அண்மைய செய்திகள்

recent
-

மண்டேலாவின் வரலாறு இந்த நாட்டுக்கு அறிவூட்ட வேண்டும்: மனோ

'நெல்சன் மண்டேலாவின் வரலாறு இந்த நாட்டுக்கு அறிவூட்ட வேண்டும். மண்டேலா ஒரு கறுப்பர். ஆகவே அவரது வரலாற்றை எவரும் மேற்கத்தைய வெள்ளையர்களின் சதி என சொல்லிவிட முடியாது. மண்டேலாவின் உண்மை வரலாறு பற்றி இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வெற்றி பெற்று பதவிக்கு வந்தபின் மாற்று
இனத்தவரை நோக்கி நீட்டப்பட்ட மண்டேலாவின் நேசக்கரத்தை பற்றி  இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். குறைந்தபட்சம் பதவிக்கு வந்துவிட்டு, தனது பதவிக்காலத்தை நீடிக்க தம் நாட்டின் அரசியல் யாப்பை மண்டேலா திருத்தவில்லை என்பதையாவது இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில், ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட செயற்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி மற்றும் உரை நிகழ்வு நடைபெற்றது. கோட்டே நாகவிகாராதிபதி சோபித தேரர், கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், முன்னாள் அமைச்சர் பி.பி.தேவராஜ், சமூக பணியாளர் சாந்தி சச்சிதானந்தம் ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

'மண்டேலாவை பற்றி கலந்துரையாடுவதற்கு உலக பரப்பில் இலங்கையை போல் பொருத்தமான நாடு இன்று வேறு எதுவும் இல்லை. அதுபோல் மண்டேலா பற்றி பேசுவதற்கு இன்றைய தருணத்தைவிட இந்நாட்டுக்கு பொருத்தமான வேறு ஒரு தருணமும் இல்லை. மண்டேலா ஆபிரிக்க தேசிய காங்கிரசில் இணைந்து சாத்வீக போராட்டங்களில் பங்களித்தார். ஆனால் வெள்ளை இனவாத ஆட்சியின் அரச பயங்கரவாதத்தின் முன், சாத்வீகம் மட்டும் போதுமானது என்ற நம்பிக்கையை அவர் இழந்தார். அவர் ஆயுத பயிற்சி பெறவும், ஆயுதம் தூக்கவும், வெள்ளை அரச பயங்கரவாதம்தான் காரணமாயிற்று. இலங்கையிலும் தமிழர்களின் சாத்வீக போராட்டத்துக்கு, இலங்கை அரசுகள் அரச பயங்கரவாதத்தின் மூலமாக பதில் கொடுத்தன. 

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு, எங்கள் கட்சிக்கு அரசியல்ரீதியாக உறவு முறை கூறும் தமிழ் தேசிய தலைவர்கள், இங்கே கொழும்பில், முன்னைநாள் இலங்கை நாடாளுமன்ற வளாகத்துக்கு, இற்றைநாள் ஜனாதிபதி அலுவலகத்துக்கு எதிரில், அமர்ந்து சாத்வீக போராட்டம் நடத்தினார்கள். அதற்கு இரத்தம் தோய்ந்த பதிலை இலங்கை அரசு அளித்தது என்பது இன்று வரலாறு ஆகிவிட்டது. இத்தகைய அரச பயங்கரவாதமே, தமிழ் சமூகத்தின் இளைஞர் தரப்பை ஆயுதம் தூக்கும் நிலைக்கு தள்ளியது. 

இன்று அரசுக்குள்ளே இருக்கும் ஈபீடிபி உள்ளிட்ட எல்லா தமிழ் இயக்கங்களையும் இலங்கை அரசின் பயங்கரவாதமே உருவாக்கியது. மண்டேலாவின் வரலாறு அவர் முதல் தென்னாபிரிக்க கறுப்பின ஜனாதிபதியாக பதவியேற்றதுடன் ஆரம்பிக்கவில்லை. வெள்ளை இனவாதிகளை எதிர்த்து, அவர் ஆயுதம் தூக்கியதுடனும் ஆரம்பிக்கவில்லை. 

அதற்கு முன்னரே ஆபிரிக்க தேசிய காங்கிரசில் இணைந்து அவர் ஜனநாயக போரில் பங்குகொண்ட காலத்தில் இருந்து, மண்டேலா வரலாறு ஆரம்பிகின்றது. இந்த நாட்டில் சிலர் தங்கள் இன்றைய தேவைகளுக்காக, 1980களின் பின்னர் தமிழ் ஆயுத கிளர்ச்சி ஆரம்பித்ததிலிருந்து, இலங்கையில் தமிழர் போராட்ட வரலாற்றை ஆரம்பிக்க நினைக்கின்றார்கள். இது ஒரு பித்தலாட்டம் என்ற உண்மை 1980களுக்கு பின்னர் பிறந்த புதிய தலைமுறை சிங்கள சமூகத்துக்கு சொல்லப்பட வேண்டும்.

மண்டேலா வரலாற்றின் மூன்றாவது கட்டம்தான், சிறையில் இருந்த வெளிவந்து தேர்தலில் வெற்றி பெற்று அவர் வகித்த ஜனாதிபதி பதவி காலம். அதன்போது அவர் வெள்ளையரை பலி தீர்த்திட வேண்டுமென ஆபிரிக்க தேசிய காங்கிரசின் கணிசமான ஆதரவாளர்களே விரும்பினார்கள். ஆனால், அவர் அதை செய்யவில்லை. வெள்ளை நிறவாதத்திற்கு எதிராக பெற்ற வெற்றி, வெள்ளை சமூகத்துக்கு எதிராக பெற்றுக்கொண்ட வெற்றியாக மாற்றப்படுவதை மண்டேலா எதிர்த்தார். நிறவாதத்திற்கு எதிரான வெற்றி வெள்ளையரையும் உள்ளடக்கிய முழு தென்னாபிரிக்க மக்களின் வெற்றி என அவர் அறிவித்தார். வெள்ளையரை நோக்கி அவரது நேசக்கரம் நீண்டது.

இன்று இந்த நாட்டிலே புலிகளுக்கு எதிராக பெற்ற வெற்றி, தமிழ் சமூகத்துக்கு எதிராக பெற்றுக்கொண்ட வெற்றியாக மாற்றப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பெற்றுக்கொண்ட வெற்றியாகவும் மாற்றப்பட்டுள்ளது. கத்தோலிக்க மதத்தவருக்கு எதிராக பெற்றுக்கொண்ட வெற்றியாக மாற்றப்பட்டுள்ளது. சிங்கள பௌத்தர்களின் வெற்றியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதானால்தான் இராணுவ வெற்றியை பெற்றுக்கொண்ட அரசாங்கத்திடமிருந்து, தமிழர்களை நோக்கி எந்தவொரு நேசக்கரமும் நீட்டப்படவில்லை.

வணக்கத்துக்குரிய சோபித தேரர் அவர்களே, உங்கள் அருகில் அமர்ந்துள்ள அந்த வயதான பெரிய மனிதர், இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களின் மிகப்பெரும்பான்மை வாக்குகளை பெற்ற ஜனநாயக அரசியல் கட்சியின் தலைவர். அவரது கட்சி தமிழ் மக்களின் ஆணையை பெற்றுக்கொண்ட அந்த தேர்தல்களை, இலங்கையின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியதான் நடத்தினார். அரசாங்கத்திடமிருந்துதான்  நேசக்கரம் வரவில்லை. ஆனால், தமிழர் தரப்பின் சார்பாக, சம்பந்தனிடமிருந்து நேசக்கரம் தெற்கை நோக்கி நீட்டப்படுகிறது. ஆனால், அதையாவது பற்றிக்கொள்ள தெற்கில் பிரதான கட்சிகளுக்குள் எவரும் இல்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஒரு மேதின மேடையில், எனக்கு பக்கத்தில் நின்றுக்கொண்டு, சம்பந்தன் சிங்க கொடியை தூக்கி காட்டியும் பார்த்தார். அதற்காக அவர் கடுமையாக தமிழ் தீவிரவாதிகளால் விமர்சிக்கப்பட்டார். ஆனாலும் அவரது அந்த நல்லெண்ண சமிக்ஞையை புரிந்து கொள்ள இங்கே யாரும் இல்லை. 

இங்கே கொழும்பில் நம் மத்தியில் சமயப்பணி செய்துக்கொண்டு அமைதியாக வாழ்ந்து, சிங்கள சமூகத்துடன் உறவுமுறை தொடர்புகளையும் கொண்ட ஒருவரை வடக்குக்கு அழைத்து சென்று, அவரை அங்கு மாகாண  முதல்வராக தமிழ் மக்கள் ஆக்கியுள்ளார்கள். அதுவே ஒரு மாபெரும் நல்லெண்ண சமிக்ஞை. ஆனால் அதையும் யாரும் இங்கு புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

இந்த நல்லெண்ண சமிக்ஞைகளை புரிந்துகொள்ளாமல் தான், மண்டேலாவின் முழுமையான வரலாறையும் அறிந்து கொள்ளாமல்தான் இங்கிருந்து சிலர் ஜோஹன்னஸ்பர்க் சென்று மண்டேலாவின் மரண சடங்கிலும் கலந்து கொள்கின்றனர். மண்டேலாவின் வரலாறு இந்த நாட்டுக்கு அறிவூட்ட வேண்டும். மண்டேலா ஒரு கறுப்பர். 

ஆகவே  அவரது வரலாற்றை எவரும் மேற்கத்தைய வெள்ளையர்களின் சதி என் சொல்லிவிட முடியாது. மண்டேலாவின் உண்மை வரலாறு பற்றி இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வெற்றி பெற்று பதவிக்கு வந்தபின் மாற்று இனத்தவரை நோக்கி நீண்ட மண்டேலாவின் நேசக்கரத்தை பற்றி  இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் பதவிக்கு வந்துவிட்டு, தனது பதவிக்காலத்தை  நீடிக்க தம் நாட்டின் அரசியல் யாப்பை மண்டேலா திருத்தவில்லை என்பதையாவது இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்' என்றார். 
மண்டேலாவின் வரலாறு இந்த நாட்டுக்கு அறிவூட்ட வேண்டும்: மனோ Reviewed by Author on December 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.