அண்மைய செய்திகள்

recent
-

முதல்வர் விக்னேஸ்வரனின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!


வட மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவருமாகிய நீதியரசர் சீ. வி. விக்னேஸ்வரன் அவர்களின் உயிருக்கு உலை வைக்கும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் தமிழ் மக்களைக் கதிகலங்கச் செய்துள்ளது.

நடந்து முடிந்த எழுக தமிழ் மாபெரும் எழுச்சிப் பேரணி வடக்கின் முதலமைச்சருக்கு தமிழ் மக்களிடம் இருக்கக்கூடிய அதிஉயர்ந்த செல்வாக்கை வெளிக்காட்டியதை அடுத்து, தென்பகுதியில் இருக்கக்கூடிய பேரினவாதிகள் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராகக் கண்டனம் வெளியிடத் தலைப்பட்டுள்ளனர்.

கூடவே முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கான செல்வாக்கு தமிழ் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கண்டு பொறுக்க முடியாத ஒரு சில தமிழ் அரசியல்வாதிகளும் முதலமைச்சருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதைப் பார்க்கும் போது தென்பகுதிப் பேரினவாதிகளும் வடக்கிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் இணைந்து வடக்கின் முதலமைச்சரை வெளியேற்ற திட்டம் தீட்டுகின்றனர் என்ற முடிவுக்கு வருவதில் தவறில்லை.

இதை உறுதி செய்யும் வகையில் சில முக்கிய தகவல்களும் கசியத் தொடங்கியுள்ளன.

விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர் தமிழ் மக்கள் தங்கள் உரிமை தொடர்பிலோ அன்றி வேறு எந்த விடயம் குறித்தோ குரல் கொடுக்கக் கூடாது என்பது பேரினவாதிகளின் நிலைப்பாடாக உள்ளது.

எனினும் பேரினவாதிகளின் இந்த நிலைப்பாட்டுக்கு வடக்கின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தடையாக இருக்கின்றார்.

ஏற்கனவே தமிழ் மக்களின் முக்கிய பிரதிநிதிகளுக்கு பதவிகளைக் கொடுத்து அவர்களை வாலாயம் செய்து வைத்திருக்கும் நிலையில், முதல்வர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் உரிமைகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வெளிப்படையாகத் தெரிவித்து வரும் கருத்துக்களால் தென்பகுதி அதிர்ந்து போயுள்ளது.

கூடவே நாங்கள் சொன்னால் தமிழ் மக்கள் அதை மீற மாட்டார்கள் என்று தென்பகுதிக்கு உத்தரவாதம் கொடுத்த ஒரு சில தமிழ் அரசியல்வாதிகளுக்கும் வடக்கின் முதல்வரின் வெளிப்படைத் தன்மை பேரிடியைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில்தான் வடக்கின் முதல்வரைப் பதவியில் இருந்து ஏதோவொரு வகையில் விலகச் செய் வதற்கான சதிகள் ஆரம்பித்துள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே வடக்கின் முதலமைச்சரின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் தலையாய கடமையாகும்.

இது விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதீத கவனம் எடுக்க வேண்டும்.

நடப்பது நல்லாட்சி என்று சொல்லப்பட்டாலும் நல்லாட்சியில் இருக்கக்கூடிய முக்கிய அமைச்சர்கள் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராகக் கருத்துக்கள் வெளியிட்டிருப்பது ஆரோக்கியமான செயற்பாடல்ல.

முக்கிய அமைச்சர்களின் இத்தகைய கருத்துக்களும் பேரினவாதிகளின் கண்டனங்களும் எங்கள் முதலமைச்சருக்கான பாதுகாப்புத் தொடர்பில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.

ஆகையால் அவரின் பாதுகாப்புக் குறித்து விசேட கவனம் செலுத்துவது அரசின் முக்கிய கடமையாகும்.

முதல்வரின் பாதுகாப்புத் தொடர்பில் பேரினவாதிகளுடன் சேர்ந்தியங்கும் தமிழ் அரசியல்வாதிகள் குரல் கொடுக்கமாட்டார்கள் என்பதால் பொது அமைப்புக்கள் மற்றும் தமிழ் மக்கள் ஒருமித்த குரலில் எங்கள் முதலமைச்சரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கைகளை முன்வைப்பது கட்டாயமானதாகும்.

முதல்வர் விக்னேஸ்வரனின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! Reviewed by Author on October 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.