யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட ஈட்டுக்காக விண்ணப்பிக்கலாம்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நஷ்டஈடு பெறுவதற்காக விண்ணப்பங்களை புனர்வாழ்வு அதிகார சபைக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள நிறைவேற்று சபை தயாராகவுள்ளதாகவும் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் என்.புவனேந்திரன் தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் புனர்வாழ்வு அதிகார சபையினால் நடத்தப்பட்ட நடமாடும் சேவையில் கலந்து கொண்ட பணிப்பாளரிடம் அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் சம்மந்தமாக வினாவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
பல ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் தேக்க நிலையில் உள்ளதுடன் அதில் பலகுறைபாடுகளும் காணப்படுகின்றன. இவற்றினை நிவர்த்தி செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. எனவே உடனடியாக இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பங்களை 49, டீ.எஸ். சேனாநாயக்க மாவத்த, பொறளை, கொழும்பு. எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
புதிய அரசின் கீழ் புனர்வாழ்வு அதிகார சபை புதிய நிருவாகத்துடன் செயற்பட்டு வருகின்றது. இறந்தவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்கும் நிறுவனமாக இயங்கிய புனர்வாழ்வு அதிகார சபையானது தற்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவதற்காக பல கோணங்களில் உதவிகளை வழங்குவதற்கு முன் வந்துள்ளது.
அந்த வகையில் சுயதொழில் வாய்ப்புக்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு விசேட உதவிகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனாதைச் சிறுவர்களுக்கான உதவிகள், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளுக்கு மறுவாழ்வு அழிப்பதற்கான உதவிகள்,யுத்தத்தின்போது காயமடைந்தவர்களுக்கான உதவி தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டிருந்தால் அவற்றை புனரமைப்புச் செய்வதற்கான வங்கிக் கடன் வசதி, பாதிக்கப்பட்ட அரசாங்க உத்தியோகத்தருக்கு இரண்டரை இலட்சம் ரூபா வழங்கல் போன்ற உதவிகளை வழங்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக எமது அமைச்சர் சுவாமி நாதன், அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜா ஆகியோர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் அனுப்பி வைத்துள்ள விண்ணப்பங்களில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இதனால் அவர்களுக்கு நஷ்டஈட்டுக் கொடுப்பனவுகள் வழங்குவதில் பலத்த சிக்கல்கள் நிலவுகின்றது. எனவே தான் குறைபாடுள்ள கோவைகளை நிவர்த்தி செய்வதற்காக கோவைகளை தலைமை காரியாலயத்தில் இருந்து விண்ணப்பதாரிகளின் காலடிக்கு கொண்டு வந்துள்ளோம். இதற்காகவே நடமாடும் சேவைகளை நடாத்தி வருகின்றோம். இதனூடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நஷ்டஈடுகளை துரிதமாக வழங்கமுடியும்.
விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் பல ஆண்டுகளாகியும் விண்ணப்பதாரிகள் இன்னமும் நஷ்டஈடுகளை பெற்றுக் கொள்ளவில்லை. பல ஆண்டுகளாக விண்ணப்பித்தவர்களின் தொடர்புகள் இன்றி விண்ணப்பங்கள் தேக்க நிலையில் இருக்கின்றது.
எனவே அனைவருக்கும் எதிர்காலத்தில் அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க அதிகார சபை நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட ஈட்டுக்காக விண்ணப்பிக்கலாம்
Reviewed by Author
on
June 15, 2015
Rating:

No comments:
Post a Comment