அண்மைய செய்திகள்

recent
-

6 பண்ணையாளர்களை காணவில்லை...! கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் பண்ணையாளர் ஆறு பேர் தாக்கப்பட்டு விகாரையொன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சம்பவத்தினை கண்டித்தும் கடத்தப்பட்ட பண்ணையாளரை விடுவிக்க நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தியும் இன்று மாலை கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் நேற்று முன்தினம் ஆறு பண்ணையாளர்களை அடித்து கட்டிவைத்து அவர்களை தடுத்து வைத்துள்ளது தொடர்பில் நேற்று பண்ணையாளர்களின் உறவினர்கள் கரடியனாறு பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். 

 பின்னர் பண்ணையாளர்களின் உறவினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் தேசிய அமைப்பாளருமான தர்மலிங்கம் சுரேஷ் உட்பட கட்சி உறுப்பினர்கள் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் இணைந்து கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

 தமிழர்களின் பொருளாதாரத்தினை நசுக்காதே, கிழக்கு மீட்கும் பொய்வேசங்கள் எங்கே, விடுதலை செய், விடுதலை செய் பண்ணையாளர்களை விடுதலைசெய், ஒடுக்காதே ஒடுக்காதே தமிழினத்தை ஒடுக்காதே, நிறுத்துநிறுத்து அத்துமீறிய குடியேற்றங்களை நிறுத்து, பண்ணையாளர்கள் எம் இனத்தின் முதுகெழும்புகள், எமது நிலம் எமக்கு வேண்டும் போன்ற பல்வேறு சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வயிற்றில் அடிக்காதே வயிற்றில் அடிக்காதே பண்ணையாளர்களின் வயிற்றில் அடிக்காதே, மேய்ச்சல் தரை மீது அத்துமீறாதே போன்ற கோசங்களையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.

 நேற்று இரவு அடைத்து வைத்திருந்த மாடுகளை மேய்க்க கொண்டுசென்றவர்களை அங்கு அத்துமீறிய விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் துரத்தியுள்ளனர். அதில் ஒருவர் அவர்களிடம் அகப்படவே அவரின் கைகால்களை கட்டி அடித்துள்ளனர். அதனை தொடர்ந்து பண்ணையாளர்கள் சிலர் அங்கு சென்று அவரை மீட்பதற்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் அவர்களையும் பிடித்துள்ளனர்.

 அவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர். அதன் பின்னர் அவர்களின் தொலைபேசிகள் இயங்கவில்லை. இன்றுவரையில் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. இன்று பொலிஸ் நிலையத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு எடுத்தபோது அவர்களை விகாரையொன்றில் வைத்துள்ளதாக தெரிவித்தனர். இந்த கரடியனாறு பொலிஸ்தான் நீண்டகாலமாக மயிலத்தமடு பிரச்சினையை விசாரணை செய்கின்றது. பெருமளவான முறைப்பாடுகள் இங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன. எந்தவித பிரயோசனமும் இல்லை.

 கிழக்கினை மீட்கின்றோம், மட்டக்களப்பினை மீட்கின்றோம் என்று சொல்பவர்கள் பண்ணையாளர்களின் பிரச்சினையையும் ஓரு பிரச்சினையாக கணக்கில் எடுங்கள்.நீங்கள் பீட்சா சாப்பிடவேண்டும் என்பதற்காக நாங்கள் தண்ணிசோறு சாப்பிடுகின்ற எமது பொருளாதாரத்தினை காப்பாற்றுங்கள். மக்களை ஏமாற்றாமல் பிடிபட்டுள்ளவர்களை மீட்பதற்கும் மயிலத்தமடு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைப்பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கவும் என இங்கு கலந்துகொண்ட பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

6 பண்ணையாளர்களை காணவில்லை...! கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் Reviewed by Author on January 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.