அண்மைய செய்திகள்

recent
-

பொருத்துவீட்டு விண்ணப்பங்களை முழுமையாக நிராகரியுங்கள் மாவை எம்.பி மக்களிடம் கோரிக்கை


வடக்கு கிழக்கு மாகாணத்தில் வசிக்கின்ற மக்களுக்கு கல் வீடே வேண்டும், பொருத்து இரும்புக் கூடு வேண்டாம் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா  பொருத்து வீட்டு விண் ணப்பங்களை முழுமையாக நிரா கரிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கையில்,

பொருத்து  இரும்பு வீட்டுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினாறு பாராளுமன்ற உறுப்பினர்களும், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும், உயர்மட்ட அரசியல் தலைவர்களும் பொருத்தமற்ற வீட்டுத் திட்டம் என எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்,
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும், மாகாணசபைகளிலும் இதை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாத காலத்தில் மீள்குடியேற்ற அமைச்சு விவாதத்தின் போது இவ் வீட்டுத்திட்டத்திற்கான ஒப்பந்த விதி முறைகள்  மீறப்பட்டுள்ளமை, ஊழலுக்கு இட மளிக்கப்பட்டுள்ளமை மோசடிக்குள்ளானவர்களுடன் உள்ள ஒப்பந்தம் உடன்பாடுகளை பாராளுமன்றத்தில் வெளியிட்டு மீள்குடியேற்ற அமைச்சின் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
பாராளுமன்றத்தில் எனது தலைமையில் உள்ள மீள் குடியேற்ற அமைச்சு உள்ளிட்ட மேற்பார்வைக்குழுவில்  இத் திட்டம் வேண்டாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த வருடம் டிசம்பர் 7 ஆம் திகதி  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு இப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதாகவும் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி பணிகளுக்கும் கூடுதலான நிதி ஒதுக்குவதாகவும் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குறுதியளித்திருந்தார்; என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் எட்டு இலட்சம் ரூபா வீட்டுத்திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனால் அமைச்சர் கல்லில்லை, மணலில்லை, நீரில்லை என்ற அற்ப காரணங்களைக் காட்டி மக்களை ஏமாற்றகின்றார்.

பிரதமர் பாராளுமன்றில் மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் வீட்டுப் பிரச்சினைகளைத் தலையிட்டுத் தீர்வுகாணும் வாக்குறுதியை வழங்கியுள்ள நிலையில் மீள்குடியேற்ற அமைச்சர் பொருத்துவீட்டுக்கு விளம்பரம் செய்வது தவறானதாகும்.

ஏன் இவ்வளவு அவசரம். அமைச்சர் சுவாமிநாதனின் விசுவாசிகளும்,  முகவர்களும், அரச அதிபர்களையும் பிரதேச செயலாளர்களையும், ஊழியர்களையும் மிரட்டி அச்சுறுத்தி பொருத்து வீடுகளை ஏற்கவேண்டு மெனப் பேசுகின்ற செய்திகளும் கசிந்து இருக்கின்றன. மீள்குடியேற்ற அமைச்சு, வீடு தேவைப்பட்டவர்களுக்கு கல்-சீமெந்து வீடுகளை பத்து இலட்சம் ரூபாயில் கட்டிக் கொடுப்பதற்கான நடவடிக்கையை முறையாக செயற்படுத்துவதே இன்றைய தேவை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்திப் பொருத்தமான தீர்மானங்களை எடுக்க வேண்டுமென வற்புறுத்துகின்றோம். அமைச்சர் சுவாமிநாதனின் மீள்குடியேற்ற அமைச்சில் ஓராண்டுக்குள் இரண்டு அமைச்சின் செயலாளர்கள் துரத்தப்பட்டுள்ளனர். அமைச்சுக்கு இன்னும் ஒரு செயலாளர் நியமிக்க முடியவில்லை. அரசு செயலாளர் தர முள்ளவர்கள் இந்த அமைச்சுக்கு வரமறுக்கின்றனர்.

இந்நிலையில் இப் பொருத்து வீட்டுத் திட்டத்தை இருபத்தொரு இலட்சத்திலிருந்து பதினாறு இலட்சமாக குறைத்து அமைச்சர் சுவாமி நாதன் விளம்பரம் பிரசுரித்து ஒப்பேற்ற எடுக்கும் நடவடிக்கையில் மறைந்திருக்கும் மர்மந்தான் என்ன? இத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்புகிறோம்.

அரசையும் தமிழ் மக்களையும் அமைச்சர் சுவாமிநாதன் தவறாக வழிநடத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம். போரினால் அழிந்து போயுள்ள வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு கல் சீமெந்தினால் கட்டப்பட்ட ஒரு இலட்சத்து முப்பதினாயிரத்திற்கும் அதிகமான வீடு தேவை.

எனவே பொருத்து வீட்டு விண்ணப்பங்களை வீட்டுத் தேவையுள்ள மக்கள் நிராகரித்து கல்வீடுதான் வேண்டுமென அமைச்சுக்கு, அதிகாரிகளுக்கு எழுதிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். மக்களின் வீட்டுத் தேவையை நிறைவு செய்ய அமைச்சரின் தவறான வழிநடத்தலுக்குப் பலியாகிப் பின் மன வருத்தப்பட வேண்டாமென வேண்டுகோள் விடுக்கின்றோம் என மாவை எம்.பி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பொருத்துவீட்டு விண்ணப்பங்களை முழுமையாக நிராகரியுங்கள் மாவை எம்.பி மக்களிடம் கோரிக்கை Reviewed by Author on January 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.