சென்னை மவுலிவாக்கத்தில் இருந்த ஆபத்தான 11 மாடிக்கட்டிடம் தரைமட்டமானது-Photo&Video
சென்னை மவுலிவாக்கத்தில் இருந்த ஆபத்தான 11 மாடிக்கட்டிடம் வெற்றிகரமாக தகர்க்கப்பட்டது.
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் அருகருகே தனியார் நிறுவனம் சார்பில் 11 அடுக்குமாடிகள் கொண்ட 2 கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தன. கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் மாதம் 28–ந்தேதி ஒரு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த 61 தொழிலாளர்கள் இறந்தனர். இடிந்து விழுந்த கட்டிடம் அருகே இருந்த 11 மாடி கட்டிடமும் பலவீனமாக இருந்ததால் அதை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி கட்டிடத்தை இடிக்கும் பணி இன்று நடைபெற்றது. கட்டிடத்தை தரைமட்டமாக்குவதற்காக கட்டிடத்தில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெடி பொருட்கள் நிரப்பட்டுள்ளன. சுமார் 70 கிலோ அளவுக்கு வெடி பொருட்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டது. கீழ்தளம், தரை தளம், 5 வது தளம் ஆகியவற்றில் வெடிபொருட்கள் நிரப்பட்டு ரிமோட் மூலமாக வெடிக்க வைக்கப்பட்டது. வெடிக்க வைப்பதற்கு முன் பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் 5 கி.மீட்டர் சுற்றளவில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. 100 மீட்டர் சுற்றளவுக்கு அனைவரும் வெளியேற்றப்பட்டனர். கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்தில் இருந்த நாய்களையும் புளூகிராஸ் அமைப்பு பத்திரமாக மீட்டுச்சென்றது.
கட்டிடம் முதலில் 2 மணியளவில் வெடிக்க வைக்கப்படுவதாக இருந்த நிலையில், 5 முறை ஒத்திவைக்கப்பட்டு 5.30 மணியளவில் வெடிக்க வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 2 மற்றும் 6 வது தளத்தில் வெடி பொருட்கள் நிரப்பும் பணி நடைபெற்றதால் மேலும் தாமதம் ஆனது. இதையடுத்து ஏறக்குறைய 6.55 மணியளவில் திட்டமிட்ட படி ரிமோட் கண்ட்ரோல் மூலமாக வெடிபொருட்கள் வெடிக்க வைக்கப்பட்டது. முதலில் 5–வது மாடியில் உள்ள தூண்களில் வைக்கப்பட்டு உள்ள வெடிமருந்து 150 மீட்டர் தொலைவில் இருந்து தானியங்கி கருவி மூலம் வெடிக்க வைக்கப்பட்டது. 3 வினாடி இடைவெளியில் வெடிபொருட்கள் அடுத்தடுத்து வெடித்தன. கட்டிடம் 10 வினாடிகளில் முற்றிலும் தரை மட்டமானது. கட்டிடம் தரைமட்டமானதும் அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளித்தது. அருகாமையில் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக வெடித்து தகர்க்கப்பட்டது. கட்டிடம் இடிந்து விழுந்ததும் அந்த பகுதியில் இருந்து கடும் புகை மூட்டம் வெளியானது. 10 நிமிடங்களில் இந்த புகைமூட்டம் படிப்படியாக விலகியது.
கட்டிடம் இடிக்கும் போது இருள் சூழ்ந்ததால், தெளிவாக எந்த காட்சியும் புலப்படவில்லை. இதனால், பல மணி நேரமாக கட்டிட இடிப்பு பணியை பார்வையிட ஆவலோடு காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
100 மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள கட்டிடங்களில் மக்கள் குவிந்து இருந்ததால் பாதுகாப்பு பணிக்காக நுற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தமிழகத்தில் மிகப்பெரிய கட்டிட தகர்ப்பு இதுவாகும். கட்டிட தகர்ப்பு பணி காரணமாக மவுலி வாக்கம் பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டு இருந்தது. கட்டிட இடிப்பு பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி , சிஎம்.டி.ஏ அதிகாரிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.மவுலிவாக்கம் சுற்றுவட்டார பகுதியில் மின்சாரம், போக்குவரத்துக்கு தடை ஆகியவற்றால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சென்னை மவுலிவாக்கத்தில் இருந்த ஆபத்தான 11 மாடிக்கட்டிடம் தரைமட்டமானது-Photo&Video
Reviewed by NEWMANNAR
on
November 03, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 03, 2016
Rating:


No comments:
Post a Comment