அண்மைய செய்திகள்

recent
-

ஜெனீவாவில் எதிரொலித்த ஈழக் கதறல்கள்! இறுதி விசாரணையின் பின் இலங்கையில் என்ன நடக்கும்?

இலங்கை அரசின் மீதான பிடி நாளுக்குநாள் இறுகிக்கொண்டே செல்கிறது என்பதை ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 29-வது கூட்டத் தொடர் நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
என  பா.ம.க-வின் செய்தித் தொடர்பாளரும் பசுமைத் தாயகம் அமைப்பின் நிர்வாகியுமான வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் என்ற தலைப்பில் இணைக் கூட்டம் ஒன்றையும் பிரித்தானிய தமிழர் பேரவை பங்களிப்போடு நடைபெற்றுள்ளது .

இது தொடர்பில் விகடன் க்கு அளித்த செவ்வியில் கே.பாலு தெரிவிக்கையில்,

ஜெனீவாவில் இப்போது நடைபெற்றுள்ள இந்தக் கூட்டம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது?

2009-ல் இலங்கையில் போர் முடிந்த நிலையில் எல்லாமே முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தோம். தமிழ்நாட்டில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்  வெடித்தன. ஆனால், இலங்கையில் மட்டும் காட்சிகள் துளிகூட மாறாமல் அப்படியே இருந்தன. ஈழத் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டார்கள், ஏமாற்றப்பட்டார்கள், விரட்டப்பட்டார்கள். அப்படிப்பட்ட சூழலில்தான் பசுமைத் தாயகம் அமைப்பானது புலம்பெயர்ந்து வாழக்கூடிய ஈழத் தமிழர்களின் உதவியோடு பாதிக்கப்பட்ட மக்களை ஐ.நா முன் நிறுத்தி, ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி விசாரணை வேண்டும் என்பதை உரக்கச் சொல்லியது. இன்று இலங்கைக்குக் கடிவாளம் போடக்கூடிய ஒரே அமைப்பு ஐ.நா மட்டும்தான். வருகிற செப்டம்பர் மாதம் ஐ.நா-வின் மனித உரிமை ஆணையத்தின் 30-வது கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. அதில், இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு குறித்த அறிக்கையை ஐ.நா-வின் உண்மை கண்டறியும் குழு தாக்கல் செய்யவிருக்கிறது. அந்த அறிக்கைதான் ராஜபக்‌ஷேவின் ஒட்டுமொத்த தலையெழுத்தையும் மாற்றி அமைக்கப் போகிறது.

இறுதி விசாரணை அறிக்கை வெளிவருவதில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா?

நிச்சயமாக. இலங்கை அரசு ஒரு மிகப் பெரிய இனப்படுகொலையை நிகழ்த்தியிருக்கிறது. ஈழத் தமிழர்களைக் கொத்து கொத்தாகக் கொன்று குவித்தது மட்டுமில்லாமல் வெள்ளை கொடியேந்தி சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் நிலை மர்மமாகவே இருக்கிறது. இவை அனைத்துக்கும் எங்களிடம் ஏகப்பட்ட ஆதாரங்கள் உள்ளன. அதனை ஐ.நா-வில் சமர்ப்பித்துவிட்டோம். இலங்கை அரசை போர்க் குற்றவாளியாக அறிவிக்கும் அந்த அறிக்கை வெளிவருவதை  இலங்கை விரும்பவில்லை. அதனால், பல சூழ்ச்சிகளைக் கையாண்டு, அறிக்கை வெளிவரவிடாமல் தடை ஏற்படுத்தி வருகின்றனர்.

இணைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐ.நா-வின் முக்கிய சாட்சிகள் யார்?



விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். நடேசனின் மகன், புலித்தேவனின் மனைவி குறிஞ்சி, மலரவனின் மனைவி சுசிலாம்பிகை, உதயகுமாரின் மனைவி ஆகியோர் இதில் கலந்துகொண்டு இத்தனை ஆண்டுகாலம் தாங்கள் அனுபவித்து வரும் வேதனைகளைக் கண்ணீரோடு பதிவுசெய்தனர். அவர்களுடைய விசும்பல்களைத் தமிழர்கள் நீதிக்கான நல்லெண்ண தூதுவர் லீ ஸ்காட் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்ட நிபுணருமான ஜானினி கிரிஸ்டி பிரிமிலோ ஆகியோர் குறித்துக்கொண்டனர். இவர்களின் சாட்சியம் கல்நெஞ்சர்களையும் கரைக்கும். இந்த நான்கு சாட்சிகளுடன் இன்னும் ஏராளமான சாட்சிகள் ஐ.நா முன் வர தயாராக இருக்கிறார்கள். அவர்களைச் சரியான நேரத்தில் நாங்கள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நிறுத்துவோம்.



பசுமைத் தாயகம் என்பது சுற்றுச்சூழல் அமைப்பு. ஈழத் தமிழர் விவாகாரத்தை  இது கையில் எடுத்திருப்பது சந்தர்ப்பவாதம் என்று சிலர் சொல்கிறார்களே?

ஈழத் தமிழர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தர வேண்டும் என்பதற்காகத்தான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். சிலர், ஐ.நா-வின் நடவடிக்கைகளில் நம்பிக்கையின்றி எங்களுடைய முயற்சிகளை கொச்சைப்படுத்தி இருக்கிறார்கள். நினைவு தினத்தை அனுசரித்துவிடுவதன் மூலம் மட்டுமே இலங்கையில் அமைதி திரும்பிவிடாது. ஐ.நா மன்றத்தின் விசாரணைகளை நம்புங்கள்.



இறுதி விசாரணை அறிக்கைத் தாக்கலுக்குப் பிறகு என்னென்ன மாற்றங்களை இலங்கையில் எதிர்பார்க்கலாம்?

இலங்கையில் நடைபெற்றது ஓர் இனப்படுகொலை. அதை கச்சிதமாக நிறைவேற்றியவர் ராஜபக்‌ஷ என்று விசாரணை அறிக்கை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, வந்தால் இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்றாக வாழ முடியாது. தமிழர்கள் வாழ்வதற்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்படும். மேலும், ராஜபக்‌ஷ போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவர் என்னென்ன போர்க் குற்றங்களில் ஈடுபட்டார் என்பதை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்கும். இதைத்தான் பசுமைத் தாயகமும் பா.ம.க-வும் எதிர்பார்க்கிறது. செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் 30-வது ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.



ஜெனீவாவில் எதிரொலித்த ஈழக் கதறல்கள்! இறுதி விசாரணையின் பின் இலங்கையில் என்ன நடக்கும்? Reviewed by Author on July 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.