அப்பா என்னை தூக்க முன் பெரியவளாகி விடுவேன்! தந்தைக்காக ஏங்கும் சிறுமி!

போர் முடிந்துவிட்டது. மீள்குடியேற்றம், அபிவிருத்தி என்பன நடந்தவண்ணமுள்ளன. மீள்குடியேறிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் அரசாங்கத்தாலும், வடமாகாண சபையாலும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால் எந்தவித உதவிகளும் இன்றி வாழ்வதற்காக போராடும் நிலையில் துன்பங்களை சுமந்தவாறு இன்றும் பல குடும்பங்கள் வாழ்கின்றன. போரின் வடுக்கள் அவர்களிடம் இருந்தும் இன்றும் மறையாத நிலையே காணப்படுகின்றது. அவ்வாறான ஒரு துன்பத்துடன் வாழும் குடும்பத்தின் பதிவே இது.
மன்னார், மடு, இரணை இலுப்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் சிவலிங்கம் சேமமாலினியின் குடும்பத்தின் சோகத்திற்கு இன்று வரை முடிவில்லை. வன்னியின் வட்டக்கச்சிப் பகுதியில் குடியிருந்த சேமமாலினியின் குடும்பம், இறுதி யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முள்ளியவாய்க்கால், வட்டுவாகல் என நகர்ந்து ஓமந்தை ஊடாக இராணுவ பிரதேசத்திற்குள் வந்தார்கள்.
பிள்ளை பிறந்து ஒரு மாதமே ஆகியிருந்த நிலையில் 2009 மே 20 ஆம் திகதி சேமமாலினியின் கணவன் நல்லான் சிவலிங்கம் ஓமந்தையில் இராணுவத்திடம் சரணடைந்தார். சரணடைபவர்கள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுவார்கள் என இராணுவம் மற்றும் அரசாங்கம் கூறியதன் அடிப்படையில் சிவலிங்கம் சரணடைந்தார்.
இன்று சரணடைந்த பன்னிரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் புனர்வாழ்வின் பின் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள போதும், சிவலிங்கம் மட்டும் இன்றும் தமிழ் அரசியல் கைதிகளின் வரிசையில் சிறையில் வாடுகிறார்.
அனுராதபுரம் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு எந்தவொரு முடிவும் இன்றி கடந்த 6 வருடங்களைக் கடந்தும் இவரது வழக்கு மீதான விசாரணை தொடர்கிறது. பிறந்து ஒரு மாதத்தில் தனது தந்தையை பறிகொடுத்த குழந்தை இன்று 6 வயது நிரம்பிய நிலையில் 'அப்பா எப்ப வருவார்... மைத்திரி மாமா அப்பாவை விடமாட்டடாரா?
என்னை அப்பா எப்ப தூக்குவார்.. அப்பா தூக்கும் முன்பு நான் வளர்ந்து விடப்போறன்..' என தினமும் தாயிடம் கேட்டபடி உள்ளார். சிறுமியின் கேள்விக்கு விடை சொல்ல முடியாத தாயார் தினமும் கண்ணீர் விட்டழுதபடி உள்ளார். இந்த சோகத்திற்கு முடிவு எப்போது...?
இது ஒரு புறமிருக்க, வயிற்றுப் பிழைப்புக்கான போராட்டம் மறுபுறம் நடைபெறுகிறது. தோட்டம், கோழி வளர்ப்பு என தினமும் போராட்ட வாழ்க்கை நடத்தி தனது வாழ்வாதாரத்தை போக்குகிறார் சேமமாலினி.
6 வயது பிள்ளையுடன் வாழ்வாதாரத்தை ஈட்ட முடியாது போராடும் இக் குடும்பத்திற்கு அரச உதவிகள் கிடைக்காமைக்கு காரணம் என்ன...?
அப்பா என்னை தூக்க முன் பெரியவளாகி விடுவேன்! தந்தைக்காக ஏங்கும் சிறுமி!
Reviewed by Author
on
January 28, 2016
Rating:
Reviewed by Author
on
January 28, 2016
Rating:



No comments:
Post a Comment