மக்களின் ஒத்துழைப்பே தேவை; ஊடகங்களும் பொறுப்போடு கடமை செய்தால் கொவிட் தொற்றை ஒழிக்க முடியும்!-ஜனாதிபதி
உலகின் உயர்தரம் வாய்ந்த அறிவைக் கொண்டுள்ள எமது நாட்டின் வைத்தியர்களாலும் சுகாதாரத் துறையினராலும் அதனை செய்ய முடியும்.
ஜனாதிபதி செயலகத்தில் தினமும் சந்திக்கும் கொவிட் ஒழிப்பு சிறப்பு செயலணி இன்று முற்பகல் கூடிய போதே இதனை அவர் தெரிவித்தார். ”நோய்த் தொற்றுக்கு மத்தியில் எமக்கு மேற்கொள்ள முடியுமான மாற்று வழிகள் 3 உள்ளன:
ஒன்று, ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்து முழு நாட்டையும் முடக்குவது;
இரண்டாவது, எதனையும் செய்யாதிருப்பது;
மூன்றாவது, நோயை கட்டுப்படுத்தும் அதே நேரம் நாட்டை வழமை போன்று பேணிச் செல்வது.
இவற்றில், நாம் மூன்றாவது வழியை தெரிவு செய்திருக்கின்றோம்” என்பதனையும் தெரிவித்தார்.
கொவிட் நோயாளிகளை இனம்கண்டு உரிய சிகிச்சையை வழங்கி முதற் கட்டத்திலேயே குணப்படுத்த மருத்துவர்களுக்கும் பணிக்குழாமினருக்கும் முடியுமாக உள்ளது.
எனவே, தீவிர சிகிச்சை சேவைகள் தேவையில்லை.
நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும், தாம் தொற்றுக்குள்ளாவதைத் தவிர்ந்திருப்பதற்கும் மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அதற்காகப் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல்களை மருத்துவர்களின் ஊடாக மக்களிடம் கொண்டு செல்வது ஊடகத் துறையின் முக்கிய பொறுப்பும் கடமையுமாகும்.
ஆரம்பத்தில் கொவிட் நோய்த்தொற்றை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதன் பின்னர் ஊடகங்களும் மக்களும் அனைத்தையும் மறந்துவிட்டதும், தத்தமது பொறுப்புக்களைத் தவறவிட்டதும் தற்போதைய நிலைமைக்கு காரணமாகும்.
நோய்த்தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை நாட்டை மூடி வைக்க முடியாது; யதார்த்தத்தை புரிந்துகொண்டு செயற்படவேண்டும்.
சுமார் 40 நாட்கள் மூடப்பட்டிருந்த பிரதேசங்களிலும் நாளாந்தம் தொற்றாளர்கள் பதிவாகின்றனர். இதிலிருந்து தெரியவருவது என்னவெனில், நாட்டை மூடிவைப்பதால் மட்டும் நோய்த்தொற்றை ஒழிக்க முடியாது என்பதாகும் என தெரிவித்ததார்.
எமக்கு இலகுவான வழி, நாட்டை மூடி வைப்பதாகும்; எனினும் மக்கள் வாழ வேண்டும். அதனால், நான் அதனைச் செய்யப்போவதில்லை.
தொழில்கள், விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் மக்கள் ஈடுபட வழிகளை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பது எனது பொறுப்பாகும்.
PCR பரிசோதனைக்காக அரசாங்கம் நாளொன்றுக்கு 6 கோடி ரூபாவுக்கும் அதிகம் செலவிடுகின்றது.
தனிமைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் நாளாந்தம் பெருந்தொகை செலவிடப்படுகின்றது.
மக்கள் இந்த நிலைமையைப் புரிந்துகொண்டு நோய்த்தொற்றுக்குத் தாம் ஆளாவதிலிருந்து தவிர்ந்திருப்பது அவர்களது தனிப்பட்ட பொறுப்பும் கடமையும் ஆகும் என்பதனையும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்களின் ஒத்துழைப்பே தேவை; ஊடகங்களும் பொறுப்போடு கடமை செய்தால் கொவிட் தொற்றை ஒழிக்க முடியும்!-ஜனாதிபதி
Reviewed by Author
on
November 10, 2020
Rating:

No comments:
Post a Comment