அண்மைய செய்திகள்

recent
-

'படித்தவன் தான் விவசாயம் செய்ய வேண்டும்' இயற்கை விவசாயமும் சேனாதி ஐயாவும்

தமிழர்களின் வாழ்வியலில் பிரிக்க முடியாத ஒன்றாக இருந்தது விவசாயம். நாகரீக மாற்றத்திற்கு இணங்க சமூக மாற்றத்தை ஏற்று பயணித்துக் கொண்டிருக்கும் நாம் பெருமளவில் மறந்து விட்டது நம் இயற்கை விவசாயத்தை. காடு வெட்டி களனி ஆக்கி களையெடுத்த நம் சமுதாயத்தில் கவலைக்குரிய விடயங்கள் இன்றளவில் ஏராளம். 'நான் மரித்துப் போனாலும், என்னுடைய உள்ளக்கிடக்கையில் இருக்கும் விவசாயம் என்றும் மரியாது' என்று இன்றளவில் கூட இயற்கை விவசாயத்தை தான் சிரமேற்கொண்டு செய்து வருகின்றார் முத்தையா சேனாதி ஐயா. அளவெட்டி வடக்கில் 1944ம் ஆண்டு முத்தையா சின்னம்மா ஆகிய இருவருக்கும் பிறந்த இவர் இயற்கை விவசாயத்துடன் மாத்திரமன்றி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான மாட்டுவண்டிச் சவாரியிலும் கூட பிரசித்தம் பெற்றவர் என்று கூறினால் அது மிகையாகாது. 

சுமார் 10ஏக்கர் பரப்பில் அவரது தந்தையாரின் வழிகாட்டலில் விவசாயத்தினை விஸ்தரித்து இன்றும் அதனைச் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றார். 1962 ம் ஆண்டு ளுளுஊ உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து இவர் சுகயீனம் காரணமாக மேற்படிப்பைத் தொடர முடியாமல் போகையிலும், உத்தியோகத்திற்குச் சென்றால் அடுத்தவரிடம் கை கட்டி அடிமையாக வேலை பார்க்க வேண்டும் என்று உள்மன ஓட்டத்தினால் இயற்கை விவசாயத்தில் காலடி பதித்தார். பெரும் நிலப்பரப்பு என்பதனால் பல வகையான பயிர்களைப் பயிரிடக்கூடியதாக உள்ளது. இங்கு உள்நாட்டு, வெளிநாட்டுப் பயிர்செய்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த உள்நாட்டுப் பயிர்வகைகளாக பீற்றூட், நிலக்கடலை, தக்காளி, கெக்கரிக்காய், கருணைக்கிழங்கு, பப்பாசி, வாழை, மா, வெங்காயம் மற்றும் , கோவா போன்ற 08 – 10 பயிர்வகைகள் பயிரிடப்படுகின்றன. வெளிநாட்டுப் பயிர்ச்செய்கையாக கத்தரிப் பயிர்ச்செய்கையை மேற்கொள்கின்றார். 

மஞ்சள் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் கூட தன்னுடைய நிலப்பரப்பில் குறிப்பிட்டளவு மஞ்சளை உற்பத்தியும் செய்துள்ளார். அதிகாலை நான்கு மணிக்கு ஆரம்பமாகும் தனது விவசாயப் பணியை, தாய் தன் குழந்தையைப் பார்ப்பது போன்று ஒவ்வொரு பயிர்களிலும் தனிக்கரிசனம் கொண்டு காத்து வருகின்றார் சேனாதி ஐயா. இயற்கை அழிவைத் தவிர வேறு எந்தப் பாதிப்புக்களும் ஏற்படாது என ஐயா குறிப்பிட்டார். வீரம் விளைந்த நம் மண்ணில் 200ற்கும் மேற்பட்ட மாட்டுவண்டிச் சவாரிப் போட்டிகளிலும் பங்குகொண்டு ஏராளமான வெற்றியை சுவீகரித்துக் கொண்ட இவர் தற்போது முதுமை காரணமாக மாட்டுவண்டிச் சவாரிகளில் பங்குகொள்வதில்லை. 

இன்றளவில் எங்கு பார்த்தாலும் விவசாயத்தினைக் காப்பதற்காக ஆர்ப்பாட்டமும், உரப்பிரச்சினையும் அதிகரித்துக் கொண்டு வரும் வேளையில் இனிவரும் காலங்களில் இயற்கை விவசாயம் கேள்விக்குறியாகி பட்டினிச்சாவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் தினம் தினம் பீதியை தான் உருவாக்குகின்றது. சுத்தமான காற்றும், குடிநீரும் வியாபாரமாய் மாறிப்போன இந்தக் காலத்தில் இவ் வகையான இயற்கை விவசாயக்காப்பாளர் உள்ளதும், அவ் இயற்கை விவசாய விரும்பியான சேனாதி ஐயாவுடன் விவசாயமும் நீடூழி வாழ்ந்தால் அது வரமே!!! 

சங்கீர்த்தனா புலேந்திரன் 
நான்காம் வருடம் 
ஊடகக் கற்கைகள் துறை 
யாழ்பல்கலைக்கழகம்







'படித்தவன் தான் விவசாயம் செய்ய வேண்டும்' இயற்கை விவசாயமும் சேனாதி ஐயாவும் Reviewed by Author on December 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.