2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வன்னியில் அழிக்கப்பட்ட காடுகளின் விபரங்களை வழங்குமாறு கோரிக்கை
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் வன்னியில் அழிக்கப்பட்ட காடுகளின் விபரங்களை வழங்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது.
இதன்போது வனஇலாகாவின் செயற்பாடுகள் குறித்து பேசப்பட்ட போது, வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், 2009 யுத்தம் முடிவடைந்த பின்னர் வன்னியில் காடுகள் பல அழிக்கப்பட்டுள்ளது. அதனை அழிக்கும் போது ஏன் வனஇலாகா அதனை தடுக்கவில்லை. அழிக்கப்பட்ட காடுகளின் விபரங்களை அடுத்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கோரினார்.
இதன்போது பதில் அளித்த வனஇலாகா அதிகாரி, காடு அழிக்கப்படுவதற்கு தாம் அனுமதி வழங்கவில்லை எனவும், காடு அழித்தவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்த அதேவேளை, கடந்த ஆட்சிக்காலத்தில் சில நடந்திருந்தாலும் தாம் தற்போதே இங்கு கடமைக்கு வந்ததாகவும் அது பற்றி தெரியாது எனவும் கூறினார்.
இதன்போது குறுக்கிட்ட கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், காடு அழித்தவர்கள் மீது வழக்கு போட்டதா, இல்லையா என்பது வேறு விடயம். எமக்கு அழிக்கப்பட்ட காடுகளின் விபரம் தேவை. அதனை அடுத்த கூட்டத்தில் சமர்க்க முடியுமா என வினாவினார்.
இதனையடுத்து, இணைத்தலைவர்களான முதலமைச்சர் மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ஆகியோரும் வன்னியில் அழிக்கப்பட்ட காடுகளின் விபரங்கரைள அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு தீர்மானமாக நிறைவேற்றியிருந்தனர்.
2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வன்னியில் அழிக்கப்பட்ட காடுகளின் விபரங்களை வழங்குமாறு கோரிக்கை
Reviewed by Author
on
September 12, 2017
Rating:

No comments:
Post a Comment