அண்மைய செய்திகள்

recent
-

9 மாதங்களுக்கு பிறகு இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

தெற்காசியாவின் சிறந்த சுற்றுலா நாடுகளில் ஒன்றான இலங்கையின் சுற்றுலா துறை, கடந்த 9 மாதங்களாக முழுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தனது சேவையை தொடங்கியிருக்கிறது. 9 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக இலங்கைக்கு 185 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திங்கட்கிழமை நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 

 மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு யுக்ரேன் நாட்டிலிருந்து இந்த சுற்றுலா பயணிகள் வந்தனர். சுமார் 10 முதல் 14 நாட்கள் வரை இவர்கள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கோவிட் - 19 தொடர்பான சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளுக்கு அமைய, இந்த சுற்றுலா பயணிகள் தென் மாகாணத்திலுள்ள நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இலங்கை சுற்றுலா அமைச்சின் தரவுகளுக்கு அமைய, இலங்கையின் சுற்றுலா துறை 1971ஆம் ஆண்டு முதல் சேவையை வழங்கி வருகிறது. தொடக்க ஆண்டிலேய 39,654 சுற்றுலா பயணிகள் தீவு நாட்டுக்கு வந்தனர்.

 இவ்வாறு சுற்றுலா துறை ஊடாக, 3.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவுக்கு அப்போது இலங்கைக்கு வருமானம் கிடைத்lதது. இதன் பிறகு இலங்கையின் சுற்றுலா துறை படிப்படியாக அபிவிருத்தி பாதையை நோக்கி நகர்ந்தது. இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் கூட, சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள், வருடந்தோறும் இலங்கைக்கு வந்தனர். இந்த நிலையில், ஆரம்ப காலம் முதல் பின்னடைவையே சந்திக்காத சுற்றுலாதுறை, இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு, கோவிட் தொற்று காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்டது.

 இலங்கையில் 2019ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலால் ஓரளவு சுற்றுலா துறை பின்னடைவை சந்தித்தாலும், அந்த ஆண்டு ஒப்பீட்டு ரீதியில் பின்னடைவை சந்திக்கவில்லை. 1975ஆம் ஆண்டில் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் என்ற மைல் கல்லை தொட்ட இலங்கையின் சுற்றுலா துறை, 2012ஆம் ஆண்டு முதல் தடவையாக ஒரு மில்லியன் சுற்றுலா பயணிகள் என்ற மைல் கல்லை எட்டியது. அதன் பின்னர், 2016ஆம் ஆண்டு இரண்டு மில்லியன் சுற்றுலா பயணிகள் என்ற மைல் கல்லை, இலங்கை எட்டியது. 2018ஆம் ஆண்டில் 23 லட்சத்து 33 ஆயிரத்து 796 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்தனர்.இதுவே இலங்கை வரலாற்றில் அதிகூடிய சுற்றுலா பயணிகள் நாட்டை வந்த வருடமாக வரலாற்றில் பதிவாகியது.

 2019ஆம் ஆண்டு சுற்றுலா துறையில் மற்றுமொரு மைல் கல்லை தொடுவதற்கு இலங்கை முயற்சித்த போதிலும், ஈஸ்டர் தாக்குதல் அதற்கு தடையாக இருந்தது. இதனால், 2019ஆம் ஆண்டு இலங்கையின் சுற்றுலா துறை மீண்டும் சற்று பின்நோக்கி நகர்ந்தது. 2019ம் ஆண்டு இலங்கைக்கு 19 லட்சத்து 13 ஆயிரத்து 702 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். சுற்றுலா துறையின் ஊடாக 2019ஆம் ஆண்டு இலங்கை, 3,606.9 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியிருந்தது.

 இலங்கை சுற்றுலா துறை வரலாற்றில் 2018ம் ஆண்டே, அதிகளவிலான வருமானம் கிடைத்த ஆண்டாக பதிவாகியுள்ளது. இதன்படி, 2018ஆம் ஆண்டு 4,380.6 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருமானத்தை, சுற்றுலத்துறையின் ஊடாக இலங்கை தனதாக்கிக் கொண்டது. இவ்வாறு சுற்றுலா துறையில் கொடிகட்டி பறந்த இலங்கைக்கு, கோவிட் - 19 வைரஸ் தடங்கலாக அமைந்தது.

 இந்த ஆண்டு முதல் 3 மாதங்களில் மாத்திரமே இலங்கையின் சுற்றுலா துறை உயிர் பெற்றிருந்தது. அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 434 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்தனர். அதேவேளை, பிப்ரவரி மாதம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 507 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். இலங்கையில் முதலாவது கோவிட் தொற்றாளர் பிப்ரவரி மாதம் இறுதி வாரத்திலேயே அடையாளம் காணப்பட்டிருந்தார்.

 இந்த நிலையில், மார்ச் மாதம் 71 ஆயிரத்து 370 சுற்றுலா பயணிகள் மாத்திரமே வந்தனர். மார்ச் மாதம் 20ஆம் திகதியுடன் நாடு முடக்கப்பட்ட நிலையில், விமான நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் , ஒரு சுற்றுலா பயணி கூட இலங்கைக்கு வருகைத் தரவில்லை. இலங்கையின் சுற்றுலா துறை பூஜ்ஜியம் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பின்னணியில், 9 மாதங்களின் பின்னர் முதல் தடவையாக 185 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்தனர்.

9 மாதங்களுக்கு பிறகு இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் Reviewed by Author on December 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.