கிளிநொச்சியில் சட்டம் ஒழுங்கை இறுக்கமாக நடைமுறைப்படுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தல்....
கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை இறுக்கமாக நடைமுறைப்படுத்தி குற்றச்செயல்கள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு புதிதாக கிளிநொச்சி மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித சிறிவர்தனவுக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார்.
யாழ் மேல் நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்னிலையில் ஆஜராகிய கிளிநொச்சி மாவட்டத்தின் புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அந்த மாவட்டத்தின் குற்றச் செயல் நிலைமைகளை எடுத்துரைத்த நீதிபதி இந்த அறிவுத்தல்களை வழங்கியுள்ளார்.
அந்த அறிவுறுத்தல்களில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த ஒரு வருடமாக குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் பல தண்டனை தீர்ப்புக்களை வழங்கி வருவதால் அங்கு குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.
கிளிநொச்சி நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு மற்றும் மீளாய்வு மனுக்கள் யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது, கிளிநொச்சி மாவட்ட நீதவான்களின் தீர்ப்புக்கள் சட்ட வரம்பு எல்லையில் வழங்கப்பட்டுள்ளன என்ற அடிப்படையில் அந்த மேன் முறையீடு மற்றும் மீளாய்வு மனுக்கள் மேல் நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் யாழ் மேல் நீதிமன்றம் தனது தீர்ப்புக்களின் மூலம் கிளிநொச்சி பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கும் கிளிநொச்சி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதில் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.
எனினும் கிளிநொச்சி மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை, மரக்கடத்தல்கள், காடுகள் அழிப்பு நடவடிக்கைகளின் மூலமான மரக்கடத்தல்கள், போதைவஸ்து, கஞ்சா பாவனை, மற்றும் மது போதையில் வாகனம் செலுத்துகின்ற குற்றச் செயல்கள் என்பவற்றைக் கட்டுப்படுத்த பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு விடேச பணிப்புரைகள் பிறப்பித்து, தொடர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
விசேடமாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடுகின்ற பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் அதிகாலை வேளையில் கிளிநொச்சி மாவட்டத்தை மிக வேகமாக குறுக்கறுத்துச் செல்வதால், விபத்துக்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே, அதிகாலை நேரங்களில் போக்குவரத்து பொலிஸ் பிரிவினரை வீதிகளில் இறக்கி வேகத் தடுப்பை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிளிநொச்சியில் நெற்பயிர் செய்யும் காணிகள் வெளிமாவட்டத்தவர்கள் விலைக்கு வாங்கி நெற்பயிர் காணிச் சட்டடத்திற்கு முரணாக அதில் மண்ணை நிரப்பி மேட்டுக் காணிகளாக்கி, கட்டிடங்கள் கட்டப்படுவது சம்பந்தமாக முறைப்பாடுகள் செய்யப்பபட்டிருக்கின்றன. இந்த விடயங்கள் பொலிஸாரின் கண்காணிப்புக்குள் வரும்போது, அந்தப் பகுதி நெற்காணிகள் சம்பந்தமான விடயங்களைக் கையாளும் விவசாய உதவிப் பணிப்பாளர் மற்றும் அரச அதிபர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வயற் காணிகளை நிரப்புவதற்குரிய மண்ணை வெளியில் கொண்டு வருவதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படக் கூடாது என்றும் பொதுவாக மண் ஏற்றி வரும் ரக்டர், டிப்பர் வாகனங்களைக் கண்காணித்து சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்டத்திற்குப் புதிதாக நியமனம் பெற்றுள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சியில் சட்டம் ஒழுங்கை இறுக்கமாக நடைமுறைப்படுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தல்....
Reviewed by Author
on
June 17, 2016
Rating:

No comments:
Post a Comment