அரசாங்கம் உரிமைகளை விட்டுக் கொடுக்க மறுக்கிறது : வடக்கு முதல்வர்
மத்தியிலிருக்கும் பல அதிகாரிகள் எங்களுக்குப் பாதகமான பல நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அதற்கெதிராக எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாமலிருக்கிறது.
அது மாத்திரமல்லாமல் எமக்குத் தர வேண்டிய சில உரிமைகளையும், அதிகாரங்களையும் அரசாங்கம் விட்டுக் கொடுக்க மறுக்கிறது என வடக்கு மாகாண முதலமைச்சர், க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
மணலாறு எல்லைக் கிராமங்கள் பற்றிய உண்மையினை வெளிக் கொணரும் வகையில் யாழ்.ஊடக அமையத்தினால் தயாரிக்கப்பட்ட "இருளுள் இதயபூமி" ஆவணப்படம் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூகத் தலைவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (12) யாழ். கலைத் தூது மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
பொலிஸ் அதிகாரங்களை, காணிசம்பந்தமான அதிகாரங்களை அரசு விட்டுக் கொடுக்க மறுக்கிறது. எங்களுடைய நிலைமை இதே நிலைமையில் தானிருக்கிறது.
பூட்டான் நாட்டிலே 72 சதவீத இடங்கள் வனப் பிரதேசமாக இருக்க வேண்டும் என அங்குள்ள அரசர் பிரகடனப் படுத்தியிருக்கிறார். அவர் வனப் பிரதேசத்தின் அவசியத்தை அறிந்து வைத்திருக்கிறார்.
இங்கு எங்களுடைய வனப் பிரதேசங்கள் பலவிதத்திலும் சின்னா பின்னமாக்கப்படுகின்றது. மக்களின் காணிகளை அபகரித்துப் பயிரிடுகிறார்கள்.
இது சம்பந்தமான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இதனுடைய தீமைகளை நாங்கள் மிகவிரைவில் அறியக் கூடும். வனங்களைப் பாதுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கிருக்கின்றது.
ஆகவே, உங்களுடைய அடுத்த முயற்சியாக எமது வனங்களுக்கு என்ன நடக்கிறது? என்பதை ஆராய்ந்து பாருங்கள். உதாரணமாக 16 அடிக்கு அகழ்வு செய்யக் கொழும்பிலே உத்தரவுப் பத்திரம் பெற்றுக் கொண்டு 144 அடி அகழ்வு ஒட்டி சுட்டானில் நடந்திருக்கிறது.
இது சம்பந்தமாகக் கேள்வி கேட்க முடியாமலிருக்கிறது. இது சம்பந்தமான நடவடிக்கைகள் மத்திய அரசாங்கத்தினால் எடுக்கப்பட வேண்டியிருக்கிறது.
இவ்வாறான நிலையில் உலகுக்கு எடுத்துக் காட்டும் வகையில் ஆவணப் படத்தை வெளியிட்டமைக்காக ஊடகத் துறையினருக்கு நன்றி கூறுகிறேன் என்றார்.
குறித்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வடமாகாண அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,
வடக்கு விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட வடமாகாண சபை உறுப்பினர்கள், பிரபல அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன், யாழ்.வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம், ஊடகவியலாளர்கள்,ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அரசாங்கம் உரிமைகளை விட்டுக் கொடுக்க மறுக்கிறது : வடக்கு முதல்வர்
Reviewed by Author
on
December 13, 2016
Rating:

No comments:
Post a Comment