காணாமற்போனவர்களின் முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசத்தில் இடம்பெறவேண்டும் – FJP, PMGG கூட்டாக வலியுறுத்தல்- படங்கள்
காணாமற்போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேசங்களிலும் இடம்பெறவேண்டும் என நீதிக்கும், சமாதானத்திற்குமான முன்னணி மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என்பன காணாமற்போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம அவர்களிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
காணாமற்போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று (2014.03.22) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இவ்வாணைக்குழுவிடம் முறையிடுவதற்காக கல்குடாத் தொகுதி முஸ்லிம் கிராமங்களில் வசித்து உள்நாட்டு யுத்தத்தினால் காணமல்போனவர்களின் உறவினர்கள் பதினேழு பேர் நீதிக்கும், சமாதானத்திற்குமான முன்னணி மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க கல்குடா தொகுதி செயற்குழு உறுப்பினர்களால் அழைத்துச்செல்லப்பட்டனர்.
காணமல்போனவர்கள் சார்பாக பிரசன்னமாகியிருந்த உறவினர்களின் முறைப்பாடுகள் பதிவுசெய்து கொண்டதன் பின்னர் ஆணைக்குழுவின் தலைவருடன் நீதிக்கும், சமாதானத்திற்குமான முன்னணி மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க கல்குடா செயற்குழு உறுப்பினர்கள் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர். இதன்போது கல்குடா முஸ்லிம்கள் சார்பாக கோரிக்கைக் கடிதமொன்றும் கையளிக்கப்பட்டது.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத் தொகுதியில் உள்ள கோறளைப்பற்று மத்தி, கோறைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று, கோறளைப்பற்று தெற்கு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ் கடந்த முப்பது ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்தினால் இப்பகுதி முஸ்லிம்களின் உயிர், உடைமை இழப்புகளை உங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம்.இந்த யுத்த காலத்தின் போது முஸ்லிம் மக்களது இருப்பு, கல்வி, கலாசாரம், அரசியல், பொருளாதாரம் என்பவற்றை ஒடுக்கி, அவர்களை அடிமைப்படுத்த தமிழீழ விடுதலை போராட்ட குழுக்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இதை மனங்கொள்ளல் வேண்டும். 1990களிலிருந்து 2009ம் வரை 19 ஆண்டு கால உயிர், உடைமை இழப்புகளுக்கும் இடம்பெயர்தலுக்கும் குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளும் இலங்கை அரச பாதுகாப்புப் படையினரும் பொறுப்புதாரிகள் என்பதையும் தெளிவுபடுத்துகின்றோம். அடையாளப்படுத்த விரும்புகின்றோம்.
எனவே, கல்குடாத் தொகுதி முஸ்லிம்களின் போர்க் கால இழப்புகளின் மிகவும் முக்கியத்துவமளிக்க வேண்டிய காணாமல்போனோர் பற்றிய தகவல் உரிய முறையில் சேகரிக்கப்பட்டு, சாட்சியம் பெறப்படுவதுடன் அவர்களது கோரிக்கையினையும் காலதாமதமின்றி நிறைவுசெய்ய ஆவண செய்யுமாறு வேண்டி நிற்கின்றோம்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான காணாமல்போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினரின் ஒரு அமர்வினை எமது பிரதேசத்திலும் முன்னெடுக்குமாறும் அதற்கான கால நேரத்தையும் ஒதுக்கித்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அக்கோரிக்கைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமற்போனவர்களின் முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசத்தில் இடம்பெறவேண்டும் – FJP, PMGG கூட்டாக வலியுறுத்தல்- படங்கள்
Reviewed by NEWMANNAR
on
March 23, 2014
Rating:
No comments:
Post a Comment