ரஜினி கட்சியில் ரங்கராஜ் பாண்டே?
தான் தொடங்கவுள்ள கட்சிக்கு ஆலோசகராக ரங்கராஜ் பாண்டே வரவுள்ளதாக வெளியான தகவல் குறித்து ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.
அரசியலில் இறங்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த்,, தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியல் என்றும் கூறியுள்ளார். அரசியல் கட்சிக்கு முன்னோட்டமாக ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமிக்கும் பணியையும் மேற்கொண்டுவருகிறார்.
இதற்கிடையே தந்தி டிவியின் தலைமை செய்தியாசிரியராக இருந்த ரங்கராஜ் பாண்டே கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிலிருந்து விலகினார். பத்திரிகை துறையில் தொடரப்போவதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், ரஜினி கட்சியில் ஆலோசகராவதற்கே பணியிலிருந்து விலகினார் என்ற தகவலும் வெளியானது.இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று (டிசம்பர் 13) செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்திடம், இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “அதில் உண்மையில்லை, வதந்திதான்” என்று ரஜினி பதிலளித்துவிட்டார்.
காவிரி விவகாரம் குறித்த ரஜினிகாந்தின் கருத்து எப்போதும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டுவரும் சூழலில் மேகதாட்டு விவகாரம் குறித்து பேசிய ரஜினி, “மேகதாட்டு அணை கட்டுவதால், தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு குறையாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. முதலில் அது எந்த அளவு உண்மை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நீரின் அளவு குறையும் என்று சொன்னால் உடனடியாக அதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதுதான் இதற்கு ஒரே வழி” என்று கூறினார்.
மேலும், ஆர்பிஐ ஆளுநர் ராஜினாமா பற்றிய கேள்விக்கு, “உண்மையை தெரியாமல் எதுவும் பேச முடியாது” என்றும், ஐந்து மாநிலத் தேர்தல் குறித்து முன்பே கருத்து தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
ரஜினி கட்சியில் ரங்கராஜ் பாண்டே?
Reviewed by Author
on
December 14, 2018
Rating:
Reviewed by Author
on
December 14, 2018
Rating:


No comments:
Post a Comment