மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் ஆரம்பம்
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவுகள் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
இரண்டு மாகாண சபைகளுக்கும் 155 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 4253 நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறுவதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.
மேல் மாகாண சபைக்கான தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான வாக்குப் பதிவுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் டில்ஷான் தாலிப் குறிப்பிட்டார்.
மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் இருந்து 40 இலட்சத்து, 24 ஆயிரத்து 424 வாக்காளார்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
தென் மாகாண சபைக்கான தேர்தலில் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 18 இலட்சத்து 73 ஆயிரத்து 804 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
இரண்டு மாகாண சபைகளுக்குமான தேர்தலில் 81 அரசியற்கட்சிகளும், 42 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 3794 ஆகும்.
கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்து 247 வேட்பாளர்களும், கம்பஹாவில் 946 பேரும், களுத்துறையில் 550 பேரும் இம்முறைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
காலி மாவட்டத்தில் 450 வேட்பாளர்களும், மாத்தறையில் 380 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 221 பேரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் கொழும்பு மாவட்டத்திற்கு 40 பேரும், கம்பஹா மாவட்டத்திற்கு 40 பேரும், களுத்துறை மாவட்டத்திற்கு 22 பேருமாக மேல் மாகாண சபைக்கு 102 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
காலி மாவட்டத்தில் 22 பேரும், மாத்தறையில் 17 பேரும், ஹம்பாந்தோட்டையில் 14 பேருமாக தென் மாகாண சபைக்கு 53 உறுப்பினர்கள் இன்றைய தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
இதேவேளை, மாகாண சபைத் தேர்தலில் வாக்காளர் ஒருவர் தாம் விரும்பிய கட்சிக்கு அல்லது சுயேட்சைக் குழுவிற்கு ஒரு வாக்கினையும், வேட்பாளர்களுக்கு அதிகபட்சமாக மூன்று விருப்பு வாக்குகளையும் புள்ளடியிட முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.
கட்சிக்கு அல்லது சுயேட்சைக் குழுவிற்கு அவற்றின் சின்னங்களின் முன்பாகவுள்ள கட்டத்தில் புள்ளடியிட வேண்டும்.
அதன் பின்னர் தாம் விரும்பிய வேட்பாளரின் இலக்கம் முன்பாகவுள்ள கட்டத்தில் புள்ளடியிட்டு விருப்பு வாக்கினை அளிக்கமுடியும்.
இதன்போது அதிகபட்சமாக மூன்று வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை புள்ளடியிட முடியும் என்பதுடன், வேட்பாளர் ஒருவருக்கு ஒரு விருப்பு வாக்கினை மாத்திரமே அளிக்க முடியும்.
அரசியல் கட்சிக்கு அல்லது சுயேட்சைக் குழுவிற்கு வாக்கினை புள்ளடியிடாவிட்டால் அந்த வாக்குச் சீட்டு செல்லுபடியற்றதாக மாறிவிடும் என்றும் தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதவிர வாக்களித்த பின்னர் உடனடியாக வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள வளாகத்திலிருந்து வெளியேறி தேர்தலை அமைதியான முறையில் நடத்திமுடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தேர்தல்கள் செயலகம் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேவேளை, தேர்தல் முடிவுகள் தொகுதிவாரியாகவும், மாவட்ட ரீதியாகவும், வெளியிடப்படுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியிடப்பட்டதன் பின்னரே, விருப்பு வாக்குகள் எண்ணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தபாலமூல வாக்களிப்பின் முதலாவது முடிவை இன்றிரவு 10 மணியளவில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்ட மேலதிக தேர்தல்கள் ஆணையாளர், முதலாவது உத்தியோகபூர்வ முடிவை இன்று நள்ளிரவு 12 மணியளவில் வெளியிட உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
March 29, 2014
Rating:

No comments:
Post a Comment