மைத்திரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சுமந்திரன்,டக்ளஸ் வடக்கு ஆளுநர்! உறுதிபூண வாழ்த்துரைத்த சிறிசேனா -
அனைத்து இலங்கையர்களுடனும் இணைந்து தேசிய பாரம்பரியங்களுக்கு முன்னுரிமையளித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (14) கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகளில் ஈடுபட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜயந்தி சிறிசேனஉள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இணைந்து சுபநேரத்தில் அடுப்பு மூட்டி புத்தாண்டு பாரம்பரியங்களை நிறைவேற்றினர்.
மலர்ந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டிற்கு ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையான பொதுமக்களும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகைதந்திருந்ததுடன், அனைவரையும் சுமூகமாக வரவேற்ற ஜனாதிபதி, உணவு உட்கொள்ளும் சுபநேரத்தில் அனைவரையும் இணைத்துக்கொண்டு அவர்களுக்கு விருந்துபசாரங்களையும் வழங்கினார்.
மலர்ந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து இலங்கையர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ஜனாதிபதி, அனைவரும் ஒன்றிணைந்து தாய்நாட்டிற்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு இப்புத்தாண்டில் உறுதிபூண வேண்டும் என்று வாழ்த்துரைத்தார்.
இதேநேரம் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கேற்ப மரம் நடும் நிகழ்ச்சித்திட்டமொன்றும் நாளைய தினம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டு முக்கொத்து சுபநேரமான மு.ப 11.17க்கு வெள்ளை நிற ஆடைகளில் கிழக்குத் திசையை நோக்கி மரக்கன்றினை நடுவது சிறந்ததாகும்.
இந்த சுப நேரத்தில் மரக்கன்றொன்றை நட்டு எதிர்கால தலைமுறைக்கும் சுற்றாடலுக்கும் பிரஜைகள் என்ற தமது பொறுப்பினை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அனைத்து இலங்கையர்களிடமும் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இன்றைய சித்திரைப் புத்தாண்டு நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, மற்றும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் போன்றோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுவேளை எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்திலும் மிகச் சிறப்பாக சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன. இதன்போது அவரின் புதல்வர்களுடன் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.
மைத்திரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சுமந்திரன்,டக்ளஸ் வடக்கு ஆளுநர்! உறுதிபூண வாழ்த்துரைத்த சிறிசேனா -
Reviewed by Author
on
April 15, 2019
Rating:

No comments:
Post a Comment