அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க பிரேரணைக்கு த.தே.கூட்டமைப்பு வரவேற்பு


இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய நம்பகரமான நீதிச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி திருத்தப்பட்ட அமெரிக்காவின் புதிய பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி அமெரிக்கா கடந்த வாரம் வெளியிட்ட நகல் பிரேரணை வரைபில் காணப்பட்ட 26 பந்திகள் 20 பந்திகளாக குறைக்கப்பட்டு் திருத்தங்களுக்குள்ளாக்கப்பட்ட பிரேரணை ஜெனிவா நேரப்படி நேற்று 5.15 மணியளவில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து அமெரிக்கா நேற்றைய தினம் தனது பிரேரணையை சமர்ப்பித்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

குறிப்பாக அப்பிரேரணையில் சர்வதேச குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் , விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய நம்பகரமான நீதிச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதாகும்.

இலங்கையின் நீதித்துறைக்கு கிடைத்த வெற்றியாகும். இந்நீதிமன்ற செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்கும், சர்வதேசத் தரப்பினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பூரண பங்களிப்பை வழங்கவுள்ளது.

அதேநேரம் அரசாங்கம் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடு என்ற வகையில் இவ்விடயங்களை கருத்திற்கொண்டு தனது ஒத்துழைப்புக்களை வழங்கி முழு அளவிலான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.

மேலும் இப்பிரேரணையில் சிபார்சு செய்யப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக நீதிமன்றம் உருவாக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதனூடாக கடந்த காலத்தில் காணப்படும் நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கானவொரு வியத்தகு மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியமுள்ளது.

இவ்வரைபானது பல்வேறு கடினமான நிலைமைகளில் கருத்தொற்றுமை மிக்கதாகவுள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையிலும் பாதிக்கப்பட்ட தரப்பிற்கான பொறுப்புக்கூறும் தரப்பினர் என்ற அடிப்படையிலும் அவர்கள் திருப்திகொள்ளும் வகையில் சொற்றொடர்கள் அமையவேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தோம்.

ஆகவே இ்ந்த வரைபில் கூறப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நல்லிணக்கத்திற்கான நீண்ட பயணத்தின் ஆரம்பமாக அமையும்.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக குரல் கொடுத்து அவர்களின் நம்பிக்கைகளை வெற்றிபெறச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து அரசாங்க மற்றும் அரச சார்பற்ற தரப்பினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்புக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் அறிவித்துள்ளது.
அமெரிக்க பிரேரணைக்கு த.தே.கூட்டமைப்பு வரவேற்பு Reviewed by NEWMANNAR on September 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.