அண்மைய செய்திகள்

recent
-

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மு.க.ஸ்டாலின், ஜெய்சங்கருக்கு கடிதம்

 இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது காவலில் உள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது படகுகளை விரைவாக விடுவிக்கவும் உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று கடற்றொழிலாளர்கள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தை முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.


கடந்த 27  ஆம்  திகதியன்று மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற இவர்கள், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.


இந்நிலையில் இத்தகைய கைது சம்பவங்கள் மிகுந்த கவலையளிக்கும் வகையில் அடிக்கடி நிகழ்ந்து வருவதாகவும், இது தமிழகக் கடலோரப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கடற்றொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


தற்போதுள்ள தரவுகளின்படி, தமிழகத்தைச் சேர்ந்த 61 கடற்றொழிலாளர்களும், 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை அதிகாரிகளின் வசம் உள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த விவகாரத்தை உரிய இராஜதந்திர வழிகள் மூலம் உடனடியாகக் கையாண்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கடற்றொழிலாளர்களையும் அவர்களது படகுகளையும் முன்கூட்டியே விடுவிப்பதை உறுதி செய்யுமாறு மத்திய அரசை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.


மேலும், எதிர்காலத்தில் இத்தகைய கைது நடவடிக்கைகளைத் தடுப்பதற்குப் பயனுள்ள பொறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இலங்கையுடனான இருதரப்பு உறவுகளில் தமிழக கடற்றொழிலாளர்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.





தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மு.க.ஸ்டாலின், ஜெய்சங்கருக்கு கடிதம் Reviewed by Vijithan on December 29, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.