எதிர்வரும் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை
பாராளுமன்ற அமர்வுகளை நாளையதினத்திலும் (21) அதன் பின்னர் அடுத்த வாரம் 27 ஆம் மற்றும் 28 ஆம் திகதிகளிலும் நடத்துவதற்கு புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று (20) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இன்று (20) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடன உரை அரசாங்கத்தின் பிரதான அலுவலாகக் கொண்டு நாளையதினம் (21) விவாதிக்கப்படவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் செப்டெம்பர் 01 ஆம் திகதி முதல் அடுத்த வருடத்துக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிறைவேற்றப்படும்வரையான காலப் பகுதிக்காக அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் இடைக்கால கணக்கு வாக்கெடுப்புப் பற்றி நிலையியற்கட்டளை இலக்கம் 27ற்கு அமைய ஒழுங்குப் புத்தகத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தவும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதேநேரம், எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 6.30 மணிவரை பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கும், அத்தினங்களில் மதிய போசன இடைவேளையின்றி அமர்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாளையதினம் (21) பாராளுமன்றத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் விசேட கருத்தை முன்வைக்கவுள்ளார்.
இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன, ஆளும் கட்சியின் பிரதம கொரடா ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான நிமல் சிறிபால.டி.சில்வா, டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன, லக்ஷ்மன் கிரியல்ல, ரவூப் ஹக்கீம், கயந்த கருணாதிலக, மனோ கணேசன், ரஞ்சித் மத்துமபண்டார, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை எதிர்வரும் 27 ஆம் திகதி இடைக்கால கணக்காய்வு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிக்வுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment