அரசாங்கத்தைப் பாதுகாக்கவே சர்வதேசம் முற்பட்டுள்ளது- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பை வழங்கி அரசாங்கத்தைப் பாதுகாக்கவே சர்வதேசம் முற்பட்டுள்ளது என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத் தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் தொடர்பாக சர்வதேசம் நீதி பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் தாங்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தெரிவிக்கையில், “எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச காணமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. நாங்கள் 11 ஆண்டுகளாக இந்த தினத்தில் வடக்கு கிழக்கில் உறவுகளைத் திரட்டி பேரணியான நீதி கேட்டு நிற்கின்றோம்.
எங்களால் கையளிக்கப்பட்டு காணமல் ஆக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு, வீடுகளுக்குள் புகுந்து இழுத்துச்செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை 11 ஆண்டுகள் கடந்தும் நாங்கள் தெருவிலே தேடிக்கொண்டிருக்கின்றோம்.
இலங்கை அராசாங்கத்தையும் இந்த ஆட்சி மாற்றங்களுக்கூடாக வந்தவர்களையும் கேட்டு எங்களுக்கு நீதிபெற முடியாத நிலையில் சர்வதேசத்தின் வாசலில் நீதி கேட்டு நிற்கின்றோம்.
ஐ.நா.வின் 36ஆவது கூட்டத்தொடரிலிருந்து இற்றைவரை நீதி கேட்டு நிற்கின்றபொழுது சர்வதேசமும் கால இழுத்தடிப்பைச் செய்து இலங்கை அரசாங்கத்தை காப்பற்றியதே தவிர எங்களுக்கான நீதியைப் பெற்றுத்தரவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டிலாவது சர்வதேசம் எங்களுக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும்.
இதேவேளை, இந்த தூய்மையான போராட்டத்தை புலம்பெயர் நாடுகளில் உள்ள உறவுகளும் அந்தந்த நாடுகளில் முன்னெடுக்க வந்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment