நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவால் 18 பேர் உயிரிழப்பு.........
நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 21 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நேபாள நாட்டின் சிந்துபல்சவுக் மாவட்டத்தின் ஜுஹல் ரூரல் என்ற பகுதியில் உள்ள மலைத்தொடர் பகுதியில் 170க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.
கடந்த சில நாட்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 14ம் திகதி காலை 6:30 மணியளவில் குடியிருப்பு பகுதிகள் அமைந்திருந்த மலைத்தொடர் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 37 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
தகவலறிந்து மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் மாதவ் பிரசாத் கப்லே கூறுகையில், ”கடந்த வெள்ளிக்கிழமை 11 சடலங்கள் மீட்கப்பட்டன. சனிக்கிழமை 2 குழந்தைகள் உட்பட 7 சடலங்கள் மீட்கப்பட்டன. அதற்கமைய இந்த அனர்த்தம் காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மண்ணுக்குள் சிக்கிய 21 பேரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மழைப் பொழிவும் உள்ளதால் மீட்புப் பணி பகலில் மட்டும் தொடர்கிறது” என தெரிவித்தார்.
விபத்து நடந்த இடம் நிலச்சரிவு அதிகம் நடக்க வாய்ப்புள்ள மலைப் பகுதி என்பதால், அங்கு வசிக்கும் மக்களை வேறு பகுதிக்கு மாற்ற நேபாள மறுசீரமைப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment