ஜெசிக்கா சூப்பர் சிங்கர் மட்டுமல்ல... நெகிழ்ந்து நிற்கும் ஈழத்தமிழர்கள்!-Video
விஜய் டி.வி. சார்பில் சிறந்த இளம் பாடகியாக தேர்வு செய்யப்பட்ட ஈழத்தை சேர்ந்த மாணவி ஜெசிக்கா, தனக்கு பரிசாக கிடைத்த ஒரு கிலோ தங்கத்தை, ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட அனாதை குழந்தைகள் வளர்ச்சிக்காக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டி.வி. சார்பில் நடததப்பட்டு வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஈழத்தை சேர்ந்த ஜெசிக்கா என்ற மாணவி, இரண்டாவது இடத்தை பிடித்தார்.
இறுதி சுற்றில் ஈழத்தமிழரின் தேசிய கீதமாக போற்றப்படுகிற 'விடைகொடு எங்கள் நாடே' என்ற பாடலை, 'தோல்வி நிலையென நினைத்து' என்ற பாடலுடன் இணைத்து ஜெசிக்கா பாடிய போது, அரங்கத்தில் குழுமியிருந்த விருந்தினர்கள் உள்ளிட்டோர் கண்களில் கண்ணீர் தேங்கியது. ஜெசிக்கா பாடி முடிக்கவும் நடுவர்கள் உள்ளிட்டோர் எழுந்து நின்றி கை தட்டினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் தனுஷ்,''இளம் வயதில் ஈழத்தமிழரின் வலிகளையும் வேதனைகளையும் தனது பாடலால் பதிவு செய்ய ஜெசிக்காவை பாராட்ட வார்த்தைகளே இல்லை'' என்றார்.
ஆனால் உண்மையிலேயே ஜெசிக்கா செய்த அடுத்த செயலுக்கு பாராட்ட வார்த்தைகள் கிடையாது. இந்த நிகழ்வில் அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒரு கிலோ தங்கத்தையும், தமிழக மற்றும் ஈழப்போரினால் பாதிக்கப்பட்ட அனாதை குழந்தைகளின் வளர்ச்சிக்காக வழங்குவதாக ஜெசிக்காவின் பெற்றோர் அறிவித்த போது, அரங்கத்தில் கூடியிருந்த ஒவ்வொருவரும் உருகிதான் போனார்கள்.
தற்போது கனடாவில் வசித்து வரும் ஜெசிக்கா...''இது போன்ற போட்டியில் வெற்றி பெறுவதை விட எங்கள் மக்களின் வலிகளை பதிவு செய்ததையே வெற்றியாக கருதுகிறேன்'' என்றார்.
ஜெசிக்காவின் இந்த அறிவிப்பு உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களை மட்டுமல்லாது தாய் தமிழகத்தையும் நெகிழச் செய்தது.
ஜெசிக்கா சூப்பர் சிங்கர் மட்டுமல்ல... நெகிழ்ந்து நிற்கும் ஈழத்தமிழர்கள்!-Video
Reviewed by NEWMANNAR
on
February 22, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 22, 2015
Rating:


No comments:
Post a Comment