அண்மைய செய்திகள்

recent
-

நவீன துறவியாக வேடம் போடும் மகிந்த ராஜபக்ச!


புத்த மதத்திற்கு உலகம் எங்கும் மதிப்பும், மரியாதையும், உயர்வான நிலையும் உள்ளது. அது பிறந்த இந்திய துணை கண்டத்தின் எல்லா மாநிலங்களிலும் புத்த மதத்தை பின் பற்றும் சகல இன மக்களும் உள்ளனர். இம் மதம் ஆசிய கண்டத்தில் சகல நாடுகளுக்கும் பரந்து இருந்தாலும் அதன் மகத்துவத்தை நன்கு புரிந்த மக்களாக ஜப்பான், சீனா, திபேத்து போன்று நாடுகள் விளங்குகின்றன. கௌதம புத்த பெருமானின் போதனையை ஏற்றுள்ள இலங்கையில் புத்த மதம் 236 கிறீஸ்துவிற்கு முன் ஆரம்பிக்கப்பட்டு அது சிங்கள மக்களின் முக்கிய மதமாகி விட்டது. இந்தியாவில் இருந்து துரத்தப்பட்ட விஜயன் என்ற மன்னனின் வருகைக்கு பின்னரே இம்மதம் இலங்கையில் வளரத் தொடங்கியதாக பௌத்த மதத்தின் புனித நூலான மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் இந்த மதத்தை பற்றிய மிக சுருக்கமாக கூற வேண்டுமானால் உயிருடைய எல்லாவற்றின் மீதும் அன்பும் இரக்கமும் காட்டி, உண்மையான நண்பர்களாக விளங்கப் போதிக்கின்ற ஒரு மதம் பண்டைய பர்மா அரசர்கள் இலங்கையில் பௌத்த விகாரைகளை அமைக்க பெரிதும் உதவியதாக புத்த மதமும் இலங்கையும்” என்ற நூலில் H.R.Perera என்பவரால் விபரமாக எழுதப்பட்டுள்ளது. புத்த மதத்தின் போதனைகளை பின்பற்றும் இந்த நாட்டின் பெரும்பான்மை சிங்கள அரசியல்வாதிகள் இந்த மதத்தை மூலதனமாக வைத்தே எப்போதும் அரசியல் செய்கின்றார்கள். இலங்கையின் பண்டையகால மன்னர்களும் புத்த மதத்தை நம்பியே தங்களின் ஆட்சிகளை செலுத்தி வந்தார்கள். உண்மையான புத்த மத போதனை ”யாருக்கும் எந்த தீங்கும் செய்ய கூடாது என்பதாகும்”அதன் தியான முறைகள், தற்காப்பு முறைகள், மன அமைதியை அபிவிருத்தி செய்யும் என்பதே உண்மையாகும். இவ்வாறு கௌதம புத்த பெருமானின் புனித கொள்கைகளை கொண்ட நாடாக இருக்க வேண்டிய இந்த நாடு மதத்தின் பெயரால் எங்கே செல்கின்றது? எதை செய்ய தூண்டுகின்றது? இவற்றை பற்றி நாம் சிந்தித்தால் இந்த ஆட்சியாளர்கள் பண்டைய கால மன்னர்கள் எப்படி மக்கள் ஒன்று கூடுகின்ற இடத்தில் சந்தித்து தமது கொள்கைகளை பரப்பினர்களோ அதே வழியிலேயே இந்த மகிந்த ராஜபக்சவும் ஆட்சியை பெற்றுக்கொள்ள முயல்கின்றார். இது ஒரு சாதாரண விடயமே, ஆனால் அவரிடம் இருந்து வெளியாகும் கருத்துக்கள் ஓர் ஆட்சி வெறி பிடித்த தீய கொள்கைகள் மூலம் தனது இழந்த செல்வாக்கை நிலை நிறுத்த போராடும் விதத்தையே காணக்கூடியதாக இருக்கின்றது என கருதலாம். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்ய தமிழ் மக்களே அன்று உதவினார்கள் வட- கிழக்கு மக்கள் அன்று ரணிலுக்கு வாக்களித்திருந்தால் இவர் நிச்சயம் தோல்வியையே தழுவியிருப்பார். 2005ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்கு 4,887,152 இது 50.29 வீதம் ரணில் பெற்ற வாக்கு 4,706,366 இது 48.43 வீதம் ஆகவே ராஜபக்ச பெரிய வெற்றியை அன்றும் பெற்றுக் கொள்ளவில்லை. அதன் பின் அவர் பெரும்பான்மை மக்களிடம் பௌத்த மதம் சம்பந்தப்பட்ட பல்வேறு அமைப்புக்களை ஏற்படுத்தி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமைகளை செய்யவும் அவைகளை அவரின் சகோதரர்களிடமே ஒழுங்கமைத்து பொறுப்புக்களையும் நிதிகளையும் வாரி வழங்கி ஏனைய கட்சிகளுக்குள் பிளவை ஏற்படுத்தி அதன் மூலம் தனக்கு தேவையான நீண்டகாலம் ஏன் இனிவரும் காலங்களில் இலங்கையை அவரின் வம்சமே ஆட்சி செய்ய அத்தனை வளங்களையும் பாவித்தார். பொது மக்களின் வரிப்பணத்தை வைத்து பலவிதமான திட்டங்களை செய்தபோதும் அதன் அறுவடைகள் இவருக்கு சாதகமாக்கப்பட வேண்டும் என்பதில் கவனமாக செயற்பட்டார் என்பது யாவரும் அறிந்த விடயமே. அவரின் நம்பிக்கை, வேலைத்திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் அனைத்தையும் அவரை மூன்றாவது முறை ஜனாதிபதியாக்கும் என்ற கனவில் பறந்து திரிந்தார். ஆனால்......நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்து விடும் என்ற கவிஞரின் பாடலைப் போல் இவரின் கனவு திட்டம் எல்லாம் சிதறியது. எதிர்பார்த்ததொன்று எதிர்பாராத வகையில் நடந்தால் அது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது யதார்த்தம். அந்தவகையில் இவர் எதிர்பாராது தோல்வியை தழுவினார், இருந்தும் இவரின் விசுவாசிகள் மாறுபட்ட பிரச்சாரத்தை இன்று வரை எடுத்து செல்கின்றனர். அதுவே 2005 50.29 வீதம் மகிந்த பெற்ற போது ரணில் 48.43 வீதம் பெற்றார். 2015ல் ராஜபக்ச பெற்ற வாக்குவீதம் 47.58 வீதம் 2005ல் இருந்து இருமுறை ஆட்சி செய்தவர் பணத்தையும், அதிகாரத்தையும் முறையற்ற விதத்தில் வாக்கு பெற முயன்றும் இவரால் ரணில் விக்ரமசிங்க பெற்ற வாக்குவீதத்திற்கும் குறைவாக பெற்றுள்ள போதும் இன்றும் மக்கள் இவரை விரும்புவதாகவும் நாட்டு பாதுகாவலன் என்று கூறுவதும் கேலிக்கூத்தாகும். தோல்வியை தழுவியும் பதவி ஆசை இவரையும் இவரின் மூலம் இலாபம் அடைந்தவர்களும் கூறும் நொண்டி காரணங்களை பார்க்கும் போது அழுவதா, சிரிப்பதா என தெரியவில்லை. இவருக்கு பாராளுமன்றிலும் கூட பிரச்சாரப்படுத்தும் இனவாதிகளும் மோசடியானவர்களுமே ஆதரிக்கின்றனரே தவிர நேர்மையானவர்கள் இல்லை. இந்த நிலையிலேயே இவர் இப்பொழுது தனக்கெதிரான மோசடிகளை தவிர்த்துக்உகொள்ளவும், பெரும்பான்மை மக்களின் பாதுகாவலன் என்ற போலி பிரச்சாரத்தை கொண்டு செல்ல பண்டைய மன்னர்களின் பாணியில் விகாரைகளுக்கு சென்று அங்கு மக்களை அழைத்துவர மக்களின் வரிப்பணத்தையும், மோசடியாக பெற்ற பணத்தையும் முழுமையாக பயன்படுத்தி காவி உடை அணியாத நவீன பிக்குவாக விகாரைகளை சிங்கள பௌத்தன் என்ற பெயரில் வலம் வந்து கொண்டு இருக்கின்றார். இப்பொழுது இவருக்கு தேவை நாளாந்தம் கூட்டம் நடாத்துவதும் அதற்கு ஊடகங்களை அழைத்து இனவாத கருத்துக்களை தெரிவிப்பதுமே. இந்த நவீன சிங்கள துறவிக்கு மனைவி, மக்கள், ஆசை, பாசம், மோசடி, இனஅழிப்பு, பேராசை, அதிகாரத்துடன், மலர்பூசை வைப்பதுமே நாளாந்த கடமையாக இருக்கின்றது. கௌதம புத்தரின் கொள்கைக்கு எதிரான மேற்குறிப்பிட்ட கொள்கையுடைய இவருக்கு மக்கள் மீண்டும் தண்டனை கொடுப்பார்களா அல்லது புத்தர் ஆசி வழங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த இடத்தில் நாம் முக்கியமாக குறிப்பிட வேண்டிய சில விடயங்களை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும்

  
புத்த பெருமான் ஆட்சியாளர்களுக்குரிய பத்து நெறிகளை குறிப்பிட்டுள்ளார். 

 அவையாவன, 
 1. ஈகை 2. ஒழுக்கம் 3. தியாகம் 4. நேர்மை 5. இரக்கம் 6. நன்னடத்தை 7. வெறுப்பின்மை 8. அகிம்சை 9. பொறையுடைமை 10. நட்புடைமை அத்துடன் அடிக்கடி கூடி கலந்துரையாடலையும், பேசுதலை, ஒற்றுமையாய்க் கூடி, ஒற்றுமையாய் எழுந்து, ஒற்றுமையாய் செயல்படுதலையும், மூத்தோரின் அறிவுரைகளுக்கு தலை சாய்ப்பதையும், பெண்களை மதித்து, நன்னெறி நடத்தைகள் கொள்வதையும், உண்மையான சமூக மனிதரை ஆதரிக்கவும், போற்றவும், பாதுகாக்கவும் கேட்டுக் கொண்டார். பேராசை, வெறுப்பு, தற்பெருமை ஆகியவற்றால் உண்டாக்கப்பட்ட வன்முறையின் போர், கிளர்ச்சி, ஆக்கிரமிப்பு என்பவற்றால் ஒரு நாடு உட்படுத்தப்பட விடாமல் கவனம் கொள்வது ஆட்சியாளரின் தலையாய கடமையாகும் என்றார். இழி நிலையும், ஏழ்மையும் அதிகரிக்குமாயின் தாழ்த்துதல்,களவு என்பன அதிகரிக்கும், இத்துடன் ஆயுதச் சேகரிப்பு அதிகரிக்கும். மோதல்களும், கொலைகளும் இடம்பெறும், சட்டமும் ஒழுங்கும் கெடும், மனித மதிப்புகள் குறைபட்டு விடும் என்று ஆட்சியாளர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் மகிந்த புத்த பெருமானின் போதனைகளை துறந்து அவரின் நெறிமுறைகளுக்கு அப்பால் வேறு ஒரு கொள்கையை மக்களிடத்தில் பரப்பி பௌத்த மக்களை பிழையாக வழிநடத்த முற்படுகின்றார். ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றி தக்க வைத்துக் கொள்வதற்காக பௌத்தத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றார். ஆனால் பௌத்த மதம் சொல்லும் போதனைகளை அவர் பின்பற்றவில்லை என்பது உண்மையே. தற்பொழுது உண்மையில் புத்த பெருமான் உலகில் இருந்திருந்தால் அவர் இரத்த கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.காரணம் அவர் இவ்வுலகிற்கு சொன்ன போதனைகள் இவை அல்ல. பௌத்தம் உண்மையில் அருமையான மதம், ஆனால் அது வழிநடத்தப்பட்ட அல்லது வழிநடத்தப்படும் சிலரால் பிழையாக போதிக்கப்படுகின்றது இதுவே உண்மை. பர்மாவின் இன சுத்திகரிப்பாளன் என வர்ணிக்கப்படும் 969 இயக்கத்தின் தலைவர் அஸ்வின் விராந்து தேரருடன் கூட்டிணைந்து தனது ஆட்சி காலத்தில் இங்கு பாரிய கட்டிடத்தை அமைத்து பர்மாவில் இருந்து வரவழைக்கப்பட்ட தேரர்களை கொண்டும் புத்தபெருமானின் போதனைகளுக்கு மாறாக நவீன உடை தரித்து மக்களை தவறான வழியில் இட்டுச் செல்ல முயற்சிக்கும் மகிந்த ராஜபக்ச ஓர் நவீன பௌத்த துறவியா? என்று எண்ணத் தோன்றுகின்றது.
நவீன துறவியாக வேடம் போடும் மகிந்த ராஜபக்ச! Reviewed by Author on June 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.