புதிய அரசு செல்லப்போகும் பாதையும் சிறுபான்மையின மக்களின் கேள்வியும்
பொது ஜன பெரமுன அரசாங்கம் பதவியேற்றுக்கொண்ட இரண்டு தினங்களுக்குள்ளாகவே அது எந்தத் திசையில் பணயிக்கப்போகின்றது என்பது அதன் ஒவ்வொரு செயற்பாடுகளின் மூலமாகவும் தெளிவாகியிருக்கின்றது.
அமைச்சரவைப் பதவியேற்பின் போது சிறுபான்மையினருக்கான அடையாளங்கள் அகற்றப்பட்ட சிங்கக்கொடி.
பதவியேற்பு நிகழ்வில் பௌத்த மதத் தலைவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டமை.
காணி, காவல்துறை அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கப்போவதில்லை என்ற அதற்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் அறிவிப்பு.
அமைச்சுக்களின் செயலாளர்கள் அனைவருமே சிங்களவர்கள்.
செஞ்சோலை நினைவு கூரலுக்குத் தடை.
இப்படி இவை எல்லாம் ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்டவைதான். ஆனால், இவ்வளவு விரைவாக வரும் என்பதுதான் எதிர்பார்க்காததது. இதன் தொடர்ச்சியாக என்னவெல்லாம் நடைபெறப் போகின்றது என்ற கேள்வியும் உள்ளது.
ஜனாதிபதி கோட்டடாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் சிங்களத் தேசியவாத நிலைப்பாட்டிலிருந்து உருவாக்கப்பட்ட ஒன்று. “வியத்மக” என்ற அமைப்புத்தான் கோட்டாபயவை ஜனாதிபதியாகக் கொண்டுவர வேண்டும் என்பதற்கான முயற்சிகளை நான்கு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்திருந்தது. சிங்கள தேசியவாத புத்திஜீவிகள், மற்றும் முன்னாள் படை அதிகாரிகளை இள்ளடக்கிய இந்த அமைப்பின் செல்வாக்கு அரசாங்கத்துக்குள் அதிகளவுக்கு இருப்பது இரகசியமானதல்ல. அரசாங்கத்துக்குள் நேரடியாக மட்டுமன்றி, அமைச்சுக்களின் செயலாளர்களாகவும் “வியத்மக” உறுப்பினர்கள் உள்ளே சென்றிருக்கின்றார்கள்.
சர்வதேச ரீதியாகவே தேசியவாத அமைப்புக்களின் எழிச்சியையும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் அவர்களுக்குள்ள இயலுமையையும் அண்மைக்காலத்தில் காணமுடிகின்றது. தீவிர தேசியவாதப் பாதையில் சென்றால்தான் அதிகாரத்தை இறுக்கமாக வைத்துக்கொள்ள முடியும் என்ற கருத்தும் உருவாகியிருக்கின்றது. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல என்றே தோன்றுகின்றது.
கண்டியில் இடம்பெற்ற அமைச்சரவைப் பதவியேற்பின்போது பறக்கவிடப்பட்டிருந்த “தேசியக் கொடிகளில்” சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மஞ்சள், பச்சை நிற அடையாளங்கள் நீக்கப்பட்டிருந்தன. தேசியக் கொடி எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பது அரசியலமைப்பிலேயே சொல்லப்பட்டிருக்கின்றது. அதற்கு முரணாக தேசியக் கொடியைப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம். அதனைத் தெரிந்துகொண்டிருந்தும் சிறுபான்மையினரின் அடையாளங்கள் நீக்கப்பட்ட “சிங்கக் கொடிகள்” பறக்கவிடப்பட்டிருந்தன. இது ஒரு தற்செயல் நிழ்வாக இருக்க வாய்ப்பில்லை. நன்கு திட்டமிட்ட ஒரு செயற்பாடு இது. இதன் மூலம் அவர்கள் சொல்லியிருக்கும் செய்தி வெளிப்படையானது.
இந்தியாவுக்கும், சர்வதேசத்துக்கும் “13 பிளஸ்” என மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது பல தடவைகள் வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், “13” கூட முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுதான் களநிலை. குறிப்பாக மாகாண சபைகளுக்கான காணி, காவல்துறை அதிகாரங்களைக் கொடுப்பதற்கு மத்திய அரசாங்கம் தயாராகவில்லை. இப்போது மாகாண சபைகளுக்கான இராஜங்க அமைச்சராப் பதவியேற்றிருக்கும் சரத் வீரசேகர, “இந்த அதிகாரங்களை வழங்கினால் காவல்துறை பிளவுண்டு போய்விடும். என்பதால் அவற்றை வழங்க முடியாது” என பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றார்.
சரத் வீரசேகர முன்னாள் கடற்படை அதிகாரி என்பதுடன், “வியத்மக” அமைப்பின் முக்கியமான ஒருவர் என்பதும் கவனிக்கத்தக்கது. கடும் சிங்களத் தேசியவாதப் போக்கைக் கொண்ட அவர், கடந்த சில வருடங்களாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களிலும் பிரசன்னமாகி சர்ச்சைகளை உருவாக்கிவருபவர். அவ்வாறான ஒரு நிலைப்பாட்டைத்தான் அவர் எடுப்பார் என்பது ஆச்சரியமானதல்ல.
இன்று நடைபெறவிருந்த செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. போரில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூருவதைத் தடை செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தது. ஆக, இவ்வாறான நினைவுகூரல்களைத் தடுப்பது ஐ.நா.வின் விதி முறைகளை மீறுவதாகவே இருக்கும். அரசாங்கத்தில் இராணுவத்தின் செல்வாக்கு அதிகளவுக்கு இருக்கும் நிலையில், படையினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய இது போன்ற நிகழ்வுகள் அரசாங்கத்துக்குச் சங்கடத்தைக்கொடுப்பதாகவே இருக்கும்.
தற்போது பதவியேற்றிருப்பது சிங்களத் தேசியவாதத்தையும், இராணுவப் பின்னணியையும் கொண்ட ஒரு அரசாங்கம். இப்படித்தான் இந்த அரசாங்கம் செயற்படும் என்பது எதிர்பார்க்கக்கூடியதுதான். இதனை எதிர்கொள்வதற்கும், தமிழ் மக்களின் இருப்பை உறுதிசெய்வதற்கும் தமிழ்த் தரப்பின் பிரதிநிதிகள் எந்தளவுக்குத் தயாராகவுள்ளார்கள்? இதுதான் தமிழ் மக்களிடம் இன்றுள்ள கேள்வி!
ஆசிரியர்

No comments:
Post a Comment