அண்மைய செய்திகள்

recent
-

மாஸ்க்வா: நடுக்கடலில் மிதந்த ரஷ்யாவின் ஆயுதக் கிடங்கு... உக்ரைன் வீழ்த்தியதா, விபத்தினால் மூழ்கியதா?

மாஸ்க்வா - கப்பல் மூழ்கியதற்குக் காரணம் எதுவாக இருந்தாலும், இது உக்ரைனுக்கு ஒருவகையில் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. ரஷ்ய ராணுவத்துக்கு உளவியல்ரீதியாக பின்னடைவை இது கொடுத்துள்ளது. மாஸ்க்வா - ரஷ்யாவின் பெருமைமிக்க போர் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது இந்தப் போர்க்கப்பல். கருங்கடல் பகுதியில் கம்பீரமாக உலா வந்த இந்தக் கப்பலின் தோற்றமே எதிரிப் படைகளை நடுங்க வைக்கும். சோவியத் யூனியன் செல்வாக்காக இருந்த காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கப்பல் சிரியா, ஜார்ஜியா என்று பல போர்க்களங்களில் ரஷ்ய ராணுவத்துக்கு உதவியது. இப்போது உக்ரைன் மீதான தாக்குதலில் இருந்தபோது இந்தக் கப்பல் மூழ்கியிருக்கிறது. "ஏவுகணை ஒன்றை ஏவும்போது தவறுதலாக கப்பலில் தீப்பிடித்துவிட்டது. அதைப் பாதுகாப்பாக கரைக்குக் கொண்டுவர முயன்றோம். ஆனால், அலைகளில் தடுமாறி மூழ்கிவிட்டது" என்கிறது ரஷ்யா. ஆனால், "நாங்கள்தான் ஏவுகணை மூலம் அதைத் தாக்கி அழித்தோம்" என்கிறது உக்ரைன். இந்தப் போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய இழப்பு இது என்று ராணுவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். 

என்ன நடந்தது? உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 50 நாள்களைக் கடந்து நடந்து கொண்டிருக்கிறது. ரஷ்யா போன்ற ஒரு வல்லரசு தேசம் உக்ரைன் என்ற குட்டி நாட்டில் ஏன் இவ்வளவு திணறுகிறது என்று பல தரப்பிலும் கேள்விகள் எழுந்திருக்கின்றன. இந்த நேரத்தில் ரஷ்யா இந்தப் போர்க்கப்பலை இழந்துள்ளது. போர் விமானங்கள் இறங்கும் அளவுக்கு பிரமாண்ட விமானதளங்களைக் கொண்ட அமெரிக்க போர்க்கப்பல்களுக்கு இணையாக ரஷ்யா சில கப்பல்களை உருவாக்கியது. மாஸ்க்வா அதில் ஒன்று. அப்போதைய சோவியத் ரஷ்யாவில் உக்ரைனும் ஓர் அங்கமாக இருந்தது. அப்போது உக்ரைனில் 1979-ல் ஸ்லேவா என்ற பெயரில் உருவாக்கப்பட்டது இந்தக் கப்பல். 

வானில் செல்லும் விமானங்களைத் தாக்கும் ஏவுகணைகள், போர்க்கப்பல்களைத் தாக்கும் ஏவுகணைகள், நீருக்கடியில் பாயும் ஏவுகணைகள், கப்பலின் மேற்தளத்தில் பொருத்தப்பட்ட துப்பாக்கிகள், பீரங்கிகள், எல்லாவற்றுக்கும் மேலாக அணு ஆயுதங்கள், ஹெலிகாப்டர் இறங்குதளம் என நடுக்கடலில் மிதக்கும் ஆயுதக் கிடங்கு போல இந்தக் கப்பல் இருந்தது. கருங்கடல் பகுதியில் ரஷ்யாவுக்குப் பெரும் பாதுகாப்பு அரண் இதுதான். 12,500 டன் எடை கொண்ட இந்தக் கப்பலில் 400 வீரர்கள், அதிகாரிகள் இருப்பார்கள். 1990களில் சோவியத் யூனியன் உடைந்தபிறகு இந்தக் கப்பலும் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவைக் குறிப்பிடும் வகையில் இதற்கு மாஸ்க்வா என்ற பெயரைச் சூட்டினார் அதிபர் விளாடிமிர் புதின். உலக நாடுகளின் தலைவர்கள் ரஷ்யா வரும்போது, அவர்களுக்கு இந்தக் கப்பலில் விருந்து வைப்பார். ரஷ்யாவின் அடையாளமாக இந்தக் கப்பலைக் காட்டுவதில் அவருக்குப் பெருமை. 

2014-ம் ஆண்டு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி கிரீமியா என்ற பகுதியை ரஷ்யா கைப்பற்றியது. அந்தப் போரில் ரஷ்யப் படைகளுக்கு அரணாக இருந்தது மாஸ்க்வா கப்பல்தான். இப்போதுகூட உக்ரைனின் மரியுபோல் நகரையும் துறைமுகத்தையும் கைப்பற்றுவதே இதன் முகாந்திரமாக இருந்து வந்தது. உக்ரைனின் ஒடேசா துறைமுகம் அருகே இருந்தபடி தாக்குதல் நடத்தியபோது, மாஸ்க்வா கப்பலில் இருந்து சீறிய ஏவுகணை ஒன்று, கப்பலின் மேல்தளத்திலேயே விழுந்து வெடித்தது என்கிறது ரஷ்யா. உடனடியாக கப்பலில் இருந்த 400 பேரையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்திவிட்டு, கப்பலைக் கரைக்குக் கொண்டுவர முயன்றனர். தீ மோசமாகப் பரவிய கப்பல், அலைகளில் தடுமாறி கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் தொடங்கியிருக்கிறது. 

 ஆனால், உக்ரைனோ இதை வேறுவிதமாகச் சொல்கிறது. "நாங்கள் மாஸ்க்வா கப்பலின் ரேடார் கண்காணிப்பை ஏமாற்றிவிட்டு நெப்ட்யூன் ஏவுகணைகள் மூலம் தாக்கினோம். அதில் கப்பல் அழிந்துவிட்டது" என்கிறது. "இதை உறுதி செய்ய முடியவில்லை" என அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் Snake Island பகுதிக்குள் நுழைந்தபோது அதன் கரையில் இருந்து உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் கப்பலை பார்த்து நடுவிரலைக் காட்டி உச்சரித்த வாசகம் உக்ரைனின் தேசிய முழக்கமாக மாறியது.

 உக்ரைன் அதிபர் அந்தச் சம்பவத்தின் நினைவாக உருவாக்கப்பட்ட தபால்தலைகளுடன் காட்சியளித்தார். உக்ரைனின் சாபத்தை சம்பாதித்தது இந்தக் கப்பல்தான். 

கப்பல் மூழ்கியதற்குக் காரணம் எதுவாக இருந்தாலும், இது உக்ரைனுக்கு ஒருவகையில் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. ரஷ்ய ராணுவத்துக்கு உளவியல்ரீதியாக பின்னடைவை இது கொடுத்துள்ளது. 

 ரஷ்ய ராணுவ நிபுணர்களோ, "இந்தக் கப்பலால் பெரிய இழப்பு ஏதுமில்லை" என்கிறார்கள். "தரைப்படைத் தாக்குதல், ஹெலிகாப்டர் மற்றும் போர் விமானங்களின் தாக்குதலே உக்ரைனில் பிரதானமாக நடக்கிறது. மாஸ்க்வா கப்பல் பெரிய அளவில் தாக்குதலில் இறங்கவில்லை. அதன் தாக்குதல் திறனும் முன்பு போல இல்லை. பழசாகிப் போயிருந்த அந்தக் கப்பலை இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் அழித்துவிடும் எண்ணத்தில் ரஷ்யா இருந்தது. இப்போது கப்பல் மூழ்கியது உக்ரைன் போரில் எந்தப் பின்னடைவையும் ஏற்படுத்தாது" என்கிறார் ராணுவ நிபுணரான அலெக்சாண்டர் க்ராம்சிக்கின்.


மாஸ்க்வா: நடுக்கடலில் மிதந்த ரஷ்யாவின் ஆயுதக் கிடங்கு... உக்ரைன் வீழ்த்தியதா, விபத்தினால் மூழ்கியதா? Reviewed by Author on April 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.