வடமாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு- ஜோன் கெரி நம்பிக்கை
வட மாகாண மக்களின் பிரச்சினை களுக்கு விரைவில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி நம்பிக்கை வெளியிட்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும், அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று காலை 8.30 மணியளவில்
கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ்பிரேமச்சந்திரன் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி,வி. விக்னேஸ்வரன்,
வடமாகாண மக்களுக்கு அரசியல் ரீதியான நன்மைகளும், பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்குமென்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி எம்மிடம் தெரிவித்துள்ளார்.
எமது சந்திப்பு மிகவும் பயனுடையதாக இருந்தது, இருதரப்பு பேச்சுவார்த்தையில் பல விடயங்கள் பரிமாற இருந்த போதும் 25 நிமிடங்கள் மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்ததால் அதிகமான விடயங்கள் குறித்து பேசமுடியாமல் போய்விட்டது.
எங்களுடனான சந்திப்பில் இராஜாங்க செயலாளர் கலந்துரையாடுகையில், வடமாகாண மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற போதும் சூழ்நிலைக்கு ஏற்ப அரசாங்கத்துடன் கலந்துரையாடி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார்.
இதே உணர்ச்சியுடன் தான் அமெரிக்கா செயற்பட்டு வருவதாகவும் வடமாகாண மக்களும் இவ்விதம் தான் செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
வடமாகாண மக்களுக்கு அரசியல் ரீதியான மாற்றங்களும், நன்மைகளும், பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வும் ஏற்படும் என்றும் இராஜாங்க செயலாளர் ஜோன்கெரி குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், வடமாகாண மக்களின் பிரச்சினைகள் குறித்து இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி நன்றாக அறிந்து வைத்திருந்தார் என்று தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் வடமாகாண மக்கள் தொடர்பில் தான் நன்றாக அறிவதாகவும் முக்கியமான விடயங்கள் குறித்து தாம் முன்னதாகவே தெரிந்து வைத்திருந்தாகவும் ஜோன் கெரி குறிப்பிட்டதாக தெரிவித்தார்.
எனவே, வடமாகாண மக்களின் பிரச்சினைகள் குறித்து இராஜாங்க செயலாளர் முன்னதாக அறிந்திருப்பதால் எமது மக்களுக்கு பல விதத்திலும் ஒத்தாசையாக இருப்பார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வடமாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு- ஜோன் கெரி நம்பிக்கை
Reviewed by Author
on
May 04, 2015
Rating:

No comments:
Post a Comment