குருக்கள் மடம் மனித புதைகுழியில் 160 பேர் புதைக்கப்பட்டுள்ளனர் – பிரதேச மக்கள்
மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் காணப்படுவதாக கூறப்பட்ட மனித புதைகுழியினை, காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் நேற்று மாலை பார்வையிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற சாட்சி விசாரணை அமர்வுகளின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக மனித புதைகுழி என கூறப்படும் இந்த இடத்தை தமது குழுவினர் பார்வையிட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார்.
தமது உறவினர்கள் 160 பேர் வரையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டு இந்த மனித புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்ததாக ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
மேலும் இரண்டு வயது குழந்தையுடன் இங்கு வந்த தாயொருவரும் சுட்டு கொல்லப்பட்டு, இவர்கள் அனைவரும் கரையோரமாக இரண்டு குழிகளில் புதைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், இந்த மனித புதைகுழி தொடர்பில் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதனை அடுத்து நீதவானுக்கு அறிவித்து, குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம மேலும் சுட்டிக் காட்டினார்.
எவ்வாறாயினும், காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் காணாமல் போனோர் தொடர்பில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 112 முறைப்பாடுகளை முன்வைத்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் நியூஸ் பெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார்.
குருக்கள் மடம் மனித புதைகுழியில் 160 பேர் புதைக்கப்பட்டுள்ளனர் – பிரதேச மக்கள்
Reviewed by NEWMANNAR
on
March 24, 2014
Rating:

No comments:
Post a Comment