அண்மைய செய்திகள்

recent
-

#தெல்லிப்பழை #யூனியன் #கல்லூரியில் #நடந்தது #என்னவலிகாமம் கல்விவலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் உண்மை நிலமையை தெளிவுபடுத்துகிறார்

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் ஒரு நாள் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அதிபரிடம் இருந்து கிடைத்த ஒரு தகவலை அடுத்து பாடசாலைக்கு நேரில் சென்று இருந்தேன். பாடசாலைக்கு சொந்தமான காணி என அடையாளப்படுத்தப்பட்ட அதிபர் விடுதி இருந்த காணியை அமெரிக்க மிஷனரி கிறிஸ்தவ சபையை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கூரை ஓடுகளையும் தீராந்திகளையும் கழற்றி கொண்டிருப்பதாக அதிபர் தெரிவித்ததுடன் அந்த வளாகத்தில் நேரடியாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர்களையும் கூட்டிச்சென்று காட்டியிருந்தார். 

 காணி பாடசாலைக்கு சொந்தமானது என்றும் அதற்கு போதுமான ஆவணங்களை தான் வைத்திருப்பதால் நீங்கள் செய்து கொண்டிருப்பது சட்டவிரோதமான வேலை என்று அதிபர் கூறியதையடுத்து நாட்சம்பளத்திற்கு வேலை செய்ய வந்திருந்தவர்களான அந்த வேலையாட்கள் உடனடியாக வேலையை கைவிட்டு திரும்பிச் சென்றனர். மீண்டும் அடுத்த வாரத்தில் கல்லூரி அதிபரிடம் இருந்து இதே விதமான முறைப்பாடு கிடைத்தது. திரும்பவும் வேலையாட்களுடன் குறித்த சபையை சேர்ந்தவர்கள் அந்தக் காணியை ஆக்கிரமித்து திருத்த வேலைகளுக்குரிய ஆயத்தங்களோடு வந்திருப்பதாக தெரிவித்தார். 

 இம்முறை அந்த வேலையை ஒப்பந்தகாரர் ஒருவரிடம் ஒப்படைத்திருப்பதால் அவர்கள் தன்னுடைய பேச்சை கேட்க மறுக்கிறார்கள் என்ற காரணத்தை பாடசாலைத் தரப்பு தெரிவித்ததையடுத்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு நேரடியாக பாடசாலை தரப்போடு, வலிகாமம் வலயக்கல்வி பணிமனை தரப்பிலும் இணைந்து முறைப்பாடு செய்திருந்தோம். அப்போதைய தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒரு கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். 

அன்றைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தபோது மிஷனரி சேர்ந்தவர்கள் சார்பில் பாதிரியாருக்குரிய உடையோடு ஒருவரும் சாதாரண சிவில் உடையோடு ஒருவரும் அவருடைய மனைவியுமாக மூவர் வந்திருந்தனர் பொலிஸ் தரப்பில் பாடசாலை வைத்திருக்கிற காணிக்குரிய ஆவணங்களை கேட்டபோது அதிபர் தன்னிடமிருந்த காணி சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் பொலிஸூக்கு காட்டியதுடன் அதற்கான பிரதியையும் ஒப்படைக்க தயாராக இருந்தார் அதே கேள்வியை மிஷனரி தரப்பிடம் போலீஸ் கேட்டபோது ஆவணங்கள் தற்போது தங்களிடம் இல்லை என்றும் கடந்த ஆட்சியில் பிரதமர் ஒரு நிகழ்வில் உரையாற்றிய பத்திரிகை செய்தியை மட்டுமே ஆவணமாக காட்டி இருந்தனர். எதிராக பாடசாலை தரப்பினரால் காட்டப்பட்ட ஆவணங்களாக பாடசாலை அரசுடமையாக்கப்பட்ட போது அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல் பிரதி, பாடசாலை காணிக்குரிய உறுதி, மூன்று வெவ்வேறு காலப்பகுதிகளில் (1970 - 1980 - 1990) பெறப்பட்ட பாடசாலை காணிக்குரிய வரைபடங்கள் ஆகியன ஆவணங்களாக காட்டப்பட்டன. 

அன்று அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்ட காணி அரச பாடசாலைக்குரிய அதிபர் விடுதி என்று தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டு இருப்பதை சுட்டிக் காட்டிய தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மிஷனரி சேர்ந்தவர்கள் அந்தக் காணியில் எந்தவிதமான நடவடிக்கையில் ஈடுபடுவதானது சட்டவிரோதமானது என்றும் இது பாடசாலைக்குரிய காணி என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு இருப்பதால் உடனடியாக அந்தக் காணியில் திருத்த வேலைகள் செய்வதை நிறுத்துமாறு மிஷனரியினரிடம் கூறியதுடன் பாடசாலைக்கு இரண்டு போலீசாரையும் அனுப்பி வைப்பதாக உறுதி கூறியிருந்தார். 

 மேலும் மிஷனரியினருக்கு அறிவுரை கூறும்போதும், “நானும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவனே, கிறிஸ்தவ பாடசாலைகளை அரசுடமையாக்க முதல் குறித்த பாடசாலைகளில் மதகுருக்களே அதிபர்களாக இருந்த காலப்பகுதியில் அந்தப் பாடசாலையின் அதிபர் விடுதிகளை மதகுருக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் அதிபர்களாக இருந்த மதகுருக்கள் பயன்படுத்திய காரணத்தினால் அதிபர் விடுதிக்குரிய காணியை கோருவது தவறென்றும் அரசுடமையாக்கப்பட்ட பின் காணியாக மட்டுமே அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற தனது பக்க நியாயத்தை எடுத்து வைத்ததோடு மேலும் இதுபோன்ற குழப்பங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் மிஷனரியினருக்கு கூறி அனுப்பி இருந்தார். 

 மாகாண பாடசாலைகளில் காணி தொடர்பான அதிகாரம் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்குரியதாக இருப்பதன் காரணமாக குறித்த பாடசாலையின் பிரச்சினையை வலயமட்ட குழுவின் அவதானிப்பு அறிக்கையுடன் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு முறைப்பாடு மூலமாக தெரிவித்திருந்தோம். குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் கல்வியமைச்சின் செயலாளர் பாடசாலை தரப்பினரையும், பிரதேசத்தில் காணி அதிகாரத்தை பொறுப்பாக இருக்கின்ற தெல்லிப்பளை பிரதேச செயலக தரப்பினரையும் குறித்த மிஷனரி சேர்ந்தவர்களையும், வலயப்பணிப்பாளரையும் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தார். 

 ஆரம்பத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த குழு கலந்துரையாடல்கள் மிஷனரி தரப்பினரின் வருகையின்மை காரணமாக முடிவெட்டப்படாமல் இருந்ததுடன், ஒரு கலந்துரையாடலுக்கு வந்திருந்த மிஷனரி தரப்பினர் குறித்த காணி தங்களுக்குரியதென உரிய ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்காமல் வாதாடியதுடன் அந்த சந்திப்பில் இருந்து பொருத்தமான முடிவு எடுக்கப்படாமல் வெளியேறியுமிருந்தனர். இறுதியாக நடந்த கலந்துரையாடலில் படி தெல்லிப்பழை பிரதேச செயலகத்தினாலும், மாகாண நிலஅளவை பணிப்பாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட வரைபடம் உறுதி உட்பட்ட ஆவணங்களின் படியும் குறித்த காணி பாடசாலைக்குரியது என செயலாளரினால் தீர்மானிக்கப்பட்டு கூட்ட தீர்மானம் பங்குபற்றிய தரப்புக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

மேலதிக உறுதிப்படுத்தலாக, 2021 மார்ச் மாத நடுப்பகுதியில் தெல்லிப்பழை பிரதேச செயலாளரினால் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு வரையப்பட்ட கடிதத்தின்படி மாகாண நில அளவைத் திணைக்கள பணிப்பாளரிடமிருந்து மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட குறித்த காணிக்குரிய உறுதி, வரைபடம் ஆகிய சான்றுகளின் மூலம் குறிப்பிட்ட காணி தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கே சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்ட எழுத்து மூலமான சான்று, பாடசாலை மற்றும் வ.க. பணிமனைக்கும் பிரதியிடப்பட்டுள்ளது.

 இவ்வாறான பின்னணியிலேயே இன்றைய தினம் தமது பாடசாலைக்குரிய காணியில் மாணவர்களுடைய துவிச்சக்கர வண்டிகளை தரித்து வைக்க பயன்படுத்துகின்ற நிலையில் குறித்த மிஷனரிகள் சேர்ந்தவர்கள் ஆசிரியர்களையும் மாணவர்களையும் கொலைவெறியோடு தாக்கியதில் 3 மாணவர்கள் காயம் ஏற்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொடூரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க மிஷனரியைச்சேர்ந்த மதகுருக்களின் முன்னிலையிலேயே குறித்த மிஷனரியை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீதும் ஆசிரியர்கள் மீதும் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர். 

சம்பவத்தோடு நேரடியாக தொடர்புபட்டுள்ள தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் இவ்விடத்தில் மிகுந்த பொறுமை காத்து நடந்திருந்த விதம் அனைத்து தரப்பின் பாராட்டையும் பெற்றிருக்கிறது. சம்பவம் அறிந்து உடனடியாக பாடசாலைக்கு வருகை தந்த பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பா. அபிவிருத்தி சங்கத்தினர் ஆகியோர் எதிர்த்தாக்குதல் எதையும் நடத்தாமல் மிகுந்த பொறுமை காத்து அந்த நிலைமையின் பதட்டத்தை தணிக்க செய்திருக்கிறார்கள். நிச்சயமாக ஒரு மதமுரண்பாடாக பற்றிக் கொள்ளக்கூடிய சம்பவத்தை தெல்லிப்பளை யூனியன் கல்லூரி தரப்பினர், இந்நாட்டு சட்ட திட்டங்களின் மீதும் நீதி-ஆட்சி அதிகாரத்தின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையின் பால் மிகுந்த பொறுமை உணர்வோடும் நடந்து கொண்டிருக்கின்றனர், என்றே கணிக்க முடிகிறது. 

 கல்விச் சமூகத்திற்குரியவர்கள் என்ற கண்ணியத்தோடும், பொறுப்புணர்வோடும், சமூகப்பிரக்ஞை மிக்கவர்களாக தெல்லிப்பளை யூனியன் கல்லூரி சமூகத்தினர் இன்றைய தினம் நடந்து கொண்டிருந்த போதும், மிஷனரியினரின் அநியாயமான அத்துமீறல்கள் தொடருமாயின் பாடசாலைச் சமூகத்திடம் தொடர்ச்சியாக இதே போன்ற பொறுமையை எதிர்பார்க்க முடியும் என்று கூறிவிடமுடியாது! சட்டபூர்வமில்லாத தமது அநியாய கோரிக்கைகள் மதவெறியாக மாறி பள்ளியில் கற்கும் மாணவக்குழந்தைகள் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு துணிந்த ஈனத்தனத்தை மிஷனரியை சேர்ந்தவர்களும் அவர்களை கட்டுப்படுத்துகின்ற தலைமைப்பீடத்தை சேர்ந்தவர்களும் மிக விரைவாக புரிந்துணர்ந்து இந்த விடயத்தில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி சமூகத்தினரின் நியாயத்தை விளங்கிக்கொண்டு பதட்டத்தை தணிக்குமுகமாக குறித்த பாடசாலை விடுதிக் காணியிலிருந்து குறித்த சபையினர் அகன்று விடுவதே மிகப் பொருத்தமானதும், வலிகாமம் வடக்கு பிரதேசத்தினுடைய அமைதிக்கும்,சமூக நல்லிணக்கத்திற்கும் உதவுவதாகவும் இருக்கும். - வலிகாமம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்

.
#தெல்லிப்பழை #யூனியன் #கல்லூரியில் #நடந்தது #என்னவலிகாமம் கல்விவலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் உண்மை நிலமையை தெளிவுபடுத்துகிறார் Reviewed by Author on April 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.