பேர்ன்நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்ட தமிழர் திருநாள் தைப்பொங்கல்
மஞ்சள் கிழங்கும், இஞ்சியும் கட்டி, கரும்பும் இனிக்க, சர்க்கரைப் பொங்கலும், வெண் அன்னம் பொங்கி வெண்ணருள் அமுதும் படைத்து உலகத்திற்கு ஒளிதந்து, விளைச்சல்களுக்கு மூலமான கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விழா ஐரோப்பாத்திடலை நிறைத்தது.
ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரரிற்கும் ஞானலிங்கேச்சுரம் குடிகொண்ட தெய்வங்களுக்கும் பொங்கல் திருநாளில் பல சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று பொங்கள் அருளமுதாகப் படைத்தளிக்கப்பட்டது.
தாயகத்தில் கொண்டாடுவதுபோல் இன்றைய குளிரையும் தாண்டி விருப்புடன் அனைவரும் பங்கெடுத்தும், பொங்கல் பானையில் அரிசி இட்டு கொலவைபாடி மகிழ்வுடன் பொங்கலோ பொங்கல் என்று கோசமிட்டும் சிறப்பித்தனர்.
2007ஆம் ஆண்டு மதல் முதல் பொங்கல்விழா ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலால் கொண்டாடப்பட்டு
வந்தபோதும் இந்த ஆண்டு பல் சிறப்புக்களுடன் இத்திருநாள் அமைந்துள்ளது.
பொதுவிடுப்புநாளான ஞாயிற்றுக்கிழமை இந்த ஆண்டுப் பொங்கல் அமைந்திருப்பதால் பெருமளவு தமிழ் மக்கள் குழந்தைகளுடனும், இளையோர்களுடனும் பொங்கல்விழாவில் ஆயிரக்கணக்கில் பங்கெடுத்து சிறப்பித்துக் கொண்டாடினர்.
உழவர்களின் உழைப்பையும், இயற்கையின் கொடையையும் மதிப்பளித்தும், உணவுக்கு உழைக்கும் உயிரனங்களுக்கு நன்றி செலுத்தியும் தமிழர் திருநாள் அமைந்துள்ளது.
வெறும் சமயச் சடங்குகளுக்குள் மட்டுமின்றி பல்லினத்தை, பல்சமூகங்களை இணைக்கும் விழாவாகவும் தமிழர் விழா விளங்குவது பெரும் சிறப்பாகும். முதன்முறையாக சுவிற்சர்லாந்தின் அரசியல் முதன்மை விருந்தினர்களை சைவநெறிக்கூடம் தமிழர்திருநாளில் பங்கெடுத்துச் சிறப்பிக்க அழைத்திருந்தது.
பேர்ன் நகரின் தலைவரும் அவரது மனையாளும் மேலும் முன்னாள் பல்கட்சி அரசியல் பிரமுககர்களும், பேர்ன் மாநில மற்றும் சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் மக்கள் பிரதிநிதிகளும் அதுபோல் குடிவரவுத்துறை அதிகாரிகளும் பங்கெடுத்துச் சிறப்பித்தனர்.
இவர்கள் பொங்கல் வாழ்த்துக்களை தமிழ்மொழியில் தெரிவித்து தமது வாழ்த்துரைகளை டொச்மொழியில் அளித்தனர். சைவநெறிக்கூடத்தால் வாழ்த்துக்கள் தமிழ்மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.
பேர்ன் நகரின் தலைவர் திருநிறை. அலெக் பொன் கிறாப்பென்றீட் (Herr Alec von Graffenried) தனது உரையில் பல்சமய இல்லத்திற்கு நான் பல முறை வந்திருக்கிறேன். அப்போது கோவிலுக்குள்ளும் வந்து சென்றிருக்கிறேன். ஆனால் ஒருவிழாவில் விருந்தினராக நான் வந்திருப்பது இதுவே முதல்தடைவ. பலருக்கும் நன்றி செலுத்தும் இச்சமூக விழாவில் என்னை அழைத்தது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள். உங்கள் பண்பாட்டு முறைப்படி ஊரும், நாடும், குடிகளும், உலகமும் சிறந்து விளங்கட்டும், பயிர்கள் நன்றாக விளையட்டும் என்று வாழ்த்தினார்.
வள்ளுவன் பாடசாலை மாணவர்களின் ஒரு சிறப்பு கிராமிய நடனம் வரவேற்பாக நடைபெற்றது.
ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர்கள் விருந்தினரை மதிப்பளித்து மாலையிட்டு வரவேற்றனர்.
சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் அனைவருக்கும் நன்றி நவின்றார். பேர்ன்நகரில் தமிழர்களின் தேவை கருதி, பேர்ன் நகரத்துடன் பல்திட்டங்களை நாம் சைவநெறிக்கூடத்தால் மேற்கொள்ளவுள்ளோம்.
இதில் பிறேம்கார்டன் நகரில் சைவசமயத்தின்படி நீத்தார் கடன் ஆற்றவும், அங்கு அக்கிரியைகளை ஆற்ற ஒரு இடம் எமக்கு ஒதுக்கித்தரவுள்ளார்கள் என்ற செய்தியினையும் பகின்றார். விருந்தினர்கள் அனைவரும் வழிபாட்டிலும் பங்கெடுத்தனர் பின்னர் அவர்கள் வரவேற்பு மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு தமிழர் மரவு உணவுகள் பொங்கலுடன்அறுசுவை விருந்தாக அளிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான அடியார்கள் நிறை மீண்டுமொருமுறை ஐரோப்பாத்திடல் தமிழர்களால் நிறைந்தது, உண்டியும் உள்ளமும் நிறைய அனைவரும் மகிழ்ந்தனர்.
இந்த நாளில் பொங்கல் விழாவின் ஒருபகுதியாக மாலை அனைத்துக் குழுந்தைகளுக்கும் பொங்கல் பரிசுகள் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலால் அளிக்கப்படவுள்ளது.
மேலும், ஞானலிங்கபாலன் ஐய்யப்பன் நோன்பு நிறைத்து, திருவுலாவும் நடைபெறவுள்ளது.
பேர்ன்நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்ட தமிழர் திருநாள் தைப்பொங்கல்
Reviewed by Author
on
January 17, 2018
Rating:

No comments:
Post a Comment