வடக்கில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாகாண சபை உதவிகளை வழங்கி வருகிறது
வடக்கில் போருக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட நிலையில் உடல், உளத் தாக்கங்களுக்கு உட்பட்டு எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்ட பலர் இருக்கின்றனர். இவர்களுக்கான பாரிய திட்டங்களை உரிய ஆராய்வின் பின்னர் நாம் வகுக்காமல் இருப்பதால், தனிமனிதர்கள் மட்டத்தில் அவர்களுக்கு என்ன செய்யலாம் என்று ஆராய்ந்து பார்த்து எமது வடமாகாணசபை பல உதவிகளை செய்து வருகின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி நினைவு நாள் நிகழ்வும் நினைவுப் பேருரையும் நேற்று சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியிலுள்ள வாழ்வகம் நிறுவனத்தின் செல்லா மண்டபத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அன்னை கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அம்மையார் நினைவாக நடத்தப்படும் இக்கூட்டத்தில் பங்கு பற்ற என்னை அழைத்ததையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். அன்னையார் இந்த வாழ்வக நிறுவுநரும் முன்னாள் தலைவரும் விழிப்புலனற்றோரின் கல்வி வரலாற்றில் அரும் பணிகளை ஆற்றியவருமாவார். விசேட தேவைகள் கொண்ட பிள்ளைகளின் வாழ்வாதாரமாக வாழ்வகம் திகழ்கின்றது. அன்பான, அறிவான அன்னையாரின் வளர்ப்பிலே வாழ்வு கண்டவர்கள் பலர். விழிப்புலன் அற்றவர்கள் அன்னையின் அரவணைப்பிலே திறன்மிக்க மாந்தர்களாக மாறினார்கள் என்றால் அது மிகையாகாது.
உற்றவர்களால், உறவினர்களால், ஊர் மக்களால் பலவழிகளிலும் ஒதுக்கப்பட்ட விழிப்புலனற்ற பிள்ளைகள் அவரைத்தேடி வந்ததை விட அவரே தேடிச் சென்று கண்டு பிடித்து ஒன்று சேர்த்து அவர்களுக்கு வாழ்வகத்தில் வாழ்வு கொடுத்தார்.
வாழ்வகம் “கல்வியே ஒளி, கல்வியே வழி” என்ற மகுடவாசகத்தைத் தாரக மந்திரமாகக் கொண்டே கால் நூற்றாண்டுக்கு மேலாக இயங்கி வருகின்றது. கண் தெரியாதவர்களுக்கு கல்வி உள்ளொளி கொடுக்கின்றது. அதே கல்வி வெளி வழியையும் உணர்த்துகிறது. அதனால்த் தான் “கல்வியே ஒளி கல்வியே வழி” என்றார்கள். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரையில் கற்று வந்த விழிப்புல வலுவிழந்த மாணவர்களுக்கு ஏற்ற கல்வி வசதிகள் அனைத்தையும் பெற்றுக் கொடுத்தார் அன்னையாவார். அப்பேர்ப்பட்ட ஒருவரின் நினைவாக நடத்தப்படும் இந்த விழாவில் பங்கு பற்றக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
விழிப்புலன் அற்றோர் பற்றி நாங்கள் புரிந்து வைத்திருத்தல் அவசியம் ஆகும். முக்கியமானதாக விழிப்புலன் அற்றோர் தமது வாழ்நாள் பூராகவும் அதே கண்பார்வையற்ற நிலையிலேயே தொடர்ந்து வாழ்கின்றார்கள் என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே அவர்கள் மனோநிலைகளையும் சூழ்நிலைகளையும் சுயபிரச்சினைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம் அவர்களின் தகைமைகளையும் அவர்களுடன் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள எத்தனிக்கவேண்டும். இவர்களுக்குப் பல தகைமைகள், கெட்டித்தனங்கள் வழக்கமாக இருக்கும். ஆனால் நாம் தான் அவற்றை அவதானித்துக் குறித்துக் கொள்ள வேண்டும். தம் கையே தமக்குதவி என்ற பாடத்தை அவர்கள் கற்க வைக்க வேண்டும். தம் மீதும் தம் சக்தி மீதும் அவர்களுக்கு நம்பிக்கை பிறக்க வைக்க வேண்டும். தாமாகச் செய்ய முடியாதிருக்கும் ஒரு சில நடவடிக்கைகளை விட விழிப்புலன் அற்றோரால் மற்றைய எல்லா பொதுக் காரியங்களையுந் தாமாகச் செய்ய முடியும் என்பதை அவர்களை உணர வைக்கச் செய்ய வேண்டும்.
இப்பொழுதெல்லாம் விழிப்புலன் அற்றவர்களுடன் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பாடங்களே கற்றுத் தருகின்றார்கள். உதாரணத்திற்கு ஒவ்வொரு விழிப்புலன் அற்றவரும் ஒரு காரியத்தைத் தாமாகத் தனக்கே உரிய ஏதோ ஒரு தனித்துவமான விதத்தில் செய்யப் பழகி இருப்பார்கள். ஆகவே அவர்களிடம் நாம் ஏதாவது உதவி தேவையா என்று முதலில் கேட்க வேண்டும். நீங்களாக அவர்களுக்கு ஏதேனும் செய்ய எத்தனித்தால் அவர்களின் வழமையான நடைமுறை பாதிக்கப்படும். பொதுவாக விழிப்புலன் அற்றவருக்கு ஏதோ ஒரளவு பார்க்கும் திறன் சிறிதளவேனும் இருக்கும். எனவே அவர்களின் சுற்றுச் சூழலில் வெளிச்சம் இருக்குமென்றால் நன்றாக அந்த வெளிச்சம் உள்ளே வரும் விதத்தில் வைத்திருக்க வேண்டும்.
மேலும் விழிப்புலனற்றோர் நடை பயிலும் பாதைகளைப் போதியவாறு தடைகளின்றி வைத்திருக்க வேண்டும். தடக்கி விழும் விதத்தில் நடைபாதைகளை வைத்திருக்கக் கூடாது. இன்னுமொரு விடயம் உண்டு – விழிப்புலன் அற்றோர் வசிக்கும் இடத்தில் இருக்கும் தளபாடங்களை மாற்றவோ அகற்றவோ கூடாது. அவர்கள் கண்பார்வை குன்றினும் தாம் போய்வரும் பாதையை இலகுவாக உய்த்துணர்ந்து கொள்வார்கள். தளபாடங்களை மாற்றினால் விழிப்புலன் அற்றோருக்குப் பாதிப்பு ஏற்படலாம். மேலும் விழிப்புலன் அற்றோரின் பொருட்களைக் கொண்ட வாசஸ்தலம் மிகவும் நேர்த்தியாக வைக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்களின் பாவனைப் பொருட்களை அவர்களே சென்று எடுக்க அனுமதிக்க வேண்டும்.
இன்னுமொரு முக்கிய விடயம் உண்டு. விழிப்புலன் அற்றவர்கள் எங்களைப் போன்றவர்கள். எங்களைப்போல் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் உடையவர்கள் என்பதை நாம் உணர வேண்டும். எவ்வாறு நீங்கள் ஒரு நிகழ்வில் மகிழ்வுடன் இருக்க ஆசைப்படுகின்றீர்களோ அதே போல் அவர்களும் ஆசைப்பட்டு நிற்கின்றார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. இப்படிப் பல விடயங்களை உங்களுக்குக் கூறி வைக்கலாம். எமது மனதில், உள்ளத்தில் எம்மிலும் வலுக்குறைந்தவர்கள் மீது இயற்கையாகவே அன்பும் அரவணைக்கும் பாசமும் எழாவிட்டால் வலுவிழந்தோர் வண்ணமுற வாழ்தல் கடினமாகிவிடும். இதை நாம் மறத்தல் ஆகாது.
போரின் பின்னர் வாழ்வு பாதிக்கப்பட்டு தினமும் உடல், உள தாக்கங்களுக்கு உட்பட்டு எதிர்காலம் கேள்விக்கு உரியதாகிப் பலர் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு எம்மாலான பல வசதிகளையும் நாம் ஏற்படுத்திக் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் சுயமரியாதையுடன் சுகதேகிகளாய் வாழ நாம் வசதி அளித்துக் கொடுக்க வேண்டும். கொழும்பில் என்னைக் காண ஒரு தமிழ் இளைஞர் வந்தார். ஊன்று கட்டைகளைப் பாவித்து கஷ்டப் பட்டே என் வீட்டினுள் நுழைந்தார். கண்பார்வை உடையவர். ஆனால் உடல் போரின் போது வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அவருக்கு என்ன உதவிகளை நான் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார் என்று கேட்டேன். உடனே அவர் சற்று உணர்ச்சிவேகத்துடன் “சேர்! எனக்கு எந்த ஒரு உதவியும் வேண்டாம். ஏதாவது ஒரு தொழில் செய்ய எனக்கு உதவுங்கள். நான் அதனூடாக என்னைப் பார்த்துக் கொள்வேன். எனக்கு மக்களின் அனுதாபம் தேவையில்லை” என்றார். பொதுவாக இவ்வாறான எமது சகோதரர்கள் தம்மீது அனுதாபம் காட்டுவதைக் கேவலமாக நினைக்கின்றார்கள். அந்த இளைஞர் இப்பொழுது எங்கள் நண்பர் ஒருவரின் வணிக ஸ்தலத்தில் வேலையொன்றில் இருக்கின்றார். இதிலிருந்து பல விடயங்கள் எமக்குப் புலப்படுகின்றன. மாற்று வலுவுடையோரும் சுய மரியாதையுடன் வாழ ஆசைப் படுகின்றார்கள். மற்றவர்கள் போல் தாமும் உரிய வேலைகளில் சேர்ந்து உழைக்க முடியும் என்று எண்ணுகின்றார்கள். குடும்ப, சமூக மட்டத்தில் தாம் பாகுபாடின்றி நடத்தப் பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.
எனவேதான் அவர்களின் மனோ நிலையைப் புரிந்து நாங்கள் அவர்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட ஆவன செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
இவர்களுக்கான பாரிய திட்டங்களை உரிய ஆராய்வின் பின்னர் நாம் வகுக்காமல் இருப்பதால் தனிமனிதர்கள் மட்டத்தில் அவர்களுக்கு என்ன செய்யலாம் என்று ஆராய்ந்து பார்த்து எமது வடமாகாணசபை பல உதவிகளை அப்பேர்ப்பட்டவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது. அதுவும் எம் மக்களுள் தாராள சிந்தையும் தயையும் உடைய சகோதர சகோதரிமார்களின் அன்பளிப்புகளைக் கொண்டே இவ்வாறு செய்து வருகின்றோம் என்றார்.
வடக்கில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாகாண சபை உதவிகளை வழங்கி வருகிறது
Reviewed by NEWMANNAR
on
September 12, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 12, 2014
Rating:


No comments:
Post a Comment