நோயாளியின் உயிரை பறித்த வாட்ஸ் அப் சிகிச்சை: திருவாரூரில் வேதனை சம்பவம்!
திருவாரூர் மாவட்டத்தில் வாட்ஸ் அப் மூலம் தவறான சிகிச்சை அளித்ததால், ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் நார்த்தங்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இதில் கால் முறிவு ஏற்பட்ட ரமேஷ், திருவாரூரில் தான் வழக்கமாக எலும்பு முறிவு சிகிச்சை பெற்று வரும் டாக்டர் அன்சாரியை தொடர்பு கொண்டுள்ளார்.
அவர் மற்றுமொரு தனியார் மருத்துவமனையின் பெயரை கூறி அங்கு செல்லுமாறும் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து, டாக்டர் அன்சாரி வழிக்காட்டுதலின் படி திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ரமேஷ் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
அங்கு ரமேஷ்-க்கு எக்ஸ்ரே மற்றும் ரத்தப் பரிசோதனை எடுக்கப்பட்டு, அவை அனைத்தும் வாட்ஸ்அப் மூலம் டாக்டர் அன்சாரிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
அதனையடுத்து, டாக்டர் அன்சாரி தொலைபேசி மூலமாக சிகிச்சை அளிக்கும் விதத்தை கூறியிருக்கிறார். அதன்படி, டாக்டர் சண்முகம் சிகிச்சை அளித்திருக்கிறார்.
இதில் ரமேஷ்-க்கு ஊசி மூலம் செலுத்தப்பட்ட மருந்து ஏற்றுக் கொள்ளாமல், ரத்த அழுத்தம் மற்றும் நாடித் துடிப்பு குறைந்து, வலிப்பு ஏற்பட்டு சிறிது நேரத்தில், நள்ளிரவு சுமார் 12.20 மணியளவில் இறந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அருகில் இருந்து பார்த்த உறவினர்கள் ஆத்திரமடைந்து, மருத்துவமனை கண்ணாடி, டி.வி மற்றும் உயர்ரக மருத்துவ உபகரணங்களை அடித்து நொறுக்கியிருக்கின்றனர்.
இதை தடுக்க வந்த மருத்துவமனை ஊழியர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 20-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.
கால் முறிவுக்கு சிகிச்சை பெற வந்தவருக்கு, நேரடியாக சிகிச்சை அளிக்காமல், வாட்ஸ்அப் மூலமாக சிகிச்சை அளித்ததால் ஒருவர் இறந்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நோயாளியின் உயிரை பறித்த வாட்ஸ் அப் சிகிச்சை: திருவாரூரில் வேதனை சம்பவம்!
Reviewed by Author
on
June 19, 2016
Rating:

No comments:
Post a Comment