புத்தாண்டுக்கு முன் நிரந்தர நியமனம்கோரி ஜனாதிபதிக்கு கடிதம்
முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் நீண்ட காலமாக தற்காலிக சுகாதார தொண்டர்களாக பணிபுரிவோர், தமிழ்-சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் தமக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுக்கொடுக்குமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.
அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"இடப்பெயர்வுக்கு முன்பிருலிருந்தே முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார தொண்டர்களாக பணிபுரிந்து வருகிறோம். கடந்த வருடம் 6ஆம் மாதம் எம்மோடு பணியாற்றிய பலருக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்தது.
எந்த தகமைகளும் இன்றி இருப்பவர்களுக்கு அந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. நாம் சுகாதார தொண்டர்களாக தொடர்ச்சியாக கடமையாற்றிக் கொண்டிருக்கும்போது வேறு தொழில்களில் ஈடுபட்டவர்கள் இந்நியமனத்திற்குள் உள் வாங்கப்பட்டுள்ளனர்.மாத்தளன், பொக்கனை, முள்ளிவாய்க்கால் பகுதிகளில் கோர யுத்தத்தின் மத்தியிலும் தொண்டர்களாக பணிபுரிந்த எமக்கு நியமனம் வழங்கப்படாமல், பாரபட்சமாக நாம் விடுபட்டது பெரும் வேதனைக்குரிய விடயமாகும்.
இலங்கையிலுள்ள மாவட்டங்களில் முழுமையாக யுத்தத்தால் பாதிக்கப்படும் அபிவிருத்தி பொருளாதாரம் என பல விடயங்களிலும் பின்தங்கி காணப்படுவது எமது முல்லைத்தீவு மாவட்டமே என்பதை தாங்கள் அறிந்த விடயமே.
இந்நிலையில் நாம் தற்போது எடுக்கும் சம்பளம் 6000 ரூபாவை விட மேலதிகமாக செலவழித்துதான் இந்த தொண்டர் பணியை மேற்கொள்கிறோம்.
தற்போது பொருட்களின் விலையேற்றம், பிள்ளைகளின் கல்வி செலவு என பாரிய பொருளாதார நெருக்கடியான நிலைமையை எதிர்நோக்கியுள்ளோம்.
யுத்தத்தின் போது கணவரை காணாமல் போனவர்கள், காயப்பட்டவர்கள் என பலதரப்பட்டவர்களும் பணிபுரிகின்றனர். நாங்கள் இவ்வாறான இன்னல்களுக்கும் மத்தியிலும் பணிபரிவது நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையிலாகும்.
அண்மையில் எட்டுப் பேருக்கு நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. இச்செயல் எம்மை உளவியல் ரீதியாக பாதித்துள்ளது. யாருக்கும் நியமனம் வழங்குவதை எதிர்க்கவில்லை. காலம் காலமாக பல இன்னல்களுடன் நியமனத்தை எதிர்பார்த்து காத்திருந்த எம்மை புறந்தள்ளிவிட்டது எமக்கு கவலை தரும் விடயமாகவுள்ளது.
அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தமக்கு சார்ந்தவர்களுக்கே நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நியாயமற்ற பக்கச்சார்பான நிரந்தர நியமனத்தை உடனடியாக நிறுத்தி, நீண்ட காலமாக (10-15வருடங்கள்) மருத்துவ சேவையில் தொண்டர்களாக பணியாற்றி வரும் எமக்கு முன்னுரிமைப்படுத்த வேண்டிய தேவை மனிதாபிமான முறையில் எமக்கே உள்ளது.
இவ்வளவு காலமாக தொண்டர்களாக நாம் வேறு வேலைகள் எதுவும் செய்யவில்லை. இதற்குப் பிறகு எந்த வேலையும் தேடமுடியாது. வயது கடந்தவர்கள் என ஒதுக்கப்படும் நிலையில் உள்ளோம்.
எனவே இந்நிலையினை கருத்திற்கொண்டு எமக்கு எதிர்வரும் தமிழ்-சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் நியாயமான தீர்வினை பெற்றுத்தர ஆவண செய்யமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்காவிட்டால் அரவழியில் சாகும் வரை உண்ணாவிரதத்தை மேற்கொள்ள உத்தேசித்துள்ளோம்' என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் என்.வேதனாயகத்தின் ஊடாக, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் பிரதிகளை வடமாகாண முதலமைச்சர், வடமாகாண ஆளுநர், அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
புத்தாண்டுக்கு முன் நிரந்தர நியமனம்கோரி ஜனாதிபதிக்கு கடிதம்
Reviewed by NEWMANNAR
on
March 29, 2014
Rating:

No comments:
Post a Comment