அரசியல் தீர்வு விடயத்தில் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிடக்கூடாது : திஸ்ஸ விதாரண
அரசியல் தீர்வு விடயத்தில் இனவாதத்திற்கு சந்தர்ப்பம் அளித்து தமிழ் மக்களை மீண்டும் அரசாங்கம் ஏமாற்றி விடக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வெற்றிகொள்வதும் காலத்தின் தேவையாகவுள்ளது என்று முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாஜ கட்சியின் பொது செயலாளருமான போராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கான முன்னெடுப்புகள் நாட்டின் எதிர்காலத்திற்கு பங்களிப்பு செய்யும் என நம்பிக்கை வைக்க முடியவில்லை. பொருளாதார அபிவிருத்திகள் படுபாதாளத்தில் விழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்;
அனைவராலும் ஏற்றுக்கொள்ள கூடிய தேசிய தீர்வு திட்டம் ஒன்றே தற்போது நாட்டிற்கு தேவைப்படுகின்றது. அதனை நோக்கி கடந்தகால நகர்வுகள் காணப்பட்டன. ஆனால் இன்று அவ்வாறு இல்லை. நிலைமை பின்தங்கியதாகவே உள்ளது. இதனால் தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றமடையும் நிலையே உருவெடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கம் அபிவிருத்தி மற்றும் அரசியலமைப்பு திருத்தம் என கூறி உண்மையான விடயங்களை காலம் கடத்தி வருகின்றது .
கடந்த அரசாங்கம் அரசியல் தீர்வு விடயத்தில் குறிப்பிட்டளவு இலக்குகளை அடைந்திருந்தது. ஆனால் தற்போது அந்த முன்னேற்றங்கள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. மக்களை ஏமாற்றும் நோக்கமே தற்போதைய அரசாங்கத்தின் உள்ளடக்கமாகவும் காணப்படுகின்றது. ஆகவே அந்த நிலை மாற்றமடைய வேண்டும். சர்வக்கட்சி குழு அன்று பல்வேறு பரிந்துரைகளை தேசிய பிரச்சினையை மையப்படுத்தி முன்வைத்தது.
எனவே இந்த விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இனவாதம் மற்றும் இன்னோரன்ன காரணங்களுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவார்களோயானால் மீண்டும் யுத்த சூழலுக்கே வித்திடுவதாக அது அமைந்து விடும்.
தற்போதைய அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பிற்கான முன்னெடுப்புகள் கூட நாட்டின் எதிர்காலத்திற்கு உதவுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. வெளிப்படைத்தன்மை இந்த விடயத்தில் மிகவும் அவசியமானதொன்றாகும்.
பொருளாதார அபிவிருத்தி பணிகள் இன்று ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவ திட்டம் கூட திருத்தங்களுக்கு உள்ளாக்கும் நிலை ஏற்பட்டது. ஆகவே நாட்டில் தற்போது காணப்படும் நிலை ஏற்புடையதல்ல. இந்த 2016 புதிய ஆண்டிலாவது அரசியல் தீர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படவேண்டும் என்றார்.
அரசியல் தீர்வு விடயத்தில் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிடக்கூடாது : திஸ்ஸ விதாரண
Reviewed by Author
on
January 02, 2016
Rating:
Reviewed by Author
on
January 02, 2016
Rating:


No comments:
Post a Comment