சஹ்ரான் குழுவினருக்கு பாதுகாப்பு கவசமாக மாறிய ஹிஸ்புல்லாவின் ஆளுநர் பதவி!
கிழக்கு மாகாண ஆளுநர் பதவியில் இருந்து எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்ல நீக்கப்படாத வரையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சரியான உண்மைகளை ஒருபோதும் கண்டு பிடிக்கவே முடியாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்களில் ஒருவரும், இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான என். விஷ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் அவரது அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்து அரசியல் நடப்புகள் தொடர்பாக பேசியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும், குறிப்பிட்ட முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் காரண காரிய தொடர்புகள் இருப்பதாக பரந்த அளவில் நியாயமான பாரி சந்தேகங்கள் நின்று நிலவி வருகின்றன. அதற்கு ஏற்றால் போலவே தாக்குதல்களுக்கு முன்னதாகவும், பின்னதாகவும் சம்பவங்கள் பல இடம்பெற்று இருக்கின்றன.
குறிப்பாக கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தாக்குதல்தாரிகளுடன் வெளிப்படையாகவே சம்பந்தப்படுத்தி பேசப்படுகின்றார். எனவே ஆளுநர் பதவியில் இருந்து நீக்கி விட்டு இவரை உடனடியாக விசாரித்தல் வேண்டும்.
அப்பொழுதுதான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சரியான உண்மைகளை கண்டுபிடிக்க முடியும். இவரை பதவி நீக்கம் செய்யாமல் விசாரணைக்கு உட்படுத்துவது கூட எந்தவொரு பயனையும் தர மாட்டாது.
கிழக்கு மாகாண ஆளுனர் பதவியில் ரோஹித போகொல்லாகம நீடித்து இருந்திருப்பாரானால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று இருக்க மாட்டாது. ஏனென்றால் சஹ்ரான் குழுவினர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்பாகவே அடையாளம் காணப்பட்டு அடக்கப்பட்டு இருப்பார்கள்.
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து ஹிஸ்புல்லா விரும்பி கேட்டு பெற்று கொண்டதையும் தற்போதைய சூழலில் சந்தேக கண் கொண்டுதான் பார்க்க நேர்ந்து உள்ளது. ஆயினும் அவருக்கு வழங்கப்பட்ட ஆளுனர் பதவி சஹ்ரான் குழுவினருக்கு பாதுகாப்பு கவசமாக அமைந்தது.
ஒரு வகையில் சஹ்ரான் குழுவினருக்கு முன்னுதாரணமாக, முன்னோடியாக ஹிஸ்புல்லா செயற்பட்டு இருக்கின்றார் என்பது கிழக்கு மாகாண தமிழ் மக்களின் அனுபவம் ஆகும். தமிழ் மக்களை இலக்கு வைத்து வெறியாட்டம் நடத்திய ஹிஸ்புல்லாவை சஹ்ரானின் அண்ணனாகவே கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பார்க்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மாத்திரம் அன்றி சிங்களவர்களும் இவர் உடனடியாக ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேயாக வேண்டும் என்று விரும்புகின்றனர்.
ஆனால் நிலைமை இவ்வாறு இருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கான அபிவிருத்தி குழுவின் பிரதி தலைவராக ஹிஸ்புல்லாவை நியமித்து இருப்பது பாரிய அதிருப்தி அலையையே இம்மக்கள் மத்தியில் உருவாக்கி உள்ளது.எனவும் தெரிவித்துள்ளார்.
சஹ்ரான் குழுவினருக்கு பாதுகாப்பு கவசமாக மாறிய ஹிஸ்புல்லாவின் ஆளுநர் பதவி!
Reviewed by Author
on
June 01, 2019
Rating:

No comments:
Post a Comment