதவி செய்ய முன் வருவார்கள் . தனிய அவ்வாறு உதவி செய்ய முடியாதவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டால் நாங்கள் அனைவரும் இணைந்து பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு உதவி செய்யலாம் .

இவ்வாறான சில சிறார்களுக்கு ரி.ரி. ஆர் வானொலி புலம்பெயர் நாட்டில் இருந்து உதவி செய்து வருகிறது . அதனைப் போன்று ஏனையவர்களும் முன்வர வேண்டும் . ஏனெனில் பாதிக்கப்பட்ட எமது சிறார்கள் சொந்தக் காலில் நிற்கும் வரை உதவி செய்ய வேண்டியுள்ளது . அதன் மூலமே அவர்களையும் எமது சமூகத்தில் நற்பிரஜைகளாக்க முடியும் என்றார் .

எஸ் . தயாளன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எம் . எஸ் . ரம்ஸீன் , தமிழ் மத்திய மகா வித்தியாலய பிரதி அதிபர் என் . எஸ் . செல்வரட்ணம் , தெற்கு வலய உதவி கல்விப்பணிப்பாளர் வாகீசன் , சிறுவர் நன் நடத்தை உத்தியோகத்தர் தி . மனோகரராஜா , பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் வி . சுப்பிரமணியம் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர் .
வடக்கில் யுத்தம் காரணமாக பாதிப்படைந்து கல்வியை தொடரமுடியாத நிலையில் பன்னிரெண்டாயிரம் சிறுவர்கள் உள்ளனர். சிவசக்தி ஆனந்தன். Reviewed by Admin on December 14, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.