உலக சம்பியனை வெளியேற்றிய பிரான்ஸ் இறுதிப்போட்டியில் போர்த்துக்கல்லை சந்திக்கிறது
யூரோ கிண்ணம் 2016 கால்பந்து தொடரின் 2 ஆவது அரையிறுதிப் போட்டியில் உலக சம்பியன் ஜேர்மனியை 2:0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்ற பிரான்ஸ் இறுதிப்போட்டியில் போர்த்துக்கல்லுடன் மோதுகின்றது.
யூரோ 2016 இன் 2 ஆவது அரையிறுதிப் போட்டி பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்றது.
இரு அணிகளும் 28 முறை மோதியுள்ளன. பிரான்ஸ் 12 வெற்றிகளையும் ஜேர்மனி 10 வெற்றிகளையும் பெற்றுள்ளன. எனினும் யூரோ கிண்ண போட்டிகளில் இரு அணிகளும் மோதுவது இதுவே முதல் முறையாகும்.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற்ற இப்போட்டியில் இரு அணி வீரர்களும் ஒன்றுக்கொன்று சளைக்காதவர்கள் போன்று மிக சிறப்பாக விளையாடினர்.
முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் சிறப்பாக தடுத்து விளையாடினர்.
இந்நிலையில் முதல் பாதி முடிவடையும் நேரத்தில் பிரான்சிற்கு பெனல்ட்டி உதை கிடைத்தது. பெனல்ட்டி உதையை மிக அருமையாக கோலாக்கினால் பிரான்ஸின் கிரெய்ஸ்மன். பெனல்ட்டி உடன் முடிவடைந்த முதல் பாதியில் பிரான்ஸ் 1-0 என முன்னிலை வகித்தது.
இந்நிலையில் இரண்டாம் பாதியில் ஆட்டத்தில் ஜேர்மன் பதில் கோல் போடுவதற்கு மிகவும் கடுமையாக முயற்சித்தது.
எனினும் பிரான்ஸின் சிறப்பான தடுப்பாட்டம் ஜேர்மனியின் கோல் போடும் வாய்ப்புக்களை முடக்கியது.
ஆட்டத்தின் 72 ஆவது நிமிடத்தில் ஜேர்மனியின் பின்னிலை தடுப்பாட்ட வீரர்களின் தவறான பந்து பரிமாற்றத்தால் மீண்டும் கிரெய்ஸ்மன் கோல் அடித்து ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இறுதிவரை போராடிய உலக சம்பியன் ஜேர்மனிக்கு கோல் எதுவும் போடமுடியாது போக போட்டியின் முடிவில் பிரான்ஸ் 2-0 என ஜேர்மனியை வீழ்த்தி 3 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இப்போட்டியில் ஜேர்மனியை வீழ்த்தியதன் மூலம் போட்டியை நடத்தும் நாட்டிற்கெதிராக வெற்றிபெறும் ஜேர்மனியின் ஆதிக்கத்தை அடக்கியது பிரான்ஸ்.
இதற்கு முன் ஜெர்மனி போட்டியை நடத்தும் நாட்டை 4 முறை அரை இறுதிப்போட்டியில் வீழ்த்தியிருந்தது.
இப்போட்டியில் ஜேர்மனி தோற்றிருந்தாலும் ஜேர்மன் வீரர் சுவின்ஷ்டைகர் இப்போட்டியில் விளையாடியதன்மூலம் 3 அரைஇறுதிப்போட்டியில் விளையாடிய வீரர் என்ற ரொனால்டோவின் சாதனையை சமப்படுத்தினார்.
உலக சம்பியனை வீழ்த்திய பிரான்ஸ் எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறும் இறுதிப்போட்டியில் போர்த்துக்கல் அணியுடன் மோதவுள்ளது.

உலக சம்பியனை வெளியேற்றிய பிரான்ஸ் இறுதிப்போட்டியில் போர்த்துக்கல்லை சந்திக்கிறது
Reviewed by Author
on
July 09, 2016
Rating:

No comments:
Post a Comment