வரலாற்றில் முதல் தடவையாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சாதனை -
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக முழுமையான முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சிகிச்சை (Total Knee replacement surgery) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த அறுவை சிகிச்சை இன்றைய தினம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சினால் அண்மையில் கிளிநொச்சிக்கு நியமிக்கப்பட்ட முடநீங்க சத்திரசிகிச்சையியல் நிபுணர் (Consultant Orthopedic Surgeon) மருத்துவர் எஸ்.சசிகரன் தலைமையிலான சத்திரசிகிச்சை குழுவினர் மூத்த மயக்க மருந்தியல் மருத்துவர் பா.நாகேஸ்வரன் உட்பட மருத்துவர்கள், தாதியர்கள், தொழிநுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட பத்து பேர் கொண்ட அணியினர் இணைந்து இந்த சாதனை சரித்திரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மூட்டுவாதம் காரணமாக நடக்க முடியாது சிரமப்பட்டு வந்த மன்னார் - பள்ளிமுனையை சேர்ந்த 63 வயதான ஒருவருக்கே இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கிளிநொச்சி வைத்தியசாலையின் சேவைகளை விரிவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வரும் பணிப்பாளர் காண்டீபன், மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுகள், பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் ஆகியோரது ஒத்துழைப்பினை பெற்று இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
இதன்போது வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.காண்டீபன், இவர்கள் அனைவருக்கும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை சார்பாக தனது நன்றிகளை தெரிவித்து கொண்டுள்ளார்.
கிளிநொச்சியில் இலவசமாக மேற்கொள்ளப்பட்ட இந்தச் சத்திரசிகிச்சையானது தனியார் வைத்தியசாலைகளில் 5 இலட்சம் ரூபா வரை செலுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பாரிய சத்திர சிகிச்சையாகும்.
எனவே பல வளப்பற்றாக்குறைகளுடன் தனியான எலும்பு முறிவு சிகிசைக்கான தனியான சத்திர சிகிச்சை கூடம் இல்லாது பொதுவான சத்திரசிகிச்சை கூடத்தில் வைத்தே இச் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சிகிச்சைக்காக யாழ். போதான வைத்தியசாலைக்கே செல்ல வேண்டிய நிலை இருந்து வந்துள்ளது.
மேலும் சத்திர சிகிசைக்கான வைத்திய உபகரணங்கள் கூட மன்னார் மாவட்ட வைத்தியசாலையிலிருந்து பெறப்பட்டுள்ளது.
எனவே பல வளப் பற்றாக்குறைகளுடனும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் முதற் தடவையாக வரலாற்றுச் சாதனையாக குறித்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் முதல் தடவையாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சாதனை -
Reviewed by Author
on
January 29, 2019
Rating:

No comments:
Post a Comment