அண்மைய செய்திகள்

recent
-

ஈழத் தமிழ் மக்களினால் மதங்கள் கடந்து நேசிக்கப்படும் உன்னத மனிதர் மன்னார் ஆயர்

இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்பு யுத்தத்தின் பின்னர் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேருக்கு என்ன நடந்தது என்று குரல் எழுப்பியவர் மதிப்பிற்குரிய மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பு அவர்களே.

இலங்கையில் நடந்த இன அழிப்பு யுத்தம் குறித்து தமிழ் தலைமைகள் கூட மௌனித்திருந்த நிலையில் அதை தன்னுடைய தெளிவான பார்வை ஊடாக முறையாக முன்வைத்தார் அல்லது கேள்வி எழுப்பினார்.

ஈழத்தில் பல மதபோதகர்களுக்கு என்ன நடந்தது என்பதை கடந்த காலத்தில் பார்த்திருக்கிறோம். ஜிம்பிறவுண் அடிகளாரை எவரும் எளிதில் மறந்துவிட முடியாது. அவர் 2006ம் ஆண்டு யுத்தம் மூண்ட சமயத்தில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்.

மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த கருணாரட்னம் அடிகளாரை அன்றைய அரசு கிளைமோர் தாக்குதல் ஊடாக கொன்றது.

தமிழர் தாயகத்தில் ஆங்கிலக் கல்வி கற்பித்து வந்த அருட்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறுதி யுத்தத்தில் இலங்கை அரச படைகளுடன் பல நூறு போராளிகளுடன் சரணடைந்து காணாமல் போனார்.

மதகுருவுக்கான வெள்ளை உடையுடன் சரணைடைந்த அருட்தந்தை பிரான்சிஸை இலங்கைப் படைகள் என்ன செய்தார்கள்? போராளிகளுடன் சாட்சியாக சரணடைந்தவரை இராணுவப்படைகள் என்ன செய்தன? இவ்வாறான ஒரு சூழலில்தான் மன்னார் ஆயரின் குரல் மிகுந்த கவனத்தை பெறுகிறது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யுத்த வெற்றியின் மமதையில் இருந்தபோது இன அழிப்புப் போரில் கொல்லப்பட்டவர்களின் கதை முடிந்துவிட்டது என்று இருந்தபோது ராஜபக்சவை நோக்கி ஆயர் அவர்கள் காணாமல் போன ஒன்றரை லட்சம் பேருக்கு என்ன நடந்தது என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

அது ஈழச் சனத்தின் நீதி குறித்த உள்ளக்கிடக்கியின் மிக முக்கியமானதொரு கேள்வியாகும்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜகபக்ச சர்வதேச அழுத்தங்களை குறைக்கும் முகமாகவும் இனப்படுகொலையை மறைக்கும் விதமாகவும் தனக்குத்தானே முன்னெடுக்கும் உள்ளக விசாரணையாக காணாமல் போனோர் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்தபோது மன்னார் ஆயர்கள் அவர்கள் யுத்தத்தின் இறுதியில் என்ன நடந்தது என்பது குறித்து சாட்சியம் அளித்தார்.

பின்னர் அந்த ஆணைக்குழுவில் நம்பிக்கை இல்லை என்பதை ஆணைக்குழுவின் முன்னாள் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

உண்மையும் நீதியும் இல்லாத இடத்தில் நல்லிணக்கம் இருக்கப்போவதில்லை என்றும் உண்மையில் மக்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அதற்காகவே சாட்சியம் அளிப்பதாகவும் மன்னார் ஆயர் குறிப்பிட்டார்.

கடந்த வருடம் பெப்ரவரி மாத்தில் கிளிநொச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் ஆயர் பல முக்கியமான விடயங்களைக் குறித்து பதிவு செய்திருந்தார். கிட்லர் மேற்கொண்டதைப்போல துப்பாக்கியால் சுட்டுக்கொன்று அழிப்பது மாத்திரம் இன அழிப்பல்ல.

பல்வேறு நுட்பமான நடவடிக்கைகள் மூலமும் ஓர் இனத்தை அழிக்கலாம். சிங்கள மக்களிடம் உள்ள அதி உச்சமான சிங்கள தேசிய உணர்வின் அச்சத்தால் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன.

தமிழ் மக்கள் தனித்துவமான சுய நிர்ணய உரிமை கொண்ட தேசிய இனம் தமிழ் மக்களின் தேசிய உரிமைகளுக்கு இடமளிப்பதன் மூலமே இந்த நாட்டை அமைதிப்படுத்த இயலும்.

இலங்கை சுதந்திரம் அடைந்தது என்ற விடயத்தில் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் என்பது ஓர் மாயையாக திணிக்கப்பட்டது தமிழ் மக்கள் இன்னமும் சுதந்திரத்தை அடையாத நிலையில் வாழ்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்தி இலங்கை அரசாங்கம் தமிழ் இனத்திற்கு எதிரான யுத்தத்தை இன்னமும் நிறுத்தவில்லை.

தமிழ் மக்களின் உரிமைக்கு எதிராகவும் அபிலாசைகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழ் மொழி மற்றும் நில அபகரிப்பு என்பது உலக சரித்திரத்தில் ஓர் இனம் எவ்வாறு அழிக்கப்பட்டதோ அவ்வாறு நடை பெறுகின்றது.

இலங்கையில் நான்கு தடவைகள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனக் கலவர நடவடிக்கைகள் இன அழிப்புச் செயற்பாடுகள். அந்த இன அழிப்பு தொடர்ந்து இடம்பெறுகின்றது.

மக்கள் போரில் கொல்லப்பட்ட பின்னர் தொடர்ந்தும் இந்த நாட்டில் தமிழ் மக்களை வாழ விடாது வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலமையை உருவாக்கியதுடன் அரசாங்கமே மக்களை அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும் செப்டம்பர் மாதம் கட்டாயம் அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும்.

அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். புதிய இலங்கை அரசாங்கம் நடத்தும் உள்ளக விசாரணை என்பது உண்மையை கண்டறிவதற்கானது என தான் நம்பவில்லை. அவை உண்மையை மறைப்பதற்கான ஏற்பாடு. இதற்காகவே இலங்கை அரசாங்கம் ஓடி ஓடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.

உண்மையின் அடிப்படையில் நீதியின் அடிப்படையில் இந்தப் பிரச்சினையை அணுகுவதன் ஊடாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

மக்களின் உரிமையை பாதுகாப்பும் பொறுப்போடு உருவாக்கப்பட்ட ஐ.நா தமிழ் மக்களுக்கு எதிரான அநீதியான வரலாற்றின் இறுதியிலேயே எம்மீது கவனம் செலுத்தியது. அதனை ஐ.நா உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் என்பது ஒரு நாட்டுக்கு எதிரானது அல்ல. உலக மக்களின் மனித உரிமைகளுக்கு எதிரானது.

உலக மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் ஓர் நடவடிக்கையே உலகப் பொது நடவடிக்கை.” தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தங்கள் குரலால் பெரும் பங்களித்தவர்களில் மன்னார் ஆயர் முக்கியமானவர்.

ஈழத் தமிழ் மக்களினால் சமயம் கடந்து நேசிக்கப்பட்ட உன்னத மனிதர்.

கடந்த சில மாதங்களின் முன்னர் மன்னார் ஆயர் சுகவீனமுற்றபோது ஈழத் தமிழர்கள் பலரும் அந்தச் செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

அவரது குரல் ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்காக என்றும் ஒலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பினால் ஏற்பட்டதே அந்த அதிர்ச்சி.

மன்னார் ஆயர் மதிப்பிற்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை தனது பதவியை துக்கிறார். அவர் சுகவீனமடைந்து தற்போது சுகமடைந்துள்ளபோதும் தனது பணிகளை முன்னெடுக்க முடியாத நிலையில் தனது பதவியை துறக்கிறார்.

மன்னார் ஆயர் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ்ந்து தமிழ் இனத்தின் விடுதலைக்காக உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும் என்பதே ஈழத் தமிழ் மக்களின் பெரும் எதிர்பார்ப்பாகும்.

தீபச்செல்வன்
ஈழத் தமிழ் மக்களினால் மதங்கள் கடந்து நேசிக்கப்படும் உன்னத மனிதர் மன்னார் ஆயர் Reviewed by NEWMANNAR on January 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.