அண்மைய செய்திகள்

recent
-

எகிறும் விலைகளுக்கு மத்தியில் கேள்விக்குறியாகும் நாட்டின் எதிர்காலம்.....

இலங்கையை பொறுத்தவரை மக்களின் அத்தியவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உரிய அடிப்படை வருமானத்தை பொறுவதே சவாலுக்குரியதாகி விட்டது. கொரோனா பெருந்தெற்றினால் பலர் வேலைகளை இழந்துள்ள நிலையில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் பொருட்களின் விலைகள் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களின் வாழ்வை பாதிக்கும் என்பதை உணராத அரசும் மேல்தட்டு வியாபாரிகளும் தமது சுய இலாபத்திற்காக விலைகளை அதிகரித்து வருகின்றனர். 

தற்போதைய நிலையில், இலங்கை அரசாங்கத்தின் கழுத்தை இறுக்கும் கடன்சுமை என்னும் கயிற்றை தளர்த்த ஆடம்பரப் பொருட்கள் மீதான விலையேற்றம் என்னும் ஆயுதத்தை அரசு கையிலெடுத்துள்ளது. இந்தச் செய‌ற்பாடு மூலம், மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்கான அத்தியவசிய பொருட்களின் விலைகளிலும் அதிகரிப்பை ஏற்படுத்தி, அரசாங்கத்தின் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டிருக்கும், கடன்சுமை எனும் கத்தியின் ஒரு முடிச்சுக் கயிற்றைத் தளர்த்த எத்தனித்துள்ளது. 

 கடந்த யூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து கார்த்திகை மாதம் வரை ஏற்பட்டுள்ள சடுதியான விலை அதிகரி;ப்பு அத்தியவசியப் பொருட்சந்தையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அரிசி 37 சதவீதத்தாலும், சமையல் எரிவாயு தற்போதய சந்தை நிலவரப்படி 2656ரூபாவாக உள்ளதுடன் இது 89.7 சதவீதத்தாலும், சீனி 120 இல் இருந்து 220 ரூபாவாக 83.3 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளதுடன் நகர் பகுதியில் 220 ரூபாவிற்கு சீனி விற்பனை செய்யப்பட்டாலும், பின்தங்கிய பிரதேசங்களில் 240 ரூபாவிற்கே சீனி விற்பனை செய்யப்படுகின்றது.. இது 85.7 சதவீதமாக உள்ளது. மேலும் பால்மா 380 இலிருந்து 48;;0 ஆக 26.3 சதவீதத்தாலும் சீமெந்து 9.2 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன. மேலும் 90 வீதமான அத்தியவசியப் பொருட்கள் விலை அதிகரிப்பிற்கு உள்ளாகியுள்ளன என்பது குறிப்பிட வேண்டிய விடயமாகும். மரக்கறிகள் மற்றும் கடலுணவுகளை பொறுத்தவih அனைத்துமே விலை அதிகரிப்பிற்கு உள்ளாகியுள்ளன. இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் மட்டுமல்லாது இறக்குமதி செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் மருந்துகளின் விலைகளும் அதிகரித்துள்ளன. 

 அரசு இறக்குமதிகள் மீதான வரியை அதிகரித்ததன் வாயிலாகவும் இறக்குமதி மீதான தடை மூலமாகலும் வாகனங்கள் மற்றும் இலத்திரணியல் உபகரணங்கள் என்பவற்றிற்கான தட்டுப்பாடுகள் ஏற்படவும் வழிகோலிற்று. இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை ,கடந்த சில காலமாகவே வெகுவாக அதிகரித்து வருகின்ற பின்னணியில், விலை உயர்வால் நாட்டு மக்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறான நிலையில், அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகளை இலங்கை அரசாங்கம் அறிவித்தது. இதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தரவிற்கு அமைய செட்பம்பர் 31ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அவசரகால விதிமுறைகளுக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

 பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2வது சரத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அத்தியாவசிய உணவு விநியோகத்துடன், தொடர்புப்பட்ட அவரகால விதிமுறைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. என்பதை ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை உறுதிப்படுத்தி, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 

 நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகப் பதுக்குதல், அதிக விலை அறவிடுவதன் மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக, அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு அல்லது சுங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலையை அடிப்படையாகக் கொண்டு நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகக் கொள்வனவு செய்து மக்களுக்கு நியாயமான விலைக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும், அரச வங்கிகளின் மூலம் மொத்தமாகக் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கடன், கடன் பெற்றுக்கொண்டவர்களிடம் இருந்து அறவிடப்படக்கூடிய வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

 சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் அத்தியவசியப் பொருட்களின் விலை உயர்விற்கு வியாபாரிகளின் பொருட்பதுக்கலே காரணம் என குறை கூறிய அரசு அதை தடுக்க ஐப்பசி மாதம் 31ஆம் திகதி பொருளாதார அவசர நிலையையும் அறிவித்தது. அத்தியவசியமற்ற பொருட்களின் விலைகளுக்கு கட்டுப்பாடுகளும் விதித்தது இருந்தாலும் அதுவும் நிலைகளை சீரடையச் செய்யவில்லை. 

 இதற்கு எதிராக பலரும் கொந்தளிக்கத் தொடங்கினர். இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறுகையில், “அத்தியவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அவசர நிலை தேவையில்லை இது மக்கள் மீதான தாக்குதல்” என சாடினார். தமிழ் தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகையில் “உணவு வினியோகம் விலைவாசி அதிகரிப்பு எமக்கு பெரிய பிரச்சினையாக தான் உள்ளது. ஆனால் அவசர நிலையை பிரகடனப்படுத்தி தான் இதற்கு பதிலை பெற முடியும் என்று கூற முடியாது. உணவுப் பதுக்கலை தடுக்க எத்தனை சட்டங்கள் இருக்கும் போது எதற்காக அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டது” என கேள்வி எழுப்பினார். அவசர கால சட்டம் பெயரளவில் மட்டும் செயற்படுத்தப்பட்துடன் பாரிய மாற்றம் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை.

 மக்களுக்கு எந்த சாதகமான பலனையும் அது கொடுக்கவில்லை என்றே கூற வேண்டும். செப்ரம்பர் மாத பிற்பகுதியில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் அரிசி, சமையல் எரிவாயு , சீனி, பருப்பு, பாசிப்பயறு, நெத்தலி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன், கடலை, கோதுமை மா, கருவாடு, தேங்காய், கோழி இறைச்சி, பால்மா மற்றும் சோளம் போன்ச அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை கட்டுப்பாடு நீக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. 

 இந்த முடிவுகள் பெரிய வணிக, அரிசி உரிமையாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத விலை அதிகரிப்புக்களை விதிக்க கதவுகளை திறந்து விட்டன. அரசின் எந்த நடவடிக்கைகளிலும் விடயத்திலும்; பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்களே என்ற அடிப்படையில் இந்த அவசரகால சட்டம் மற்றும் விலை கட்டுப்பாடு நீக்கப்பட்டமை விலை உயர்வால் ஏற்கனவே நசுக்கப்பட்ட மக்களை மேலும் நசுக்கியது. 

 எது எவ்வாறு இருந்தாலும் இலங்கையில் டொலர் பற்றாக்குறையால் ஏற்பட்ட இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி, கொரோனா பெருந்தொற்று காரணமாக சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலையேற்றம், மற்றும் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட உள்ளுர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வருவாய் என்பன குறைந்தமையும் பிரதான காரணங்களாக இருந்தாலும் வியாபாரிகளின் பொருட் பதுக்கல்களும் விலை உயர்விற்கு காரணமானது என்றே கூறலாம்.

 இலங்மையின் பிரதான வருமான மார்க்கமாக இருந்த சுற்றுலா துறையில் ஏற்பட்ட பாரிய சரிவுநிலை, ஆடை உற்பதி மூலம் கிடைத்து வந்த 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம், என்பவற்றோடு நாட்டின் மொத்த உற்பத்தியில் பங்களிப்பு செய்யும் நடுத்தர மற்றும் சிறு வணிகர்களும் பாதிப்புக்குள்ளானமை, சுற்றுலா மற்றும் தினசரி ஊதியதாரர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் 4.5 மில்லியன் வருமான ஆதாரங்களை இழந்துள்ளமை, நாட்டில் ஏற்பட்ட கடன் சுமை போன்றவற்றை நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என கூற முடியும். இவ்வாறான நிலையில் அன்றாட வாழ்க்கை செலவுகளை ஈடு செய்ய முடியாத நிலையில் பல இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர ஆரம்பித்துள்ளனர். 

இதனால் குடிவரவு குடியகல்வு திணைக்கத்தை நோக்கி படையெடுக்க மக்கள் ஆரம்பித்துள்ளமை இந் நாட்டின் நிலையை புரிந்துகொள்ளச் செய்கிறது. இவ்வாறு நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறை பாரிய சுமையாக மாறி மக்களை அழுத்தும் நிலையில் பாதீட்டிற்கான நிதி கூட இல்லாத நிலையில் நாட்டின் எதிர்காலம் பாரியதொரு கேள்விக்குறியாக மாறியுள்ளது என்றே கூற வேண்டும். 

 இலங்கையில் டொலர் பற்றாக்குறையால் ஏற்பட்ட இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியை ஈடு செய்ய முடிந்தால் மட்டுமே நாட்டை மீட்டு எடுக்க முடியும் என்கின்ற நிலையில் மக்கள் மேல் விலை என்னும் பெயரில் சுமத்தப்படும் சுமை குறைய வாய்ப்பு குறைவு என்றே கூற வேண்டும். ​​​​​​​​​

 எ.அன்ரனற் ஜீவிதா
 ​​​​ஊடக கற்கைகள் துறை, ​​​​​​​​​
 4ம் வருடம்,



எகிறும் விலைகளுக்கு மத்தியில் கேள்விக்குறியாகும் நாட்டின் எதிர்காலம்..... Reviewed by Author on December 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.