அண்மைய செய்திகள்

recent
-

ராஜீவ் கொலை!- சிவராசனுக்கு உத்தரவிட்டது புலிகள் அல்ல, சி.ஐ.ஏ. தான்! -


இந்திய உளவுத்துறைகளின் கண்கள் அந்தப் ‘பொருளின்’ மீது விழுந்து விட்டிருந்தது. ஆமாம், தமிழகத்துக்குள் இயங்கிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் மூன்று வயர்லெஸ் கருவிகளில் இரண்டு செயலிழந்து போய்விட்டன. மிஞ்சியிருப்பது ஒன்றுதான்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவுத் தலைவரான பொட்டம்மானுடன் நான் நேரடியாகப் பேசிக்கொள்ள கொடுக்கப்பட்டிருந்த கருவி அது. அதன் வழியாகத்தான் இருவரும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தோம். பேசி முடித்தவுடன் தொடர்புகளை அறுத்துக்கொண்டு வேறு இடத்துக்குக் கொண்டுபோய் பதுக்கி விடுவேன்.

அவ்வப்போது வெளிப்படும் ‘சமிக்ஞை’யை வைத்து இந்த இரகசிய நடமாட்டத்தையும் கண்டுபிடித்து விட்டிருந்தார்கள்.
முதல் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள இந்த வரிகளைப் படிக்கும்போது, ‘யார் இவர், என்ன சொல்ல வருகிறார்’ எனப் புத்தகத்துக்குள் தேடத் துடிக்கிறது மனம். தன் அனுபவங்களைச் சொல்லும் இரா.பொ.ரவிச்சந்திரன் வேறு யாருமல்ல... ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதி.

நளினி, சாந்தன், பேரறிவாளன், முருகனைப்போல் ரவிச்சந்திரனும் 27 ஆண்டுகளாக சிறைக்குள் தான் இருக்கிறார். ஆனால், மற்றவர்களைப் போல ரவிச்சந்திரனை பரவலாகத் தெரியாது.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட மற்றவர்களின் அனுபவங்கள் வேறு; ரவிச்சந்திரனின் அனுபவம் வேறு.
நளினியோ, பேரறிவாளனோ இலங்கைக்குச் சென்றதில்லை. புலிகள் இயக்கத்தில் நேரடியாகப் பயிற்சி பெற்றவர்களும் இல்லை; பணியாற்றியவர்களும் இல்லை. ஆனால், ரவிச்சந்திரனுக்கு அந்த அனுபவம் உண்டு!
அதுவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பாரதி மாஸ்டர், செல்வராஜ் மாஸ்டர் போன்றோரிடம் பயிற்சி பெற்றவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கியத் தளபதிகளான மில்லர், சூசை, டேவிட் உள்ளிட்டவர்களோடு சேர்ந்து சமர் புரிந்த அனுபவங்கள் உடையவர்.
இந்த விவரங்கள் தெரியவரும்போது தான், ரவிச்சந்திரனின் பாத்திர முக்கியத்துவத்தை நம்மால் உணர முடிகிறது. ஈழத்தில் அவர் நேரில் கண்ட காட்சிகளையும், தன் பயிற்சி அனுபவங்களையும், போர்க்களங்களையும் விவரிக்கும்போது, படிப்பவர்கள் மனதில் ஈரம் கசியும்.
ரவிச்சந்திரனின் அப்பா பெயர் பொய்யாழி. வேளாண் துறை அதிகாரியாக இருந்தவர். இப்போது இறந்து விட்டார். இளவயதில் ஈழம் பற்றிப் படித்த, கேட்ட செய்திகளால் உந்தப்பட்டு, ‘ஈழ விடுதலைப்போரில் பங்கெடுக்க வேண்டும்; அதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர வேண்டும்’ என்ற எண்ணத்தோடு இருந்திருக்கிறார் ரவி.
பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது, காலாண்டுத் தேர்வு கட்டத்திலேயே படிப்பைத் துறந்து, வீட்டிலிருந்து வெளியேறி இராமேஸ்வரம் சென்றவர், அங்கு அலைந்து திரிந்து அகதிகளின் படகில் யாழ்ப்பாணம் சென்று, பல சிரமங்களுக்கு மத்தியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிடிவாதமாகச் சேர்ந்தார்.

பிறகு, புலிகள் இயக்கத்தின் நலனுக்காகவே, அங்கிருந்து வெளியேறி மீண்டும் தமிழகம் வந்து தனி இயக்கம் ஆரம்பித்தவர். புலிகளுக்கு அத்தியாவசிய பொருள்களை அனுப்பி வைக்கும் உதவிகளைச் செய்து வந்தார். அந்த நிலையில், தமிழக கியூ பிரிவு போலீஸார் இவரைக் கைது செய்தார்கள்.
பிறகு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி இன்று ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கிறார். நல்ல ஆங்கில, சட்டப் புலமை பெற்றவராக இருக்கிறார். ஊடக வெளிச்சம்படாத மனிதராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு முறை தன்னைப் பற்றி வந்த செய்திகளைத் தவிர்த்து வேறெதுவும் இத்தனை ஆண்டுகளில் வெளிவந்தததில்லை’ என்கிறார்.
வழக்கில் சிக்கியது, சிவராசனின் செயல்பாடு என்ன, அவரின் உண்மையான திட்டம் என்ன என்பது உள்ளிட்ட பல அதிர்ச்சி, திருப்புமுனைத் தகவல்களை இந்தப் புத்தத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் ரவிச்சந்திரன் அவ்வப்போது எழுதி வைத்திருந்ததை எல்லாம் அவரின் வழக்கறிஞர் T. திருமுருகன் உதவியோடு பெற்று, முறைப்படுத்தி, விறுவிறுப்பாகத் தொகுத்துள்ளார் பா.ஏகலைவன்.

‘யாழ்’ பதிப்பகத்தின் வெளியீடாக வரும் ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே...
ஒரு தேசத்தின் அடுத்த பிரதமர் யார்’ என்பதைத் தீர்மானிக்கும் முக்கியத் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுக்க வருவார்கள் என்பது யாரும் அறிந்த ஒன்று தான். அந்தச் சாதாரண விஷயம்கூட விடுதலைப்புலிகள் போன்ற ஓர் அமைப்புக்கும் அதன் தலைமைக்கும் தெரியாதா?
மிக இரகசியமான ஒரு கொலைத் திட்டத்தைப் புகைப்படம் எடுக்கத் திட்டமிட்டிருந்தால், அதற்கென தனியாக ஒரு புகைப்படக்காரரைப் பயன்படுத்தி இருப்பார்களே? விடுதலைப்புலிகளிலேயே திறமையான புகைப்படக்காரர்கள் இருக்கிறார்களே? அப்படியே அந்தப் புகைப்படம் எடுப்பவர் இறந்திருந்தாலும், கமராவை அங்கிருந்து அகற்றும் ஏற்பாட்டையும் செய்திருக்க மாட்டார்களா?
ஹரிபாபு ஒரு தொழில்முறை புகைப்படக்காரர். ஓர் இடத்துக்குப் போனால் மற்றவர்கள் படங்களையும் எடுக்கக் கூடியவர். 7 மணியிலிருந்து 10.20 மணிக்கு குண்டு வெடிப்பு நடக்கும் வரை வெறும் பத்தே ஸ்டில்கள்தான் எடுத்திருப்பார் என்பது நம்பும்படியாக இருக்கிறதா?
இந்தச் சந்தேகங்களுக்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. ஏனென்றால் அந்த புகைப்படச்சுருள் வெட்டப்பட்டு இருந்தது. கமராவும் ஃபிலிம் ரோலும் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்படும் வரையிலான அந்த மூன்று நாள் நிகழ்வுகள் எல்லாமும் மர்மமாக இருந்தன.
ஹரிபாபு எடுத்த மொத்த படங்களில் சி.பி.ஐ வெளியிட்ட படங்கள் தவிர மற்ற படங்களில் எத்தனை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அல்லது பிரமுகர்கள் இருந்திருப்பார்கள்? மற்ற படங்களைக் காட்டி அவர்களை வழிக்குக் கொண்டு வரவாவது சிவராசன் எடுக்கச் சொல்லியிருக்கலாம் அல்லவா?
இல்லை, பத்து படங்கள்தான் எடுக்கப்பட்டன’ என்றால், ‘ராஜீவைக் கொன்றது புலிகள் தான் என்று உலகம் தெரிந்துகொள்ள வேண்டும். கொலைப்பழி சுமக்க வேண்டும்’ என்று சிவராசன் திட்டமிட்டுச் செய்தார் என்று புரிகிறது அல்லவா?


புலிகள் தங்கள் ஆவணத்துக்காக எடுத்தார்கள் என்பது உண்மையானால், புலிகள் அமைப்பின் இரகசியம் காக்கும் தன்மைக்கே இது முரண்பாடாக இருக்கிறதே. சாதாரண போராளிகளே தடயங்களை விடமாட்டார்கள் எனும்போது, மூத்த போராளி சிவராசன் எப்படி தடயத்தை விட்டுச் சென்றார்?
ஹரிபாபு இறந்தாலும் அவரது கமராவை எடுக்காமல் சிவராசன் வந்திருக்க மாட்டார். ‘ஏன் அப்படி விட்டுவிட்டு வந்தார்’ என்பதையும், ‘அதன்பிறகு உடனடியாக ஈழத்துக்குத் தப்பிச் செல்ல அவர் ஏன் அக்கறை காட்டவில்லை’ என்பதையும் முடிச்சுப்போட்டுப் பார்க்க வேண்டும்.
கடற்கரையே இல்லாத பெங்களூருவுக்கு ஏன் சென்றார் என்று என்னிடம் பொட்டம்மான் கேட்ட கேள்வியுடன் முடிச்சுப் போட்டுப் பார்க்க வேண்டும்.
சிவராசனிடம் மூன்று டைரிகளைக் கண்டெடுத்தது சி.பி.ஐ. அவற்றில் இரண்டு பாக்கெட் டைரிகள்; ஒன்று பெரிய டைரி. அந்த டைரியில் சிவராசன் எனது சொந்தப் பெயரான ‘இரவி’ என்று எழுதியிருக்கிறார். பொதுவாக இயக்கத்தினர் யாருடைய சொந்தப் பெயரையும் பயன்படுத்துவதில்லை; குறிப்பாக எழுத்தில் பதியமாட்டார்கள்.

வேண்டுமென்றே பல சந்திப்புகளை, தகவல் பரிமாற்றங்களை தேதிவாரியாகக் குறிப்பிட்டு டைரி எழுதியிருக்கிறார். இது புலிகளின் உளவுப்பிரிவு செயல்பாட்டுக்கு விரோதமானது.
எழுத்தில் உள்ள சாதாரணத் தகவலைக்கூட உடனுக்குடன் எரிக்க வேண்டும்.தனு போட்டோ வெளியானதிலிருந்தே பயஸ், ஜெயக்குமார், விஜயன் ஆகியோர் வேறு இடம் செல்ல முயன்ற போது தடுத்தவர் சிவராசன்.
மே 24-ம் தேதியிலிருந்து ஜூன் 14-ம் தேதி வரை நான்கைந்து தடவையாவது சிவராசனை ‘ஈழம் சென்று விடுங்கள்’ என்று நான் சொன்னதைத் தவிர்த்தார்.
ராஜீவ் இறந்ததும் சிவராசன் நேபாளம் செல்லத் திட்டமிட்டார்’ என்பதை வாணன் என்ற இலங்கைத் தமிழர் வாக்குமூலத்திலிருந்து அறியலாம்.
பொதுவாக உளவுப்பிரிவு உறுப்பினர்கள், அரசியல் பிரிவு உறுப்பினர்களுடன் சேரமாட்டார்கள். அரசியல் பிரிவு ஆட்கள் வெளிப்படையாக இயங்குபவர்கள். ஆனால், அரசியல் பிரிவு திருச்சி சாந்தனுடன் இவர் வலியச் சென்று சேர்ந்துள்ளார். இருவருமே மாத்தையாவின்கீழ் பணியாற்றியவர்கள்.
புலிகளின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த மாத்தையா, ‘றோ’ உளவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டு உண்மை நிரூபணமாகி, மரண தண்டனைக்கு உள்ளானவர். இந்த மாத்தையாவின் ‘றோ’ தொடர்பாளராக அறியப்பட்டவர்,
நெய்வேலியில் இருந்த நீலன். அவரைத் தமிழகம் வந்ததும் சிவராசன் பார்த்துள்ளார். இந்த நீலனைத் தமிழக கியூ பிரிவு விசாரித்தது. ஆனால், உடனடியாக விடுதலை செய்துவிட்டது. இந்த நீலன் கைது செய்யப்பட்ட பிறகுதான் மாத்தையாவின் செயல்கள் அம்பலமாகின.

இப்படிப் பல்வேறு மர்மங்கள் கொண்டவர் சிவராசன். 1987-ல் தளபதி சூசையின்கீழ் வல்வெட்டித்துறை நகரில் நான் பணியாற்றினேன். மயிலியதனை என்ற பகுதியில் சிவராசன் இருந்தார். அப்போது இரகு அல்லது இரகுவரன் என்று அழைக்கப்பட்டார். அப்போதுதான் அவருக்கும் எனக்கும் அறிமுகம்.
அந்த ஆண்டு மே மாதம் வடமராட்சி பகுதி சிங்கள இராணுவத்தின் பிடிக்குள் போனது. அதன்பிறகு நாங்கள் வேறு வேறு பகுதிகளுக்குப் போய்விட்டோம்.
நான் 1990-ல் தமிழகம் திரும்பியபோது, ‘இரகுவோடு தொடர்பில் இருங்கள்’ என்று பொட்டம்மான் சொன்னார். 1991 மே மாதத்துக்கு முன்னதாக ஐந்து முறை சந்தித்து இருப்பேன். இவை எதுவும் ராஜீவ் கொலைத்திட்டம் குறித்தது அல்ல!
ராஜீவ் கொலைக்கு முன்னும் பின்னுமாக சிவராசனுக்கு மும்பையிலும் சவுதி அரேபியாவிலும் வங்கிக் கணக்கு இருந்தது. பணப்பரிமாற்றமும் நடந்தது. இதனை இந்திய அரசின் நிதி நுண்ணறிவுப் பிரிவு கண்டுபிடித்தது. ஆனால், அதை சி.பி.ஐ மூடி மறைத்தது.
சிவராசனுக்கு உத்தரவிட்டது புலிகள் அல்ல; சி.ஐ.ஏ. முகம் மறைத்து பல சதிகாரர்கள் இருக்கிறார்கள். இப்படி உருவான சதிகளில் ஒன்றுதான், அனுஜா படத்தை தனு என்று சொன்னது.
அனுஜா படத்தை என்னிடம் காட்டினார்கள். நான் ‘அது அனுஜா’ என்றேன். வடமராட்சியில் நான் அவரைப் பார்த்திருக்கிறேன். குரூப் லீடர் அவர். ‘விடுதலைப் புலிகளின் பிரசாரப் பிரிவு வெளியிட்ட கலண்டரில் அவர் படம் இருக்கும்’ என்றேன்.
அந்த அனுஜாவைத்தான் தனு என்று சொல்லி, ‘விடுதலைப்புலிகளால் அனுப்பப்பட்ட பெண்தான்’ என்று கதை கட்டினார்கள். இந்தக் கட்டுக்கதைகளுக்கு தமிழக தடயவியல் துறையும் ஒத்துப்போனது.
(தொடரும்...)


ஏகலைவன் பற்றி....
பா.ஏகலைவன் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். 2010-ம் ஆண்டு, ‘நாம் தமிழர் கட்சி’த் தலைவர் சீமான், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி சிறையிலிருந்த போது, அவரைப் பார்க்க வேலூர் சிறைக்குச் சென்றிருந்தார்.
ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஐந்து பேரையும் அப்போதுதான் நேரில் சந்தித்துள்ளார். அவர்களுடன் பேசிய பிறகு, ‘இந்த வழக்கில் வெளியில் தெரியாமல், புதைந்து கிடக்கும் பல விஷயங்களை உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
ராஜீவ் கொலைவழக்கில் முதல் குற்றவாளியாக இருக்கும் நளினியின் தரப்பு பல ஆண்டு காலமாக வெளியில் வராமல் இருந்தது. அதனால், நளினியின் தரப்பிலிருந்து முதல் புத்தகத்தை எழுதினார். அதுதான், ‘ராஜீவ் கொலை வழக்கு - மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்காவின் சந்திப்பும்!
அதன் தொடர்ச்சியாக, தற்போது வரை வெளியில் அதிகம் தெரியாத ரவிச்சந்திரனின் அனுபவங்களை, ‘ராஜீவ் காந்தி படுகொலை... சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

க்ரைம் த்ரில்லர் நாவலைப் போல் உள்ள இந்தப் புத்தகம், ராஜீவ் கொலையின் பின்னணியில் உள்ள சர்வதேச சதிகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் ஓர் உண்மை ஆவணம்!
vikatan-

ராஜீவ் கொலை!- சிவராசனுக்கு உத்தரவிட்டது புலிகள் அல்ல, சி.ஐ.ஏ. தான்! - Reviewed by Author on January 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.