இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா நடுநிலை வகித்தமை கவலையளிக்கிறது. யோகேஸ்வரன்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரானதீர்மானத்திற்கு இந்தியா நடுநிலை வகித்தமை கவலையளிக்கிறது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா நடுநிலை வகித்தமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியா கடந்த இரண்டு மனித உரிமைப் பேரவைக் கூட்டங்களிலும் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது. அதுவும் இரண்டு தடவையும் அமெரிக்கா கொண்டு வந்த மனித உரிமை மீறல், மனிதாபிமான நடவடிக்கைக்கு ஏற்றுக் கொள்ளாமை, கற்றுக் கொண்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டு அறிக்கையை செயற்படுத்தாமை போன்றவை சார்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் திருத்தங்களை மேற்கொண்ட பின்பே இந்தியா ஆதரவு தெரிவிக்கச் சென்றது.
இம்முறை இந்தியா மனித உரிமை மீறல் கூட்டத் தொடரில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்த போதும் இறுதி நேரத்தில் அவர்கள் நடுநிலை வகித்திருப்பது, இந்தியா தான் தங்களுக்கு தீர்க்கமாக முடிவைப் பெற்றுத்தரும் என நம்பிக்கையோடு இருக்கின்ற பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா இம்முறை நடுநிலை வகித்த விடயம் தொடர்பான கருத்துக்களை ஆராயும்படியான கூட்டம் எதனையும் எங்களது கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை நடத்தவில்லை.
இந்தியா இலங்கையில் நடைபெறுகின்ற ஒவ்வொரு விடயத்தையும் அவதானித்துக் கொண்டிருக்கும் நாடு. இலங்கை மக்கள் சார்பாகவும் பாதிக்கப்படும் தமிழ் மக்கள் சார்பாகவும் ஒரு முக்கிய பங்கை கொண்டிருக்கும் நாடு இந்தியாதான். இந்தியாதான் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்கும் என்பதை இலங்கை தமிழ் மக்கள் நீண்டகாலமாக நம்பிக் கொண்டிருந்தது முக்கிய விடயமாகும். இந்தியாவின் நிலைப்பாடு குறித்து மக்கள் தங்களது அதிர்ச்சியை தெரிவிக்கின்றனர். குறிப்பாக இந்த முறை இந்தியா நடுநிலைக்கு வந்தது ஏனென்ற கேள்வி தமிழ் மக்களிடம் எழுந்து நிற்கிறது.இந்தியா கடந்த கால யுத்த சூழலிலே இலங்கைக்கு உதவி செய்தது. எதிர்காலத்தில் சர்வதேச விசாரணை என்ற ஒன்று வரும் போது தங்களைப் பாதிக்கும், தங்கள் சார்பாகவும் விசாரணை வரலாம் என்ற எண்ணப்பாங்கு இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
இரண்டாவது விடயம் 1987ம் ஆண்டு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஒப்பந்தங்கள் வந்த போது இந்தியா ஒப்பந்தத்தின் பின் தமது அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி இருந்தது. அந்த அமைதிப்படையினால் இலங்கையிலே பல மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதனை இப்போது இலங்கையில் காணாமல் போனோர் பற்றி விசாரிக்கும் குழு ஆராய முற்படுகின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. காணாமல் போனோரை கண்டறியும் இக்குழுவில் 1983ம் ஆண்டுக்கு பின்னராக இடம்பெற்ற கொலைகளும் ஆராயப்பட இருக்கின்றது.
இந்திய அமைதி காக்கும் படையணி இலங்கையில் இருந்த காலத்தில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்பது உண்மை.இந்த விசாரணை வரும் போது தங்கள் நாட்டுக்கு அது பங்கமாக அமையலாம் என்பதனால் அவர்கள் நடுநிலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு பலதரப்பட்ட விடயமாக இந்தியாவின் செயற்பாட்டை நாம் நோக்க வேண்டிய சூழலில் இருக்கின்றோம் - என்றார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா நடுநிலை வகித்தமை கவலையளிக்கிறது. யோகேஸ்வரன்.
Reviewed by NEWMANNAR
on
April 01, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 01, 2014
Rating:


No comments:
Post a Comment