கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைப்பதற்கு ஒரு போதும் துணைபோக முடியாது -
தமிழ்த் தலைமைகளின் தேவைகளுக்காக கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைப்பதற்கு நாங்கள் ஒரு போதும் துணைபோக முடியாது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், பிரதி அமைச்சருமான ஹரிஸ் தெரிவித்துள்ளார். மருதமுனையில் நேற்று இரவு உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,வடக்கில் இருந்து கிழக்கு தனியாக பிரிய வேண்டும் என்று பாடுபட்டவர்கள் நாங்கள். அதனை ஒருபோதும் இலகுவாக இணைக்க எந்த காரணம் கொண்டும் சம்மதிக்க மாட்டேன்.மட்டக்களப்பு எவ்வாறு தமிழர்களது முகவெற்றிலையாக திகழ்கின்றதோ, அதே போன்று யாழ்ப்பாணம் எவ்வாறு இருக்கின்றதோ அது போன்று தான் கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் கல்முனை என்பது முஸ்லிங்களின் பூர்வீக சொத்து.
அதனை இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. கிழக்கு மாகாண முஸ்லிங்களுடைய அபிலாசை கிழக்கு மாகாணம் வடக்கில் இருந்து பிரிந்திருக்க வேண்டும் என்பதே. கிழக்கு மாகாணத்தில் எங்களது கட்சியில் இருந்த முதலமைச்சருக்கும் வடக்கில் இருந்து கிழக்கு தனியாக பிரியவேண்டும் என்ற ஒரு பிரேரணையை கூட கொண்டுவர முடியவில்லை.வட மாகாண முஸ்லிங்கள் இன்னும் தங்களது இருப்பிடங்களுக்கு சென்று வாழமுடியாத நிலையிலே இருக்கும் இந்த காலகட்டத்தில் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க முடியாமல் இங்கு வந்து வீரவசனங்களை எம்மக்களிடையே கொட்டித்தீர்க்கிறார்கள்.
இதுதான் அவர்களது அரசியல் பிரவேசமாகும். வட மாகாண முஸ்லிம்களை நடுத்தெருவில் விட்டிருக்கின்றனர்.கல்முனை என்பது இந்த நாட்டில் இருக்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிங்களின் தலைநகரம் என்பதனை யாரும் மறந்துவிட முடியாது. இதனை தரைவார்த்து விட்டு நாங்கள் தலைகுனியும் சமூகமாக மாறிவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைப்பதற்கு ஒரு போதும் துணைபோக முடியாது -
Reviewed by Author
on
January 16, 2018
Rating:

No comments:
Post a Comment